நவீனக் காதல் கவிதைகளின் பன்முகங்கள்------------------நமுருகேசபாண்டியன்
காதல் விநோதமானது; கவர்ச்சியானது. மாயமான முறையில் மனித குலத்தின் மீது நிழலாகப் பற்றிப் படர்ந்திருக்கிறது. பதற்றம், ஏக்கம், விழைவு, தவிப்பு, காத்திருப்பு, சீற்றம், கொந்தளிப்பு, கோபம், பயம், மயக்கம் எனப் பல் வேறு உணர்வு நிலைகளில் காதல் ஏற்படுத்தும் அனுபவங்கள் நுணுக்கமானவை. வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்தே காதல் என்னும் மர்ம ஆறு சுழித்-தோடிக் கொண்டிருக்கிறது. காதல் என்ற சொல்லுக்குள் புதைந்திருக்கும் பிரமாண்டமான ஆற்றல், சமூகத்தை உயிர்ப்புடன் இயங்கச் செய்கிறது. புராதன மனிதனின் மூளையை இயக்கிய காதல் ஒருவகையில் சித்தப் பிரேமைதான். சமூக வரலாற்றினைப் புரட்டிப் போடவும், வன்முறையாளரை அமைதிப்படுத்தவும், எளிய மனங்களை மனப் பிறழ்விற்குள்ளாக்கவும், பேரரசை வீழ்த்திடவும், மென்மையானவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கவும், ஆற்றல் மிக்க காதல் ஜீவ ஆறு போல எல்லா தேசங்களிலும் பொங்கியோடிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை என்னும் இயந்திரத்தின் செயல்-பாட்டினைத் துரிதப்படுத்தும் காதல் பற்றிய புரிதல், தமிழர்களைப் பொறுத்தவரையில் சங்க காலத்திலே தொடங்கிவிட்டது. சமூக இருப்பினைத் திணைசார் வாழ்க்கையாக அவதானித்த நிலையில், அகத்திணை காதலை முழுக்க மையமிட்டு விரிந்துள்ளது. பிரிவு- காத்திருத்தல் என்ற இரு வேறு ஆதார உணர்ச்சிகளின் வழியாகப் புனையப்படும் ஆண்& பெண் உறவின் அடிப்படையாகக் காதல் உள்ளது. காதலைப் பற்றி உணர்ச்சி வயப்படும் கவிஞர்கள் நிரம்பிய தமிழ் மரபு இன்றும் தொடர்-கின்றது.
அதேவேளை, புற வாழ்க்கையில் உடல், பால், சாதி, சமயம் போன்ற வேறுபாடுகளினால் காதல் தொடர்ந்து கண்காணிப்பிற்-குள்ளாகியுள்ளது. வைதிக சமயம் ஏற்படுத்திய அதிகாரத்தினால் காதலுக்கு ஏற்படுத்தியுள்ள சேதங்கள் அளவற்றவை. எனினும் Ôகாதல் காதல் காதல்/காதல் போயின்/சாதல் சாதல் சாதல்Õ என முழங்கிய பாரதியாரின் புனைவு மனம் கொண்டாட்டமானது.
பால் ஈர்ப்பின் காரணமாக ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் உடல், மன ரீதியில் தோன்றும் விழைவினைக் காதல் எனப் பொதுவாக வரையறுப்பது இன்று மறுபரிசீலனைக்குள்ளாகியுள்ளது. 1990களுக்குப் பின்னர் உலகமயமாக்கல் ஏற்படுத்தியுள்ள பண்பாட்டு நெருக்கடிகளில் காதலும் சிக்கியுள்ளது. வரலாற்றுப் பழமையும் புராதனப் பெருமையும் மிக்க தமிழர் வாழ்க்கை இன்று ஒற்றைப் போக்கினால் தகவமைக்கப்-பட்டுள்ளது. உயரமான உருவம், சிவந்த மேனி, பளபளக்கும் தோல் எனப் புனையப்படும் பெண் பற்றிய அழகு, வணிகக் கம்பெனிகளின் நலன் சார்ந்தது. பெண்ணுடல் என்ற நிலையில் அதைப் புறக்கணித்த பண்டைத் தமிழர் மனப்பான்மையில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது பெண்ணுடல் முழுக்க நுகர்வுப் பொருளாக உருமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. வண்ணமும் மினுமினுப்பும் கலந்த நிலையில் கவர்ச்சியான, பெண் உடல்களை