அவனும் நானும்-அத்தியாயம்-01

....அவனும் நானும்....

அத்தியாயம் : 01

பூஞ்சோலையின் நடுவே இரண்டு மாடிக் கட்டிடங்களோடு அழகாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது "கண்ணன் இல்லம்"என்று பெயர் தாங்கிய அந்த வீடு...பார்ப்பவர் கண்களிற்கெல்லாம் குளிர்மையைப் பரிசளித்து வெளிப்புறத்திற்கு பிருந்தாவனமாய் தோற்றமளித்தாலும் உள்ளகத்தில் மட்டும் ஏனோ சோககீதத்தைத்தான் இசைத்துக் கொண்டிருந்தது அந்த இல்லம்...

அதற்கு ஒரேயொரு காரணம் அந்த இல்லத்தின் மைந்தன் கார்த்திக் கிருஷ்ணன்...ராம்குமார் சீதா தம்பதிகளின் ஒரே புத்திரன் அவன்...முப்பது வயதாகியும் திருமணத்தை மறுத்துக் கொண்டே வருகிறான் என்று சொல்வதை விடவும்,அந்த பந்தத்தையே முற்று முழுதாய் வெறுத்துவிட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்...

அவனது பெற்றோர்களும் அவனோடு இந்த ஐந்து வருடங்களாய் எப்படி எப்படியெல்லாமோ போராடிப் பார்த்துவிட்டார்கள்...ஆனாலும் அவன் அவர்களின் பேச்சுக்களிலோ,கண்ணீரிலோ கரையாத கல் நெஞ்சுக்காரனாகவே இருந்து வைத்தான்...

படிப்பை முடித்ததுமே அப்பாவின் தொழிலைக் கையிலெடுத்துக் கொண்டவன்,தனது கடின உழைப்பினாலும்,விடாமுயற்சியினாலும் பல்வேறு துறைகளில் கால்பதித்து...ஒரே வருடத்திலேயே இளம் தொழிலதிபராக உருவெடுத்திருந்தான்...இன்று ஆர்.கே குரூப் ஒவ் கம்பனிஸின் உரிமையாளனான அவனை அந்தத் தலைநகரத்தில் தெரியாதவர்கள் யாரும் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்...அந்தளவிற்கு அவன் தனது தொழிலில் வெற்றிக் கொடியை நாட்டியிருந்தான்...

அவனைப்பற்றிய அறிமுகம் நடந்து கொண்டிருக்கும் போதே படிக்கட்டுகளில் கழுத்துப்பட்டியைச் சரி செய்தவாறே கம்பீரமாக இறங்கி வந்து கொண்டிருந்தான் அவன்...ஆறடி உயரத்தில் ஆணழகனாகவே காட்சியளித்தவன்,வசீகரமான முகத்தில் புன்னகைக்குப் பதில் சினத்தினைக் குடி வைத்திருந்தான்...

அவன் படிகளில் இறங்கி வருவதையே சிந்தை தேங்கிய முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் கார்த்திக்கின் அப்பா ராம்குமார்..அவருக்கு எதிராகவே அவன் உணவு மேசையில் வந்து அமரவும்,இத்தனை வருடங்களாய் அவனோடு வாதாடித் தோற்றுப்போன விடயத்தை இப்போதும் விடாது ஆரம்பித்து வைத்தார்...

"என்னபா ஆபிஸ்க்கு கிளம்பிட்டியா...??..."

அவரது கேள்வியில் அவரை நிமிர்ந்து பார்த்தவன்,ஓர்வித முகச் சுழிப்போடு மீண்டும் தலையைக் கீழே குனிந்து கொண்டான்...அவன் இப்படியான கேள்விகளுக்கு என்றுமே பதிலளிப்பதில்லை...பதில்களைத் தெரிந்து கொண்டே கேட்கப்படும் கேள்விகளுக்கு அவன் என்றுமே மதிப்பளித்து பதில் சொல்வதில்லை...கேட்பவர் யாராக இருந்தாலுமே உதாசீனமாய் ஓர் பார்வை பார்த்து விட்டு தன் வேலையே கவனமாக இருந்து விடுவான்...

ஆனால் அவனது இந்த அலட்சியம் அவனது தந்தையார் ராம்குமாருக்குத்தான் ஒன்றும் புதிதானதில்லையே...இதைத்தான் இவர் இந்த ஐந்து வருடங்களாகவே பார்த்துக் கொண்டிருக்கிறாரே...ஆம் அவனொன்றும் பிறந்ததிலிருந்தே இப்படியில்லை...ஐந்து வருடங்களிற்கு முன்னிலிருந்துதான் ஆளே மொத்தமாக மாறிப் போயிருந்தான்...

