கை நிறைய காசு -- புதுக்கவிதை

கை நிறைய காசு -- புதுக்கவிதை

கம்பர் சிறப்பு சான்றிதழ் ( 9 )


கை நிறைய காசிருக்க
கால் படும் இடமெல்லாம் தூசாக ,
பிறப்பிற்கும் இறப்பிற்கும்
இடையில் ஊசலாடும் வாழ்க்கை !!!

காசு - ஒரு காதலி பேசுகிற மொழி
செவிமெடுங்கள் எல்லோரும் .
பெண்ணைக் காதலிப்பவர்களை
விட என்னைக்
காதலிப்பவர்கள் தான் அதிகம் ;
பெண்ணைக் காதலித்தால்
அரவணைப்பு கிடைக்கும் '
என்னைக் காதலித்தால்
அரசாங்கமே கிடைக்கும் !!

" நான் பணம் பேசுகிறேன் ;
என் ஒரு வாய் திறந்தால்
நான் திருவாய் மலர்ந்தால்
உலகத்து வாய்கள் எல்லாம்
ஊமைகளாகி விடும் ;


நான் காகிதம் தான் - ஆனால்
எந்தக் காற்றிலும் பறக்க மாட்டேன் ;
நான் நினைத்தால் காற்றையே
என் காலடியில் கிடக்க வைப்பேன் !!!

வடிவத்தில் சிறியவன் - ஆனால்
வலிமையில் பெரியவன் ;
நிரந்தர வீடென்று
எனக்கெதுவும் கிடையாது ;
மத்திய வங்கி - என் தாய் வீடு ;
மண்டிக் கிடக்கும் மற்ற
வங்கிகள் - நான் புகுந்த வீடு ;
நான் அதிகம் போகும் வீடு
அம்பானி வீடு ;
ஆசைப்பட்டு வாழ நினைப்பதோ
ஒரு ஏழையின் வீடு ;
பத்திரமாய்ப் பதுக்கி என்னை
மறைத்து வைத்திருக்கிறார்கள் ;
அது என் சின்ன வீடு
புத்தகம் வாங்குவதற்கு
ஓடி வருகிறேனே -
இதுதான் நம்ம வீடு !!!!!!

பணம் - வெறும் காகிதமல்ல
சகலத்தையும் என்னிடம்
அடகு வைக்கிறார்கள்;
சிலநேரங்களில்
கலைமகளையே அடகு
வைக்கிறார்கள் ;
நானோ லெட்சுமி
சகோதரியை அடகு வைக்கும்
போது மட்டும் சங்கடப் படுவேன் ;
வெறும் காகிதம்
என்றென்னைக்
கணித்து விடாதீர்கள் ;
நானில்லை என்றால்
அரசு அலுவலகங்களில்
ஒரு காகிதமும் நகராது .
ஆம் ! கை நிறைய காசு !!!

ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (20-Jul-17, 9:53 pm)
பார்வை : 60

மேலே