மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து

பிகாஷோவின் தூரிகைகள் துயில் கொள்ளும் போது,
நீ துயில் கலைந்து உன்னை நீயே தீட்டிய ஓவியமடி..
உலகில் அழகானவற்றை
அடுத்தடுத்து வரிசை படுத்த சொன்னாய்.
அணைத்திலும் உன் பிம்பம் தோன்றியதை யாரிடம் சொல்வேனடி..
தூவானமும்,மஞ்சள் வெயிலும்,
கடற்கரை ஒற்றை படகும்,
பாதையெங்கும் படந்திருக்கும் குறிஞ்சி மலரும்
உன் பாதங்கள் தீண்ட தவங் கொள்வதை என்னிடம் தூதுவிட்டு சொன்னதை நீ அறிவாயோயடி..
நீ இளவரசியாய் வீற்றிருந்த சிம்மாசனங்களை உடைத்தெறிந்து விட்டு என் ஓலைக்கீற்று குடிசையில் கரம் கோர்த்து மணம் புரிந்தாயடி..
கும்மிருட்டில் உயிர்த்தெழுந்த மின்மினிபூச்சி போல,
என் இல்வாழ்க்கையில் ஒளியேற்றினாயடி..
கொடியில் பூத்த கோடி மலர்களை உன் பூங் கையால் குழைத்து,
எனக்காய் அன்பெனும் சுகந்தத்தை கொடையாய் கொடுத்தாயடி..
நூலிழை கயிறுமின்றி,
ஒய்யார கிளையுமின்றி,
ஆகாய ஊஞ்சலில் உற்சவம் பயணம் போல் என்னுள் வந்து பிரமிப்பூட்டினாயடி..
என் கடும் சொற்கள்,காய வடுகள் எல்லாம் நீ சுமைதாங்கி,
உன் மகிழ்ச்சியை நீர்க்குமிழில் உடைத்து கொண்டாய் எனக்காகடி..
நெஞ்சில் என்னை சுமந்து,
கருவில் நம் சிசு சுமந்து,
சுமைதாங்கி கல்லும் நெகிழ்ந்து போகும்டி உன் சுமை கண்டு.
உன்னருகில் இல்லையெனினும் உனக்குள் நான் இருப்பது போல்,
உன்னை நினைக்கும் போதெல்லாம் என்னுள் நீ தினம் தினம் புதிதாய் பிறக்கிறாயடி..

எழுதியவர் : சையது சேக் (14-Sep-17, 5:55 pm)
பார்வை : 293

மேலே