புது உயிர் படைத்திடும் நீல உருண்டை

உலகே! நீ உருளும் பூப்பந்தோ!
மகரந்த சேர்க்கையில்
புது உயிர் படைத்திடும் நீல உருண்டை!

இருளின் மடியில் உன்னை குளிர்வித்து
வெளிச்சத் தூரலில் உன் சோம்பல் முறித்து
தினுசு தினுசு உயிர் பிரளயமாய் உருகி
உருவாகிக் கொண்டிருக்கிறாய்.

பிறப்பும் இறப்பும்
இங்கு ஆற்றல் மாற்றங்களே!
அறிவும் உணர்வும்
முன்னோக்கிய பயணத்தின் தோழர்களே!

உலகைஅறிவு ஆள்கிறது எனும் மாயையை
அணுகுண்டுகள் தகர்த்தெறிகின்றன.
உணர்வில் ஒன்றிணைய முடியாதா
எனும் கனவை
பாசக்கயிறு அறுத்துவிடுகிறது.

இப்பூப்பந்தின் வருடல்கள்
நம் ஒவ்வொருவரின்
நெஞ்சிலும் நினைவிலும்.
படைப்பின் உச்சாணிக்கொம்பில் ஒருசிலர்.
அழிவின் அசகாய சூரர்களாய் மற்றும் பலர்.
சமன் செய்து கொள்கிறார்கள்.

எனினும் இப்பூப்பந்து
தன்னை சிலிர்ப்பிக் கொள்கிறது
எரிமலையாய், சுனாமியாய், பூகம்பமாய் ... ... ...
(இவை யாவும் மறந்துபோகின்றன)
..... ..... .....
அவ்வப்போதுவீசும்
பூந்தென்றலால்.
-ஜான் பிரான்சிஸ்.

எழுதியவர் : ஜான் பிரான்சிஸ். (4-Oct-17, 11:23 am)
பார்வை : 137

மேலே