கண்ணதாசனின் அதீத உளவியல் ஆற்றல்

கண்ணதாசனின் ஈ.எஸ்.பி. பவர் (E.S.P.Power) – அதீத உளவியல் ஆற்றல்! -2


சேலத்தில் கவிஞர் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள். அவர் ‘அமைச்சர்’ என்ற இதழின் நிர்வாகியான அருணாசலம் என்ற அருணனிடமும் (அருணாசலம் பின்னாளில் அருணோதயம் பதிப்பாளர் ஆனார்), கவிஞரின் எழுத்துக்களைத் தொலைபேசி வாயிலாகக் கேட்டு அவர் சொல்லச் சொல்ல எழுதி வந்தவருமான கற்பூரபாண்டியனிடமும் தான் கண்ட கனவைத் துயரத்துடன் விவரிக்கிறார்.



“28-1-1947 அன்று இரவு பயங்கரமான கனவு ஒன்றைக் கண்டேன். மகாத்மா காந்தியை யாரோ சுட்டு விடுகிறார்கள்’ என்றார் கவிஞர்.

“அந்த மனிதருக்கா அப்படி ஆகும்” என்று அவர் கூற்றை மறுத்து இருவரும் கேலி செய்கிறார்கள்.

ஆனால் 30-1-1947 இரவு 7 மணி செய்தியில் வானொலி மகாத்மா காந்திஜியை கோட்ஸே சுட்டுக் கொன்றதை அறிவித்த போது அனைவரும் விக்கித்துப் போயினர்.



7

மழை இல்லாத காலத்தில் எல்லாம் கவிஞர் மழை பொழிக என்று சொன்னவுடன் மழை பெய்தது.

1972இல் வரலாறு காணாத வறட்சியைத் தமிழகம் கண்டது. ஏரி, குளம், ஆறு அனைத்தும் வறண்டன.

மக்கள் தவிதவித்துப் போயினர்.



கம்பன் விழாவில் கலந்து கொள்ள பாண்டிச்சேரி சென்றார் கவிஞர். உடன் சென்றவர் அவர் உதவியாளர் இராம. கண்ணப்பன்.



பாண்டிச்சேரியிலும் மழை இல்லை.ஒரே வறட்சி.

விழாவின் இறுதி நாளன்று பேசிய கவிஞர் சொன்னார்:” நான் கண்னனை வணங்குவது உண்மை எனில் புதுச்சேரி எல்லையைக் கடக்கு முன் மழை பெய்ய வேண்டும். பரந்தாமன் இங்கு நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவான்.”

அவர் வாக்கு பொய்க்கவில்லை.



வருணன் அதைக் கேட்டான். ஓடி வந்தான்.

பேச்சை முடித்து கவிஞர் திண்டிவனம் வந்து சேர்ந்த போது புதுச்சேரி மழையில் மிதப்பதாக்ச் செய்தி வந்தது!

இன்னும் இரு சம்பவங்கள்.



ஒன்று மதுரை அன்பர் ஒருவர் குமுதம் இதழுக்கு ஒரு கடிதம் எழுதி கவிஞர் மதுரையில் மழை. பெய்யப் பாட வேண்டும்” என்றார்.



கவிஞரும் பாடினார்:



23 வரிகள் கொண்ட பாடல்.

அதில் முதல் ஆறு வரிகளையும் கடைசி ஆறு வரிகளையும் இங்கு தருகிறேன்:

ஞானம் தூங்கினால் நல்லறம் தூங்குமே

நலங்கள் தூங்கினால் நானிலம் தூங்குமே

கானம் தூங்கினால் கலைகளும் தூங்குமே

கலைகள் தூங்கினால் காவியம் ஏங்குமே

தானம் தூங்கினால் தவங்களும் தூங்குமே

தவங்கள் தூங்கினால் தருமமும் ஏங்குமே ….



வண்ணமாம் மின்னல்கள் வளரொளி நடனங்கள்

காணத் துடிக்கிறோம் கவின் மழை பொழிக நீ!

தேனின் துளிகளைத் தேசத்தில் ஊற்றுக.

சேரும் நதிகளில் திருப்புனல் காட்டுக

ஆனினம் உயிரினம் அனைத்தும் வாழவே

ஐய பெய்கவே, அம்மையே பெய்கவே!



ஏதோ வருணன் தனது உயிர் நண்பன் போலப் பாடலைப் பாடி விட்டார் கவிஞர்.

மழை பெய்யுமா? குமுதம் இதழைப் படித்த மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.



பெயதது. கொட்டோ கொட்டு என்று மழை பெயதது.

வருணன் தன் உற்ற நண்பனைக் கைவிடவில்லை.

குமுதம் என்று மதுரையை அடைந்ததோ அன்றே மழை!

நண்பருக்கும் ஆச்சரியம், மக்களுக்கும் ஆச்சரியம்.

நன்றியை அனைவரும் தெரிவித்தனர்.

