பால்யத்தின் ஓசைகள்
பால்யத்தின் ஓசைகள்.....
=========
என் பால்ய காலத்தில்
என்னோடு படித்த பெண்கள்
எங்கு போனார்கள்
என்று தெரியவில்லை.
சில வேளைகளில்
நான் அவர்களோடு சண்டையிட்டதையும்,
சொல்லாமல் காதலித்ததையும்,
தலைக்குக் கட்டும் றிப்பன்களை இழுத்துவிடுவதையும் நினைத்துப் பார்க்கிறேன்.
நேற்று பாடசாலை வாயிலைக் கடந்து போனேன்.
பகலில் வராத ஞாபகங்கள் அன்றைய இரவில் வந்து பழைய ஆர்வங்களை அபூர்வமாக மீட்டிவிடுகின்றது.
பள்ளி நினைவின்
விடுபடாத நியதிகள்.
"""
வகுப்பறை மொனிட்டர்..
சுவரில் ஒட்டப்பட்ட நேரசூசி..
முட்டுக்கால் தண்டனைகள்..
விஞ்ஞான வாத்தியார்..
ஒன்றுகூடலில் மீன்சந்தை சப்தம்.
புதிய அனுமதிகள்..
தீர்வுள்ள பஞ்சாயத்துக்கள்...
மையூற்றப்பட்ட கொம்பாஸ்..
ஆணி கழன்றோடும் கதிரைகள்..
இடைவேளை மணியோசை..
நறுமணம் வீசும் சொக்ஸ்..
காதல் கடைக்கண்கள்..
ஈயடிக்கும் ஐன்ஸ்டீன்கள்..
உஜாலா நீலத்தில் உடைகள்..
அரைக் காற்சட்டை..
இருபிரிவுக் கேங் லீடர்கள்....
சிலகாலம் வெள்ளை ஜீன்ஸ்....
நூலகத்தின் திண்ணை அரட்டை..
என்னிடம் கவிதை கேட்கும் காதலர்கள்....
பெண்ணுடைகளின் நேர்த்தி......
அங்கதன் தூதுப்படலம்....
பட்டப் பெயர்களின் ஒப்புரவு....
மூலிகைத் தோட்டங்கள்....
அட்டைக்கத்திச் சண்டைகள்....
சில்லறைகள் கிலுங்கும் கண்டீன்.
ராஜராஜசோழனின் படையெடுப்பு....
கரும்பலகையில் பொன்மொழிகள்.....
நிகழ்தகவாக நிகழும் கல்விச்சுற்றுலா......
திடீரென நிகழும் பூப்புனித நீராட்டு விழாக்கள்.....
சந்திக் கடைகளின் றேடியோவில் கேட்கும் பாடல்களும், யுத்த நிலவரங்களும்......
......
"""
தேங்காய்த் துருவல் போல
வந்து விழுகிறது பட்டியல்.
நாற்பது பேரை ஞாபகம் வைத்துள்ளேன்.
ஒருதலைக் காதலிகள் நான்கு பேரையும் சேர்த்து.
சில பெண்களுக்குத்
திருமணமாகியிருக்கலாம்.
சில பெண்கள்
புலம்பெயர்ந்து போயிருக்கலாம்.
சில பெண்கள்
உள்ளூரில் இருக்கலாம்.
சில பெண்கள் யௌவனம் தாண்டித் திமிர் பிடித்துத் திரியலாம்.
பல பெண்களோ
என்னை மறந்தும் போயிருக்கலாம்.
இந்த வரிகளை வாசியுங்கள். உங்களின் கனவுகளுடன் சேர்ந்து பயணித்த சகபயணி தான் நானென்றும் உணர்வீர்கள்...
பால்யத்தின் ஓசைகள் கேட்டால் இயற்கையான கண்ணீரை நீங்களாகவே உதிர்த்துக் கொள்ளுங்கள்......
-:பிற்குறிப்பு:- பள்ளி நினைவின் விடுபட்ட நியதிகளைப் புதிதாக இணைத்தும் கொள்ளுங்கள்.....
ஆண் நண்பர்களைப் பற்றிய கவலை அவ்வளவாக எனக்கு இல்லை.
காரணம்;
1. அவர்கள் ஆண்கள் என்பதனால்.
2. அவர்கள் எப்போதும் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதாலும்.
என் பால்ய காலத்தில்
என்னோடு படித்த ஆண் நண்பர்களுடன் சேர்ந்து
உங்கள் அழியாத நிழல்களை "இருளும் வெயிலும்" அண்டாமல் பெயர்த்துக்கொண்டிருக்கிறேன் சிற்பமாக்குவதற்காக....
==
By:::இரட்ணேஸ்வரன் சுயாந்தன்.