உருவாக்கிடும் சூழலில், காதல் பற்றிய கருத்துகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இளம்பெண்ணைப் பார்த்தவுடன் இளைஞன் ஒருவனின் மனதில் தோன்றும் ஏக்கமும், அதுபோல அப்பெண்ணின் மனதில் தோன்றும் விருப்பமும் காதல் எனப்படுகிறது. ஆணோ பெண்ணோ, ஒருவர் மனதில் மட்டும் காதல் அரும்பினால் அது ஒருதலைக்காதல் எனப்படும். வன்முறையால் பெண்ணைக் கவர்ந்து சென்று அவளிடம் காதல் விருப்பத்தைத் தெரிவிப்பதைக் காதல் என்று சொல்ல வாய்ப்புண்டா? தெரியவில்லை. காதல் வயப்பட்ட இளைஞனும், இளம் பெண்ணும் திருமணத்திற்கு முன்னர் உடலுறவு கொண்டால், 'அப்படியா?' என்று கேட்கக் கூட சங்க காலத்தில் யாருமில்லை. ஒத்த மனமுடைய ஆணும் பெண்ணும் துய்க்கும் பாலியல் இன்பத்திற்குப் பண்டைக்காலத்தில் சமூகத் தடை எதுவுமில்லை. இந்நிலையில் காதலுக்கும் உடலுறவுக்குமான தொடர்பினை ஆராய வேண்டியதில்லை. திருமணம் முடியும் வரை எவ்விதமான தொடுதல் அல்லது பாலியல் உறவு இல்லாமல் புனித உடல்களைக் கட்டமைப்பது எந்தக் காலகட்டத்தில் வலியுறுத்தப்பட்டது என்பது புலப்படவில்லை.
காதல் என்ற ஒற்றைச் சொல்லின் அர்த்தம் விரிந்து கொண்டிருக்கும் இயல்புடையது. காதலுக்கு வயது பொருட்டல்ல; திருமணம், இலக்கு அல்ல. எல்லா கால கட்டங்களிலும் காதல் வயப்பட்ட மனநிலை வாய்ப்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சாத்தியமே. இன்று மூன்றாம்பாலினரின் குரல் ஓங்கி ஒலிக்கும் நிலையில் ஓரினக் காதல், அரவாணிக் காதல் முன்னிலைப்படுத்தப் படுகின்றன. உடலினால் ஆணாகவும், மனதினால் பெண்ணாகவும் வாழும் உயிருக்குச் சக ஆண் மீது ஏற்படும் காதல் உக்கிரமானது. பெண்ணுக்கும் பெண்ணுக்குமிடையில் தோன்றும் காதலும் வலுவானது. ஓர் இளம்பெண் ஒரே நேரத்தில் இரு இளைஞர்கள் மீது காதல் கொள்ளுதல், ஒரு இளைஞன் ஒரே நேரத்தில் இரு இளம்பெண்களைக் காதலிப்பது என நவீன வாழ்க்கையில் காதலின் முகங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. காதல் வயப்பட்ட நிலையில் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில், காமமும் காதலும் ஒருங்கிணைகின்றன. காமம் அற்ற காதல் மொன்னைத்தனமானது. காதல் அற்ற காமம் வறட்டுத்தனமானது. மனித மனத்திற்கு மிகவும் நெருக்கமான காதல், காலந்தோறும் கவிஞர்களின் மனதில் சலனங்களை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறது. இதனால்தான் காதலிக்க முனையும் காதலர் நாளடைவில் கவிஞராக மாறுகின்றனர்.
நவீனத் தமிழ்க் கவிதையானது சி.மணி, எஸ். வைத்தீஸ்வரன் எனத் தொடங்கிக் கலாப்ரியாவில் புதிய பரிமாணம் பெற்றது. கலீல் ஜிப்ரான். உமர் கய்யாம், தாகூர் போன்ற கவிஞர்களின் காதல் கவிதைகளின் தாக்கம் எழுபதுகளில் கூடத் தமிழில் இருந்தது. 1982-இல் 'மழை வரும் வரை' என்ற அழகிய தொகுப்பின் மூலம் அறிமுகமான கௌரி ஷங்கர், காதலின் புனைவுகளை உருக்கமான மொழியில் பதிவாக்கியிருந்தார். 'தாகம் நெஞ்சைப் பிளக்கும்போதும், மழை வரும்வரை காத்திருக்கும் சாதக பட்சி பற்றி அறிவாயா நீ' என்ற ஷங்கரின் வசனக் கவிதையில், மனம் அறுபட்ட பல்லி வாலெனத் துடித்தது.