இதே போல சென்னையில் வானதி பதிப்பகத்தார் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி ஒரு விசேஷ கவியரங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.

கவிஞரும் அதில் பங்கேற்றார்.



பனிரெண்டு அறுசீர் விருத்தச் செய்யுள்களை அங்கு அவர் பாடினார்.



வான் முட்டும் கோபுரங்கள்

வானுக்குச் செய்தி சொல்வீர்!

தேன்முட்டும் இதழாள் சக்தி

தேவியைத் துயிலெ ழுப்பீர்!

கான்முட்ட மழைபொழிந்து

காவிரி பெருகி ஓடி

மீன்முட்டும் வெள்ளக் காடாய்

வியன் நிலம் ஆவதாக!

என்று இறுதி விருத்தத்தை முடித்தார்.

கவியரங்கம் முடிந்தது. மயிலை கபாலீஸ்வரர் கோவிலிலிருந்து கிளம்பினார் கவிஞர். தியாகராய நகர் வருவத்ற்குள் அடை மழை கொட்டியது.



இப்படிப் பல சம்பவங்கள்!!



இந்தச் சம்பவங்கள் கட்டுக் கதை அல்ல! அவரது உதவியாளராக இருந்த இராம கண்ணப்பன், “கண்ணதாசனின் அர்த்தமுள்ள அனுபவங்கள்” என்ற நூலில் இவற்றைத் தெரிவிக்கிறார்.

(புத்தக வெளியீடு: கங்கை புத்தக நிலையம், தி.நகர், சென்னை – 17 – முதல் பதிப்பு டிசம்பர் – 1991 – 181 பக்கங்கள்)

நமது நன்றி இராம கண்ணப்பனுக்கு உரித்தாகுக!







8

குமுதம் இதழில் வாரம் ஒரு கவிதையை எழுதி வந்தார் கவிஞர்.

ஒரு இதழில் கவிதை ஒன்று வெளியானது.

தாலாட்டுக் கவிதை அது.

கவிஞரின் அண்ணனான ஏ.ஏல்.சீனிவாசனுக்கு பேரக்குழந்தை பிறந்தது.கவிஞருக்கும் பேரன் தானே! பாடினார்:





அவனை எழுப்பாதீர் அப்படியே தூங்கட்டும்

கண்ணை விழித்திந்த காசினியைப் பார்க்குங்கால்

என்ன துயர் வருமோ எங்கெங்கே அடி விழுமோ

மோதல் வருமோ முறைகெடுவார் துயர் வருமோ

இந்த வயதினிலே இப்பொழுதே தூங்குவதே

சுகமான தூக்கம், அவன் சுகமாகத் தூங்கட்டும்”



துரதிர்ஷ்டவசமாக ஒரே வாரத்தில் குழந்தை இறந்தது.

அப்படியே தூங்கட்டும்; அவனை எழுப்பாதீர் என்று எழுதியதில் அறம் வைத்துப் பாடி விட்டேனோ. சுகமாகத் தூங்கட்டும் என்று சொல்லிய போது ஒரே நீள் தூக்கமாகப் போயிற்றே!





கவிஞரின் மனம் சமாதானம் அடையவில்லைல். புலம்பினார்.

அவனை எழுப்பாதீர், அப்படியே உறங்கட்டும்

என்றே நான் எழுதியதன் ஈரம் உலரவில்லை

அறம்பாடி விட்டேனோ அறியேன் சிறுகுருவி

திறம்பாட முடியாமல் செத்த கதை பாடுகிறேன்”



கண்ணதாசனின் கதறலை அடுத்த இதழ் குமுதம் தாங்கி வந்தது. மக்களும் சேர்ந்து அழுதனர்; கவிஞனின் சொந்தத் துக்கத்தில் பங்கு கொண்டனர்.





9

கவிஞனின் வாக்குப் பொய்க்காது என்பது அவர் அடிக்கடி சொல்லும் ஒரு வரி.

அதை ஏனையோரும் ஏற்றனர்; அதன் நிரூபணத்தையும் அடிக்கடி பார்த்து வந்தனர்.

அவரது சக்தி அபூர்வமான ஒன்று. தமிழை அருவியெனக் கருத்து வெள்ளத்துடன் கொட்டியதில் மட்டும் விஞசவில்லை கண்ணதாசன்.





கண்ணனின் அருள் தாங்கி ஒரு அருள் சக்தியும் கொண்டு வாழ்ந்து வந்தார்.

சமீப காலத்தில் தமிழகம் கண்ட ஒரு “சக்தி” பெற்ற “கவிஞர்” அவர் என்பதுடன் இந்தத் தொடரை முடித்துக் கொள்வோம்.

***

எனது நன்றி : இராம கண்ணப்பன் அவர்களுக்கு – பல நல்ல விஷயங்களை அப்படியே காற்றோடு போக விடாமல் எழுத்திலே பதிவு செய்தமைக்காக!



ச.நாகராஜன்

எழுதியவர் : (4-Jan-18, 11:30 pm)
பார்வை : 127

மேலே