கற்றது கையளவு
காற்றை இசையாக மீட்டும்;- குழல்
கற்றது கையளவு காட்டும்
காற்றது கையளவில் தேனாம்;- நாம்
கற்றது கையளவு தானா(ம்)?
புல்லும் குழலாகப் பாடும் – மின்னும்
பொன்னும் அணியாகக் கூடும்
கல்லும் சிலையாக மாறும்;- நாம்
கற்றது கையளவு கூறும்
மண்ணே குடமாய்நீர் முகக்கும்;-அந்த
மண்ணே கடமாகி ஒலிக்கும்
கண்ணைக் கவரும்படம் சிரிக்கும்;- நாம்
கற்றது கையளவு குறிக்கும்
காணுஞ் செவிகேளார் மொழியாம்;- சைகைக்
கற்றது கையளவு வழியாம்
காண விழியில்லா நிலையில்;- தொட்டுக்
கற்றது கைஅளவு மொழியில்
கன்னி இடைஎன்ன கொடியோ?- அந்தக்
காமன் மதனேற்றுங் கொடியோ
கன்னி இடைஎன்கைப் பிடியில்;- சுகம்
கற்றது கையளவுப் பிடியில்
நூலால் அறிவளவு விரியும் –மதி
நுட்பம் பேச்சளவில் தெரியும்
காலால் அளக்குமடி அளவு;- நாம்
கற்றது (நம்)(பிக்)கை யளவு!
கற்றது கையளவு படிப்பு - நோயைக்
காட்டும் கைநாடித் துடிப்பு
கற்றது கையளவு தாங்க - அதைக்
கைபேசி தொடுதிரையில் காண்க
---------------------------------------------------------------------------------------
கைஅளவு மொழி- துளைஎழுத்து மொழி