இன்று 'காதல்' என்ற சொல் குறிப்பாக மாறிவிட்டது. சில வேளைகளில் அது காதலையும் குறிக்கின்றது. ஆண், பெண் பற்றிய சமூக மதிப்பீடுகளின் மாற்றம், ஊடகங்களின் பெருக்கத்தினால் வாடி வதங்கித் தட்டையாகிவிடும் உடல்கள், குடும்பத்திலிருந்து மனரீதியில் வெளியேறிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறை... எனச் சூழலில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காதல் பற்றிய கனவுகளைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன.
நுகர்ப்பொருள் பண்பாட்டிற்குப் பழக்கப்பட்டுவிட்ட நிலையில், காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறிப் பொருளாதார நிலையில் சிரமப்பட்டு வாழ்வது, காதலுக்காக உயிரைத் துறப்பது, காதலுக்காக கை நரம்பினை அறுத்துக் கொள்வது... ஒரு நிலையில் மடத்தனமாகிவிட்டது. காதலித்த பெண்ணைக் கைவிட்டுச் செல்லும் இளைஞன், தான் விரும்பிய பையனை அடைவதற்காகப் பொய்யாகப் புகார் சொல்லும் இளைஞி எனக் காவல் நிலைய வாயிலில் 'காதல்' தவித்துக் கொண்டிருக்கிறது. சரி, போகட்டும்.
நவீனத் தமிழ்ப் பெண் கவிஞர்கள் காதலைப் பற்றி நுட்பமாகச் சித்தரித்துள்ள வரிகள், புதிய உலகினை அறிமுகப்படுத்துகின்றன. லீனா மணிமேகலையின் 'தீர்ந்து போயிருந்தது காதல்', பெண் மனதின் விகாசத்தை நுட்பமாகப் பதிவாக்கியுள்ளது.
திடீரென்று உன் நினைப்பு
பற்றிக் கொண்ட நெருப்பாய்
ஈரமாய்
உலர்வாய்
இன்னும்
என்னென்னவெல்லாமோ
...
இறுதியில் வந்தாய்
நீ அணைத்துக் கொண்டது
கசகசப்பாய் இருந்தது
தீர்ந்து போயிருந்தது காதல்
அன்றாட நடப்பு வாழ்க்கையானது அலுவலகம், டிராஃபிக், வீடு, சமையல், காத்திருத்தல் என விரியும் நிலையில், காதல் என்பது சமையல் கியாஸ் போலத் தீர்ந்து போகும் சாத்தியப்பாட்டினை எளிய வரிகள் பதிவாக்கியுள்ளன. சங்க காலம் தொடங்கி, வீட்டில் 'காத்திருத்தல்' பெண்ணின் இயல்பு என்ற கற்பிதத்தை சிதைக்கின்ற இக் கவிதை, வாசிப்பில் கிளர்த்தும் கேள்விகள் ஆழமானவை.
மரபு வழிப்பட்ட வாழ்க்கை சிதலமாகிக் கொண்டிருக்கும் சூழலில், கவிஞர் ரத்திகாவின் கவிதை, காதலனை அகதியாக்கிவிட்டது. 'இதெல்லாம் சகஜம்' என்ற நிலையில் விரியும் வரிகளில் வேதனை எதுவுமில்லை.
உன்னை
எந்த அறைக்குள் பூட்டுவதெனத் தெரியாமல்
ஒவ்வொரு அறையாய்
மாற்றிக் கொண்டே
இறுதியில்
ஒரு அகதியைப் போல் வெளியேற்றுகிறேன்.
சொந்த மண்ணில்
இப்போதெல்லாம்
நிகழ்வது இதுதான்
எந்தவொரு பிரச்சினையும் இல்லை. சொந்த மண்ணில் இதுதான் நிகழும் என்ற புரிதலோடு காதல் வயப்பட்டவள், அவனை அகதியைப் போல வெளியேற்றுகிறாள். காதலின் இன்னொரு பக்கம் நவீனக் கதையாகி உள்ளது.
மைதிலியின் 'போய் வருக' கவிதை வரிகள் நுணுக்கமாகக் காதல் விழைவைச் சித்தரித்துள்ளன. முன்னொரு காலத்தில் சேர்ந்திருந்தோம் என்ற நினைவின் தடத்தில், பிரிவின் வலிவைச் செறிப்பது நவீனப் பெண்ணுக்குச் சாத்தியமாகியுள்ளது. மற்றபடி புலம்பல், ஏக்கம், தவிப்பு, அழுகை போன்றவை அர்த்தமிழந்த சொற்களாக மாறி விட்டன.
ஒரு குறைமாதச் சிசுவின் அசைவென
அவன் நினைவு
...
