யாருக்கு குழந்தைகள் தினம்

யாருக்கு குழந்தைகள் தினம்?
பிஞ்சிலே பழுத்தது என பேர்
எடுத்த பத்து வயது சிறுசுக்கா?
அறுபதிலும் கள்ளம் கபடம்
அற்று வாழும் பெருசுக்கா?

ஏன் கொண்டாட வேண்டும் குழந்தைகள் தினம்?
எதற்கு வேண்டும் குழந்தைத் தனம்?
நீயா? நானா? நிகழ்ச்சி அல்ல வாழ்க்கை
அறிவை அரங்கேற்றம் செய்து அகம் மகிழ
அஃது அது? இது? எது? போல் கலகலப்பானது

அதில் கடவுள் தான் தொகுப்பாளர்
அவர் தரும் குழந்தைத் தனம் தான் ஆயிரம் புள்ளிகள்
அவர் நடத்தும் ஆட்டத்தின் இறுதி வரை குழந்தைத் தனம்
மாறாமல் காப்பவனே வெற்றி பெற்றவன்

ஆம் அவனே வெற்றி பெற்றவன்(முக்தி பெற்றவன்)
தோற்றவர்கள் மீண்டும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படலாம்
வென்றவர்கள் மீண்டும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுவதில்லை

எது குழந்தைத்தனம்? யார் குழந்தைகள் ?
வஞ்சகமோ நஞ்சகமோ கொண்டிரா...
சூதும் சூழ்ச்சியும் செய்ய பழகா..
வெள்ளையுள்ளம் கொண்டது குழந்தைத் தனம்..!

ஏமாற்றமோ துக்கமோ எதுவாயினும்
அந்த நொடியில் வாழ்ந்து
அடுத்த நொடியில் மறக்கும்
பாக்கியம் பெற்றது குழந்தைத் தனம்..!

புதியதை ஆர்வமாய் ஆராய்ந்து
கற்று, முயன்று தோற்றாலும்
மீண்டும் மீண்டும் எழும்
எண்ணம் படைத்தது குழந்தைத் தனம்..!

தீயை கண்டு அஞ்சுவது போல்
தீமை செய்ய அஞ்சுவதும் தான்
குழந்தைத் தனம்..!
இத்துணையும் கொண்டோர் தான்
குழந்தைகள்

குழந்தைத் தனம் இருக்க வேண்டியது
உருவத்தில் அல்ல உள்ளத்தில் தான்
உங்கள் உள்ளத்தில் இருக்குமாயின்
உங்களுக்கு எனது
குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

எழுதியவர் : புவனா (14-Nov-16, 3:13 pm)
பார்வை : 5871

மேலே