இன்றைய காதலர் தினம்

=========================
முடிதிருத்தும் கடைவாசல் எங்கும்
முட்டிமோதிய கூட்டம்
அவர்களுக்கான அதிக வருமானத்தை
ஈட்டிக்கொடுத்த நேற்று, இன்றைய
நாகரீகத்தை விபரமாக
எடுத்தியம்பியிருந்தது .

பூக்கடைகாரர்களை கொள்ளை
இலாபம் சம்பாதிக்க விட்டு
பிணத்துக்கு தட்டுப்பாட்டை
ஏற்படுத்திவிட்ட பூக்கள் எல்லாம்
தேவதைகளை அர்ச்சிக்க
தயாராகி விட்டன .

பற்பசை வியாபாரத்திலும்
கணிசமான் அதிகரிப்புக்குக்
காரணமாக கும்பகர்ணர்களும்
அதிகாலை எழும்பி பல்தேய்த்து
வாய் துர்நாற்றம் போக்கியிருததனை
குடும்பமே அதிசயமாய் பார்த்த
சம்பவங்களும் இடம்பெற்றிருத்தன .

காற்சட்டைக்கு மேலாகத்
தெரியவேண்டும் என்பதற்கான
உள்ளாடையும் கூட
சலவை முகம் பார்த்திருந்தன

கைபேசிக் கணக்கில் முழுதாக
நிரப்பபட்டப் பணத்தைப்போலவே
சார்ஜும் செய்யப்பட்டு
கண்காணிக்கப்பட்டுக் கிடக்கின்றது

அப்பனின் வங்கி அட்டைகளில்
களவாடப்பட்ட பணம்
மணி பர்சுகளில் பத்திரமாக்
பாதுகாக்கப்பட்டும் விட்டது

சமகால சினிமா ஹீரோக்களின்
சாயலையொத்த நடையுடை
பாவனைகளோடு நடமாடத் தொடங்கிய
ஆண் பிள்ளைகளைப்போலவே
தாயிடத்தே பொய் சொல்லிவிட்டு
ஹீரோயினிகளாக வெளியேவந்து
தேவதைகளாக மாறவும்
முனைந்திருந்தார்கள்..

I LOVE YOU என்ற வாசகத்தைப்
பாராயணம் செய்தபடி
காதலர் தேடும் வேட்டையில்
அம்புடன் அலைகின்ற சுகத்தில்
பழையன கழிதலும்
புதியன புகுதலுமான
ஒரு போகி பண்டிகையாகவே பார்க்கின்ற
இளசுகளின் இதயத்தில்
ஒரே சமயத்தில் பல மேடைகளில்
பேச இருக்கும் தேர்தல்கால
அபேட்சகர்களின் பரபரப்பான
நிமிடமாகவே கழியுமோ பலருக்கும்
இன்றில் காதலர் தினம்?

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (14-Feb-17, 3:03 am)
பார்வை : 406

மேலே