அன்பே
நாம் இணைதல் அசாத்தியம்
மணலில் பதிந்த சுவடுகளனைத்தையும்
காற்று கௌவித் தின்னட்டும்
எஞ்சியவை-
ஒரு சொல்
ஒரு முத்தம்
மலரினும் மெல்லிது எனப் புனையப்படும் காதலின் விளைவான துணையுடனான பிரிவினைக் காற்று போல எளியமுறையில் எதிர்கொள்ளும் மனம், இன்றைய உலகின் புதிய வெளிப்பாடு. காலந்தோறும் காதலின் காரணமாகப் பிரிவின் வலியை முன்னிறுத்தி இலக்கியப் படைப்புகள் அரற்றிய பெருங்குரலை, நவீன மனம் புறக்கணிப்பது 'போய் வருக' என்ற தலைப்பின் மூலம் பதிவாகியுள்ளது. இரவில் சலனமற்றுக் கரையும் காதல் பற்றிய மைதிலியின் வரிகள் நுட்பமானவை.
காதல் என்பது விழிகளின் வழியே ஊடாடி, வெளியில் விரிந்த என்ற புனைவு தரும் சுகத்தில் மயங்கும் வேளையில்,
விஷப் பாம்பொன்று
என் மீதேறி
நிதானமாக
கடந்து போகிறது
புரிதலற்ற - உன்
பார்வைகளைச்
சந்திக்கும் பொழுதெல்லாம்
என்ற அ.வெண்ணிலாவின் கவிதை வரிகளை எப்படி அர்த்தப்படுத்துவது என்ற கேள்வி தோன்றுகிறது. புரிதல் என்று ஒற்றைச் சொல்லின் வழியாகப் பார்வை, எதிராளியிடம் உருவாக்க விரும்புவது வேறு ஒன்று. புரிதலற்ற நிலையில் எதிர்பாலினர் குறித்து ஏன் ஈடுபாடு கொள்ள வேண்டும்? 'அவன் பார்வையே மோசம்' என்ற ஆய்வினூடாகவே அவளுக்குள் எதிர்நிலையில் கிளர்ந்திடும் அனுபவங்களும் காதலின் இன்னொரு பக்கம்தான். வெறுப்பின் மூலம் நெருங்கிச் செல்வது என்பது உளவியல்ரீதியில் ஆராயப்பட வேண்டியது.
வாழ்க்கைப் பரபரப்பில் ஒவ்வொருவரின் நெருங்கிய நண்பர்களும் காதலர்களும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றனர். பதின்பருவத்தில் மனதுக்குள் அடக்கி வைத்த காதல் உணர்வுகளுடன் கடந்துபோன பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கைக்குக் கணக்கேது? 'தொடுவானம்' போல தெரியும் கானல் வெளியில் நினைவின் வழியே பறக்கும் காதலுக்கு வயது, மரியாதை, பணம் என எதுவும் தேவையில்லை.
வேதனையுடன் மறைந்து சென்றும்
பார்த்துவிட்டாய் நீ!
யாரோ போல் முகம் திருப்பியபோது
ஞாபகம் வந்தது . . .
உன்னோடு மணிக்கணக்கில்
பேசிய நாட்களும்
வெயில்படாமல் நீ என்னை
மறைத்து நின்றதுவும்
எளிய வரிகளில் மு.சத்யா விவரிக்கும் உணர்வு, எந்த நிலையிலும் காதல் உணர்வு மனதில் கொப்பளிக்கும் என்பதை வலியுறுத்துகிறது. யோசித்துப் பார்க்கையில் இன்று வாழ்ந்திடும் வாழ்க்கை யாருக்குச் சம்மதம் என்ற கேள்வி தோன்றுகிறது. இக்கவிதையில் வெளிப்படும் பெண் திறமையான நிர்வாகியாகவும், அற்புதமான குடும்பத் தலைவியாகவும் இருக்க வாய்ப்புண்டு. எனினும் இன்றைய கணத்தில், அவள் கடந்து வந்த வாழ்க்கைத் தடம் ஏற்படுத்தும் பாதிப்பு முக்கியமானது. ஒரு புள்ளியில் மொட்டென அரும்பிய காதல், இறுதிவரை மனதின் பக்கங்களில் சிறகடிக்கும் என்ற மு.சத்யாவின் கவிதை, பிரிவினை மீறி மனித இயல்பினைச் சித்தரித்துள்ளது.