அவனை மொத்தமாகவே மாற்றும் அளவிற்கு பெரிதாக ஏதோ அவன் வாழ்க்கையில் நடந்திருக்கின்றது என்று ஊகிக்க முடிந்த அவனது பெற்றோரால்...அது என்னவென்றுதான் கண்டுபிடிக்கவே முடியவில்லை...அவனிடமே பல தடவைகள் கேட்டும் பார்த்துவிட்டார்கள்...ஆனால் அவன்தான் இப்போதெல்லாம் ஓர் வார்த்தை பேசுவதற்கே கூலி கேட்கத் தொடங்கியிருந்தானே...அவனது நெருங்கிய நண்பர்களிடம் கூடக் கேட்டுப் பார்த்து விட்டார்கள்...ஆனால் அவர்களுக்கு அங்கும் கிடைத்ததென்னவோ ஏமாற்றம்தான்...

"ஏன்டா கேள்வி கேட்டா...ஒன்னு ஆமான்னு சொல்லு...இல்லை இல்லைன்னு சொல்லு...இப்படி எதுவுமே சொல்லாமா தலையைக் குனிஞ்சுக்கிட்டா என்ன அர்த்தம்..??..."

"ம்ம்...பதில் சொல்ல விருப்பமில்லைன்னு அர்த்தம்..."

"இப்போ நீ பதில் சொல்ல விருப்பப்படாத அளவுக்கு அப்படியென்னத்தடா நான் கேட்டுட்டேன்...??..ஆபிஸ்க்கு கிளம்பிட்டியான்னு கேட்டது ஒரு குத்தமா..??..."அவனிடமிருந்து ஒரு கேள்விக்கு பதில் வாங்குவதற்குள் எவ்வளவு பேச வேண்டியிருக்கிறது என்று தனக்குத்தானே நொந்து கொண்டார்...ஆனால் அப்போதும் அவன் அசைந்து கொடுத்தால்தானே?

"இப்போ என்னதான் வேணும் உங்களுக்கு..??..ஆபிஸ்க்குத்தான் கிளம்பிட்டிருக்கேன் போதுமா...??..."

இப்படி எரிந்து விழுபவனிடம் அதற்கு மேலும் திருமணப் பேச்சை எடுக்க அவருக்குத் துளி கூட விருப்பமில்லைதான்...ஆனால் அவர் அதை அவனிடம் கேட்காமல் விட்டால் தன் திருமண வாழ்விலேயே பூகம்பம் வெடித்துவிடும் அபாயம் இருந்ததால்,மெதுவாக திருமணப் பேச்சையும் ஆரம்பித்து வைத்தார்...இல்லையென்றால் சமையலறையில் ஏதோ வேலையிருப்பதைப் போல் காட்டிக் கொண்டே இங்கே நடப்பவற்றை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் அவர் மனைவி சீதாவின் அக்னிப் பார்வைகளிற்கு அவர் இரையாக வேண்டியிருக்குமே...

"அது மட்டுமே எங்களுக்கு போதாதேபா...காலாகாலத்தில ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணமும் பண்ணிக்கிட்டாய்னா...நாங்களும் பேரன் பேர்த்தின்னு மீதியிருக்கிற எங்க காலத்தை ஓட்டிடுவோம்..."

அவர் சொல்லி முடித்ததுமே,சாப்பிடுவதைப் பாதியில் நிறுத்திக் கொண்டவன்...கைகளைக் கழுவிவிட்டு வாசலை நோக்கி நகர்ந்தான்...வெளியேறுவதற்கு முதல் அவரைத் திரும்பிப் பார்த்தவன்,

"இப்போ நீங்க கேட்டதுக்கான பதிலை ஐந்து வருடங்களிற்கு முன்னாடியே நான் சொல்லிட்டேன்...நீங்க எத்தனை தடவைதான் இதே கேள்வியையே மாத்தி மாத்திக் கேட்டாலும்...என் பதில் ஒன்னுதான்...என் வாழ்க்கையில திருமணம் என்கிற பேச்சுக்கே இடமில்லை...ஒரு பொண்ணை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைக்கிற அளவுக்கு நான் ஒன்னும் முட்டாளில்லை..."

"இன்னொரு தடவை இதைப்பத்தின பேச்சு என் முன்னாடி வந்தால்...அப்புறம் கண்ணன் இல்லம் கார்த்திக் கிருஷ்ணன் இல்லாத இல்லமாத்தான் இருக்க வேண்டியிருக்கும்....இந்த பதில் உங்களுக்கு மட்டுமில்லை...உள்ளுக்கிருந்து கேட்டுக்கிட்டு இருக்கிற உங்க மனைவிக்கும்தான்..."என்றவன் காரில் ஏறி அலுவலகத்தை நோக்கி விரைந்தான்...

