மன்மதன் -கடிதங்கள் படித்தது
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
மன்மதன் சிறுகதை அற்புதம். கிருஷ்ணன் பாத்திரத்துக்கு அந்த பெயரை வைத்தது தற்செயலா அல்லது நுட்பமா? மன்மத தகனம், அதாவது மன்மதனை சிவன் எரிப்பதற்கு முன், எரித்த பின் என்று, இரு நிலைகள். எரிப்பதற்கு முன்பு மன்மதன் காமத்தின் வடிவம். எரிந்த பின் தூய அன்பின் வடிவமாக (அரூபமாக) , கிருஷ்ணனின் மகனாக பிறக்கிறான்.
கிருஷ்ணன் பாத்திரம் கதையின் தொடக்கத்தில் காமத்தின் வடிவமாக வருகிறது. மல்லியும் ராஜுவும் தூய அன்பின் வடிவமாக வருகிறார்கள். அவர்களின் தூய அன்பை உணர்ந்த பின், கிருஷ்ணனின் புற காமம் மெல்ல மெல்ல குறைந்து , எரிந்து தணிய , அக அன்பு வெளிப்படும் தருணத்தில் கதை முடிந்து விடுகிறது. கிருஷ்ணனின் பாத்திரம் இந்த மாற்றங்களை காண்பிக்கும் பாலமாக மிளிர்கிறது.
கால நதியில் சன்னி லியோன் போன்ற காம ரூபிணிகள் தோன்றி கொண்டே இருக்கிறார்கள். மன்மதன்களும் விசிலடித்து அம்பு விட்டபடி துள்ளி திரிகிறார்கள். வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் , நமக்குள் இருக்கும் மன்மதனை தகனம் செய்ய வேண்டியிருக்கிறது . அதன் பிறகு தெரிவதெல்லாம் அன்பு அன்பு அன்பு மட்டுமே.
அன்புடன்,
ராஜா.
சென்னை.
***
அன்பு ஜெ,
வணக்கம்.
நன்றிகள் பல தங்கள் “மன்மதன்” சிறுகதைக்கு.
என்ன அற்புதமான விவரணைகள்! பின்மதியப் பொழுதொன்றின் கூட்டமற்ற கோயிலை கண் முன்னே கொணர்ந்தது அற்புதம்.
“பொக்கணம்” இக்கதையின் மூலம் மீண்டும் அறிந்த பழைய (!) வார்த்தை. ஆண்டுகள் பல முன்னே, “தீட்சை ” பெற்ற உறவு தாத்தாக்களிடம் ஆசீர்வாதம் வாங்குகையில் காதில் விழுந்ததுண்டு.
கதையை படித்தபின் விவரணைகள் பல இருப்பினும், /தென்னை மரப் பறவை காற்றில் சறுக்கி குளக்கரை மதிலில் அமர்வது/ மட்டும் மனதில் ஏனோ ரம்மியமாய்! “சறுக்கி அமர்தல்” என்றுமே EFFORTLESS ஆக செய்யப்படுவது தானே!..கதையின் மையத்தை நீங்கள் கொணர்ந்தது போல..மல்லியே மன்மதனாகவும் ராஜூ ரதியாகவும்.கண்ணற்றவன் சிலையை விவரிப்பது உடலின்மையை உணர்த்தத்தானே..
இதை எழுதும் போதே, தங்கள் ஆந்திரப் பயணக்கட்டுரை ஒன்று ஞாபகம் வந்தது, “ருத்ரம்மா” என்ற கோயில் மற்றும் சந்திக்க நேர்ந்த பெண்ணை பற்றியுமான கட்டுரை அது.கரிய அழகு தானே அங்கும்!
பயணக்கட்டுரைகளில் வரும் விவரணைகள் படிப்பவர்க்கு பயண நிகர் அனுபவம் தருபவை.ஆந்திர கோவில் பயண அனுபவத்தில், நிழலுக்கு தீபம் காட்டும் சாயா சோமேஸ்வர் கோவில் சிறு பையனை இன்றும் மறக்க முடியவில்லை.
அதே போல், சீனுவின் “வேல்நெடுங்கண்ணி”. மையம் வேறு எனினும் களம் ஒன்றானதால் ஞாபகம் வந்ததோ? காரணம் தெரியவில்லை :)
ராஜாளி “சறுக்கி அமர்வதை”, என்றும் தாளப் பறப்பவை ஈடு செய்ய முடியாதல்லவே! (சீனு மன்னிக்க ..)
“எவ்வளவு முயலினும் புறத்தைக் கொண்டு அளக்க முடியாது.
புறத்தை விட அகப்பாய்ச்சல் கொண்டவன் முழுமை நோக்கி செல்லும் தூரம் அதிகம்” இதுவே நான் பெற்றது இக்கதையில்.
நன்றி தங்கள் நேரத்திற்கும் அன்புக்கும்
ரமணா சந்துரு