காதல் என்ற சொல்லின் எதிரிணையாகக் 'கள்ளக்-காதல்' என்ற சொல்லைப் பிரயோகிப்பது வழக்கினில் உள்ளது. அன்பு வயப்பட்ட இரு உள்ளங்களுக்கிடையில் தோன்றும் பாலியல் சார்ந்த விழைவு என்பது காதல்தான். எனினும் குடும்பத்திற்கு வெளியே எதிர்பாலினரிடம் தோன்றும் விருப்பம் 'கள்ளக்காதல்' எனக் கேவலமாகப் பேசப்படுகிறது. எல்லாவிதமான சமூகத் தடைகளையும் மீறி ஒத்த கருத்தும் அன்பும் மிக்க ஆணும் பெண்ணும் கொள்ளும் காதல் பற்றிய மாலதியின் கவிதை, தமிழ்ப் பண்பாட்டில் முக்கியமானது.
சோரம் மிகப் புனிதமானது
ஏனெனில் பணம் பத்திரங்கள் துச்சம் அதில்
பிறிதும் கண்மூடிக் காதல்
அதில்தான்
...
திறந்த முழு சரணடைவு
அதில்தான்,
அன்புடை நீ! மாசுபடுத்தாதே இதை.
இன்னொரு திருமணமாக்கி இதையும்.
Ôசோரம்Õ என்ற தலைப்பிலான இக்கவிதையின் மூலம் மாலதி உணர்த்த விரும்பும் காதல் பற்றிய மதிப்பீடுகள் விவாதத்திற்குரியன. திருமணம் என்ற உறவு, சோரம் என்ற செயல் என்ற இருவேறு நிலைகளின் ஊடே, காதல் என்ற அளவுகோலில் சோரம் அல்லது கள்ளக்காதல் புனிதமான நிலையை அடைவது தற்செயலானது அல்ல. அதிகார மையமாகிப்போன நிறுவனத்தின் ஆதிக்கத்தினுக்கு மாற்றாக இரு அன்புடை நெஞ்சங்களை மட்டும் முன்னிறுத்தும் கண்மூடிக் காதல் ஒருவகையில் கொண்டாட்டம்தான்.
பெண் கவிஞர்களின் பிரச்சினைகளை ஒப்பிடும்போது, ஆண் கவிஞர்களின் பாடு திண்டாட்டம்தான். எல்லாவிதமான நம்பிக்கைகளும் அடையாளங்களும் சிதைவடையும் சூழலில், ஊடகங்கள் தகவமைக்கும் மனவெளி மனிதர்களாக உருமாறும் ஆண், தறிகெட்டு அலைய நேரிடுகிறது. 14 வயதில் பாலியல் விழைவுக்குத் தயாராகும் ஆண் உடலைக் குறைந்தது பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் வாடி உலர்ந்த தக்கையாகிவிடும் சூழலின் வெக்கை அளவற்றது. இன்னொருபுறம் காமம் என்பது சிற்றின்பம், எனவே புலன்களை அடக்கியொடுக்குதல் சிறந்தது என்று மதம் ஏற்படுத்தியிருக்கும் போதனை கொடுமையானது. உடலில் இயல்பாகத் தோன்றும் விழைவின் காரணமாக நவீன இளைஞர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் ஏராளம். பெரியோர் ஏற்பாடு செய்யும்வரை உடலை அடக்கியொடுக்கி வாழ்ந்திட நிர்ப்பந்திக்கப்படும் இளம் உடல்கள், திருமணம் முடிந்தவுடன் முன்பின் அறிமுகமில்லாத-வருடன் உடலைப் பகிர்ந்து கொள்வது சாதாரண விஷயம் அல்ல. சாதி, சமயம், பொருளியல் ஏற்றத்தாழ்வு எனப் பல நிலைகளில் அடக்கியொடுக்கப்பட்ட மனங்கள் நாளடைவில் கொண்டாட்டங்களை இழந்துவிடும். அப்புறம் எங்கே காதல்?
லக்ஷ்மி மணிவண்ணனின் 'மறைந்து கொள்கின்ற எனக்கான பெண்' கவிதை வரிகள் காதல் பற்றிய புதிய திறப்புகளை உருவாக்குகின்றன.
எனது பெண்ணைக்
கண்டுபிடிக்க முடிவதில்லை
அவள் எல்லா பேருந்து நிலையங்களிலும்
என் கண்களில் படாமல் ஒளிந்து கொள்கிறாள்
அவளைத் தேடிச் சலித்த கண்களில்
முலைகளும் பிருஷ்டங்களுமே
படுகின்றன.
