தத்தகிட தத்தகிட தத்தகிட தித்தோம்

இந்த தண்டவாளத்தில்
எந்த பயணமும்
இனிய பயணங்களென சொல்லாதீர்கள்

இந்த இடத்தை
கடந்து செல்லும் ரயில்களே
அந்த இருவரின்
மௌனம் களைக்காதீர்கள்

இந்த தண்டவாளத்தைப்
போலத்தான் வாழ்ந்தார்கள்
அந்த இருவரும்

நெடும் பயணங்களை
நேசித்தார்கள்
பெரும் கனவை மட்டும்
யோசித்தார்கள்
கூந்தல் சாதிக்காக
கழுத்து நரம்புகள் அறுபட்டு
ரத்தம் கொப்பளிக்கும் வரை

சதைகளும் ரத்தங்களுமாய்
சடலம் கிடந்த இடத்தை
நெருங்கும் போது

சன்னலை மூடி வையுங்கள்
காற்றெங்கும் சாதி கூந்தல்கள்
கூடவே ரத்த வாடையும் வீசலாம்

கடந்து போகும்
ரயில்களின்
அதீத அதிர்வில்
சட்டச் சடசட சட்டெனுடைபடு தாளங்கொட்டி
தண்டவாளம் உடைய உடைய
தொடங்கியது ஊழிக் கூத்து

தத்தகிட தத்தகிட தத்தகிட தித்தோம்
தத்தகிட தத்தகிட தத்தகிட தித்தோம்

- கோபி சேகுவேரா

எழுதியவர் : (20-Dec-16, 12:07 pm)
பார்வை : 125

மேலே