சொல்வது நான் உண்மை

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்வதை கவிதை வடிவில்
சொல்லாத சிலவற்றை
சொற்சுவை இல்லாவிடினும்
சொல்ல வருவதும் புரிந்திட !

சொற்றொடர் அமைத்திட
சொற்களைத் தேடுகிறேன்
சொற்பளவே கிட்டுகிறது
சொல்வேந்தன் அல்ல நான்
சொல்லின் செல்வனும் இல்லை !

சொக்கத்தங்கமே தமிழ்மொழி
சொற்களஞ்சியம் நம்மொழி
சொட்டுத்தேன் சுவைமொழி
சொல்லின்பம் செம்மொழி
சொத்தன்றோ தமிழனக்கு !

சொல்லாட்சிப் புரிந்திட
சொல்லாக்கம் அவசியம்
சொல்வளம் நிறைந்திட்ட
சொற்கட்டும் மிகுந்திட்ட
சொல்லாடல் வென்றிடும் !

சொற்பொழிவு ஆற்றிடவும்
சொற்செறிவு தேவையன்றோ
சொற்பமே என் சிந்தையில்
சொற்போரும் இயலாது
சொற்கட்டும் போதாது
சொல்வது நான் உண்மை !


பழனி குமார்
18.06.2018

எழுதியவர் : பழனி குமார் (18-Jun-18, 8:42 am)
பார்வை : 536

மேலே