கனவுலகவாசியின் குறிப்பென விரியும் கவிதையில் தூய ஆன்மாவினை உடைய பெண்ணைத் தேடும் கவிஞரின் வேட்கை வெளிப்பட்டுள்ளது. அவருக்குள் பொங்கும் காதல் கபடமற்றது; பளிங்கு போன்றது. பேரண்டத்தின் அழகு சொட்டும் ஆன்மாவாக மிளிரும் காதல் பெண் குறித்த விருப்பம் அளவற்று விரிகின்றது. பெண் என்றால் முலை, யோனி, பிருஷ்டம் என்ற பால் அடிப்படையிலான பார்வைக்கு அப்பால், மணிவண்ணன் கண்டறிய முயலுவது காதலின் வழியாக வேறு ஒன்று. ஆதித்தாய், மோகினி, நீலி, சூலி எனப் பெண்ணைத் தேடுகிறாரோ என்னவோ?
தன் உடலில் தோன்றும் காமத்தை அறிதல் என்பது பேறுதான். காமம் என்பது மாயப்புனைவு போல் கற்பிதம் செய்யும் சமூகச் சூழலில், காதல் மூலம் காமத்தைக் கண்டறியலாம். உடலின் வேட்கையைப் பதிவாக்கியுள்ள மனுஷ்ய புத்திரனின் 'இணக்கம்' கவிதை வாசிப்பில் தரும் அனுபவம் நெருக்கமானது.
இன்று நான்
முழுக்க முழுக்க
காமத்தால் நிரம்பியிருக்கிறேன்
அவ்வளவு
இணக்கமாக இருக்கிறேன்
இந்த உலகத்தோடு
'தன்னை அறிந்தாலே இறைவனின் தாளினை அறிய முடியும்' என்ற மதக் கொள்கையைத் தன் காமம் அறிதல் என மாற்றிக் கொள்ளலாம். மனித இருப்பு, காமம் சார்ந்தது என்பதைத் தன்னுடல் வழியே கண்டறிய முயலும் கவிதை வரிகள் அற்புதமான பதிவுகள்.
காதல் ஏற்படுத்தும் அலைக்கழிப்பு, வேதனை, ஏக்கம் போன்றவைகளுக்கு அப்பால் சங்கர் ராமசுப்ரமணியன் அமைதியான வழியில் காதலைக் கடக்க முயலுகிறார்.
நீ பிராயத்தைக் கரையவிட்ட
அதே நதியின் கரையில்தான்
உன் மகளும் அமர்ந்திருக்கிறாள்
அமைதியாக
ஆற்று வெள்ளம் அழிந்தோடுவது போல, மனம் வழியே கடந்து போகும் காதலைச் சொல்லியுள்ள கவிஞருக்குக் காதல் குறித்து எவ்விதமான பிராதும் இல்லை. ஏகாந்த நிலையில் காதல் பற்றிய பதிவுகள் வரிகளில் மௌனமாக உறைந்துள்ளன.
'காதல் என்பது ஒருமுறை, ஒருவரிடம் மட்டும் ஏற்படும் புனிதமான உறவு' என்ற புனைவை வீணாகச் சுமந்து திரியும் தமிழர் வாழ்க்கையில் செல்மா பிரியதர்ஸனின் வரிகள் அதிர்வை ஏற்படுத்துகின்றன. வழமையான ராதா-கண்ணன் என்ற பிம்பங்களின் மூலம் 'காதல் ரசம்' சொட்டக் கவிதை எழுதியுள்ள செல்மாவின் வரிகளில் புனைவு ததும்புகிறது.
கண்ணன் தன் தோழர்களுக்குச் சொல்கிறான்
ராதா இப்பொழுது வந்து விடுவாள்
கண்ணன் ஒன்றும் அவ்வளவு சுயநலக்காரனல்ல
தனது தோழர்களில் சிலரும்
ராதாவுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதை
அறியாதவனும் அல்ல
வீட்டு முற்றங்களில் சாலையோரங்களில் தியேட்டர் இருளில்,
போக்குவரத்து சிக்னல் விளக்குகளின் கீழ்
இன்னும் பலரும் ஆங்காங்கே பதுங்கியிருக்கிறார்கள்.
...
ஒரே நேரத்தில் உங்களுக்காகவும் எல்லோருக்காகவும்
தனித்தனியே தோன்றி
காதலை வழங்குபவள்தான் ராதா
பார்வையாளராகிய நீங்களும் அறிந்தேயிருக்கிறீர்கள்.