அவன் சென்றதும் கண்ணீரை முந்தானையால் துடைத்துக் கொண்டே வெளியே வந்த சீதா...ராம்குமாரின் எதிரே வந்து அமர்ந்தார்...இரண்டு வருடங்களிற்கு முன் அவருக்கும் அவனுக்குமான திருமணம் தொடர்பான வாக்குவாதத்தில்,அவனது வார்த்தைகள் எல்லைமீறிப் போய்விடவே...அன்றிலிருந்து அவர் அவனோடு கதைப்தையே நிறுத்தியிருந்தார்...அப்படியாவது அவன் திருமணத்திற்கு சம்மதித்துவிட மாட்டானா என்று எதிர்பார்த்தவருக்கு...அவன் தன் முடிவிலிருந்து கொஞ்சமும் மாறாது அதே பிடிவாதத்திலேயே இருந்தது மிகுந்த வேதனையை அளித்தது...

"இப்போ எதுக்குடி அழுகுற...?இவன் இதையேதானே இத்தனை வருசமா சொல்லிட்டிருக்கான்...இதுக்கு மேலையும் இவனோட போராடுற சக்தி எனக்கில்லை...இந்தப் பேச்சை இனி இதோடையே விட்டிடுவோம்..."

"நீங்களே இப்படிச் சொன்னா எப்படீங்க...??..அவன்தான் பிடிவாதமா இருக்கான்னா நாங்களும் அப்படியே விட்டிர்ரதா...??.."

"வேற என்னதான் பண்ணச் சொல்லுற என்னை?அவன்தான் தெளிவா சொல்லிட்டுப் போறானே...இதுக்கு மேலையும் இந்தப் பேச்சை ஆரம்பிச்சா வீட்டை விட்டே போயிடுவேன்னு...அவனோட பிடிவாதத்தை இத்தனை வருசமா பார்த்ததுக்கப்புறமும் இதைப்பத்தி மறுபடியும் அவன்கிட்ட கேட்கச் சொல்லுறியா...?.."

"ஒரு மூனு நாலு மாசத்துக்கு இந்தப் பேச்சைத் தள்ளிப் போடுவம் சீதா...அவன் போக்கிலேயே கொஞ்ச காலத்துக்கு விட்டுப் பிடிக்கிறதுதான் சரின்னு தோனுது..."

அவர் சொன்னதையே அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவர்,பதிலிற்கு எதுவுமே சொல்லாமல் உள்ளே செல்லத் தயாரானார்...

"என்ன நீ நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன்...நீ பாட்டுக்கு எதுவுமே சொல்லாமல் கிளம்பிப் போயிட்டிருக்க...??.."

"அதான் இனி இந்தப் பேச்சே வேண்டாம்னு,உங்க மகன் மாதிரியே நீங்களும் முடிவா சொல்லிட்டீங்களே..இதுக்கு மேல நான் சொல்ல என்ன இருக்கு..??.."

அவரது மனம் படும் வேதனை அவருக்கும் புரியாமலில்லை...ஆனால் அதைப் போக்க வேண்டியவனே அதைப்பற்றிக் கொஞ்சமும் சிந்தியாமல் நடந்து கொள்ளும் போது அவரால் மட்டும் என்ன செய்துவிட முடியும்...??..

இருக்கையைவிட்டு எழுந்தவர்,அவரை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டார்,தலையினை மெதுவாய் வருடிக் கொடுத்தவாறே...

"இங்க பாரு சீதா...மனசில எதையும் போட்டுக் குழப்பிக்காத...கூடிய சீக்கிரமே எல்லாம் சரியாகிடும்..."என்று அவரை ஆறுதல்படுத்தியவரின் மனம்,

"தன் தாயின் வேதனையைப் போக்கிடவாவது அவன் திருமணத்திற்கு சம்மதித்துவிடக்கூடாதா...??..."என்று எண்ணமிட்டுக் கொண்டது...ஆனால் தன் மனதில் எரிந்து கொண்டிருக்கும் ரணத்தின் தீயினையே அணைக்க முடியாது அவன் மனதோடு அவனே இந்த ஐந்து வருடங்களாய் போராடிக் கொண்டிருக்கிறான் என்பது அவர்கள் இருவருக்குமே தெரிந்திருக்கவில்லை...


தொடரும்...

எழுதியவர் : அன்புடன் சகி (28-Mar-18, 8:58 am)
Tanglish : avanum naanum
பார்வை : 1324

மேலே