ஒவ்வொரு ஆணும் கண்ணன் ஆகவும் ஒவ்வொரு பெண்ணும் ராதா ஆகவும் உருமாறும் வேளையில் காதல் வெளியெங்கும் பரவுகிறது. ராதாவின் மீது கண்ணனுக்கு ஏற்படும் காதல்தான் முதன்மையானது. நவீன உலகில் கண்ணன்கள் எண்ணிக்கை பெருகும் வேளையில், ராதாவினால் என்ன செய்யவியலும்? புராண ராதா போல கண்ணனை மட்டும் நினைத்து உருகுவது நவீன ராதாவுக்குச் சாத்தியமில்லை. ராதா என்ற பிம்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து அக்கறை கொள்ளும் கவிஞர் செல்மா உருவாக்கிடும் காதல் பற்றிய புனைவு சுவாரசியமானது. இன்றைய உலகில் கண்ணனுக்கும் பிரச்சினை இல்லை, ராதாவுக்கும் பிரச்சினை இல்லை. ஆனால் காதல் மட்டும் கோப்பையிலிருந்து நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. கண்ணனுக்கு ஒரு ராதை மட்டும் போதாது போல, ராதாவுக்கும் ஒரு கண்ணன் போதாது என்ற உண்மையைச் சொல்லும் கவிதை வரிகள் மரபு வழிப்பட்ட மனங்களுக்கு வருத்தத்தைத் தரலாம். ஆனால் வேறு வழி?
நவீனக் காதல் கவிதையில் அப்பாஸ் முக்கியமான திருப்புமுனை. மரபு வழிப்பட்ட 'காதல்' என்ற சொல்லாடல் அர்த்தமிழந்து கொண்டிருக்கும் நவீன வாழ்க்கை முரணை அப்பாஸ் நுணுக்கமாகப் பதிவாக்கியுள்ளார்.
அடிக்கடி நாம் கூறிக்கொள்கிறோம்
அவசரப்பட்டு விட்டோம்
இன்னும் யோசித்து இருக்கலாம்.
கொண்டாட்டத்தின் மறுபக்கம் காதல். ஒவ்வொரு நொடியிலும் கொப்பளிக்கும் குதூகல உணர்வுகளும் உடல்களின் பரஸ்பர விழைவுகளும் என மிளிரும் காதல், சலிப்பை ஏற்படுத்தினால் என்ன ஆவது? துடிக்கும் மனத்துடன் பேராசையுடன் ஒருவரையொருவர் காதலித்த இருவரும் நாளடைவில் 'அவசரப்பட்டு விட்டோம்' என யோசிப்பது கவிதையை வேறு தளத்திற்கு மாற்றுகின்றது. சாகச மனநிலையுடையவர்களுக்குக் காதல் என்பது, ஒருநிலையில் பொட்டலத்தை அவிழ்த்தது போல் ஆகிவிடும். காதலுக்காகக் காலந்தோறும் ஏங்கியலைந்தது போக, நெருக்கமான பின்னர் அவசரப்பட்டு விட்டோமா என மறுபரிசீலனை செய்வதும் விநோதமானதுதான். நவீனக் காதலின் சூட்சுமத்தைக் கண்டறிந்த அப்பாஸின் காதல் கவிதைகள் புதிய போக்கினை முன்னிறுத்துகின்றன.
மகாதேவனின் காதல் கவிதைகள், இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தில் அழுத்தமான முறையில் கேள்விகளை எழுப்புகின்றன.
தலைவாரி பூச்சூடி மையிட்டு
நீ
காத்திருப்பது உன் கணவனுக்குத்தான் என்றாலும்
மெல்ல மெல்லப் படியேறி வரும்
என்னைக் கண்டும் சிலிர்க்கிறாய்.
'மலரினும் மெல்லிது காதல்' என்ற வரிகளுக்கு எடுத்துக்காட்டாக இக்கவிதை வரிகள் மனித மனத்தின் இடுக்குகளில் பயணிக்கின்றன. காதல் பற்றிய அதிகார மையப் புனைவுகளுக்கு மாற்றாக ஒவ்வொரு உயிரும் தனித்துவமான நிலையில் கொள்ளும் காதல் அபூர்வமானது. இக்கவிதை பொறுக்கித்தனமானது/அடல்ட்ரி என யாராவது கொந்தளித்தெழுந்தால், ஒரு வாரத்துத் தினத்தந்தி செய்திகளை வாசித்தால் நவீனத் தமிழர் காதல் லீலைகள் பற்றி அறிய முடியும். ஒரு களத்தில் பரஸ்பரம் வெளிப்படும் காதலின் மேன்மை, நவீனக் காதல்தான்.
உள்ளாடைக்குள் பணத்தை வைத்துக்கொண்டு
மேலாடையைச் சரி செய்தபடி
கதவு திறந்து புறப்பட்ட நீ
திரும்பி வந்து தந்த முத்தத்தை
நான் மறக்க மாட்டேன்
காசுக்காகத் தனது உடலைப் பகிர்ந்துகொள்ளும் பெண்ணுக்குத் தோன்றும் காதல் பற்றிய மகாதேவனின் கவிதை செவ்வியலானது. மரபு வழிப்பட்ட காதல் பற்றிய புனைவுக்கு மாற்றாக விலைமகளிர் தந்த முத்தத்தின் வழியே கசிந்திடும் உறவு, காதலின் உன்னதத்தைச் சொல்கின்றது. எந்தவொரு நிபந்தனையும் அற்று ஆண், பெண் உறவில் எந்தக் கணத்திலும் எப்படியோ வெளிப்படும் காதல் பற்றிய மகாதேவனின் வரிகள் முக்கியமானவை.
சர்ரியலிஸ பாணியில் காதலைச் சித்தரிக்கும் ஸ்ரீபதி பத்மநாபாவின் கவிதை விநோதமாக வெளிப்பட்டுள்ளது.
எறும்புத்திண்ணிகள் மிகவும் சாதுவானவை ரொம்ப நல்லவை
எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது என்றவளே!
என்னைப் போலவே ஒரு எறும்புத்திண்ணியைப்
பரிசாகத் தருகிறேன்
படுக்கைக்கருகில் வைத்துக்கொள்
இருப்பிலிருந்து அந்நியப்பட்ட மனநிலை கொண்ட இளைஞனுக்குக் காதல் அபத்தமாகத் தெரிவதில் வியப்பில்லை. படுக்கையில் தனக்குப் பதிலாக எறும்புத் திண்ணியைப் பரிசாகத் தருகிறேன் என்ற பேச்சு, புதிய காதலை முன்னிறுத்துகின்றது.
காதல் என்ற உணர்வு இயற்கையின் ஆகப்பெரிய தந்திரம். எல்லாவிதமான உபாயங்களையும் கபடங்களையும் செய்து இயற்கையானது, ஆணையும் பெண்ணையும் புணர வைப்பதற்காக முன் வைப்பதுதான், 'காதல்.' மறு உற்பத்தி மூலம் மனித குலம் தொடர்ந்து தழைப்பதற்குப் பாலியல் ஈடுபாடு அவசியம் என்ற நிலையில், விரும்பியும் விரும்பாமலோ காதல் என்ற பெயரில் ஆணும் பெண்ணும் எதிர்கொள்ளும் துக்கங்களும் கஷ்டங்களும் ஏராளம். அதையொட்டி உடல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஏற்படும் வன்முறைகள் கொடூர மானவை. ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ வேண்டிய நிலை குறித்து அச்சமடையும் யவனிகா ஸ்ரீராமின் கவிதை வரிகளும் ஒரு நிலையில் காதலின் மறுபக்கம்தான்.
ஒரு பெண்ணைச் சேர்த்துக்கொண்டு
திரிகிற துக்கம் தாளவில்லை எனக்கு
...
என் விதைப்பையைச் சிதைப்பதற்கு
அல்லது உறங்கும்போது தலையில்
கல்லை வீசிவிட்டுப் போக
அவளுக்கு முகாந்திரங்களுண்டு
ஆணின் மொழியில் அமைந்த இக்கவிதை வரிகள், பதற்றத்துடன் வெளிப்பட்டுள்ளன. காதல் என்ற புனைவினைக் கேள்விக்குள்ளாக்கும் யவனிகாவின் கவிதை, தமிழ்க் காதல் மரபில் புதிய தடம் வகுத்துள்ளது.
காதல் என்றாலே கிளுகிளுப்பு, மகிழ்ச்சி என்று சராசரி இளைஞனும் இளைஞியும் நினைக்கும் வேளையில் தொண்ணூறுகளுக்குப் பிந்திய தமிழ்க் கவிஞர்களின் நவீனக் காதல் கவிதைகள் வேறுபட்டனவாக உள்ளன. மாறிவரும் ஆண்&-பெண் உறவின் புதிய போக்குகளையும், காதலின் பன்முகத்தன்மைகளையும் எவ்விதமான மனத்தடைகளற்று விவரிக்கும் காதல் கவிதைகள், இளைய தலைமுறையினரின் மனப்பதிவுகளையும் விளக்குகின்றன. அவை காதல் பற்றிய மரபு வழிப்பட்ட பார்வையைச் சிதைத்துப் புதிய போக்குகளை முன்னிறுத்துகின்றன.