பெண்ணின் குறிக்கோள் நிறைவேறிற்று

நமது கதைக்கான ஊரானது, நகர்ப்புற வாசமே இல்லாத ஒரு சிற்றூர்.
மனதை கொள்ளை கொள்ளும் பசுமைநிறை பூமியைக்கொண்ட நல்லூர்.
அவ்வூரில் ஒருநாள்,
காலையில் கதிரவன் எழுவதற்கு முன்பே, உருவத்தையே காண இயலா அந்த இருளில் லேசான முனகல் சப்தம் மட்டுமே கேட்கிறது,
ஒருவரின் வாயானது மற்றொருவரின் காதண்டையில் சென்றால் கூட வருகிற ஒலியானது குண்டூசி விழும் ஒலியைப் போலவே இருக்குமாறு,தோழிகள் இருவர் தெருவீதியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் “பிக்பாஸின்” பக்தர்களாக இருக்கும் நாம் இதையும் ஒட்டுக்கேட்காமல் விட்டுவிடுவோமா என்ன! வாருங்கள் நன்மைநிறை நல்லூருக்குச் சென்று என்னதான் அத்தோழிகள் பேசுகிறார்கள் என்று கேட்போமே!
இருவரில் ஒருத்தி மற்றவளிடம் அதிகாலையிலேயே குசலம் விசாரிக்கிறாள். எதிரே உள்ளவளோ, அவள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒருவித எதிர்பார்ப்பு மிக்க மனதுடன் பதிலளிக்கிறாள். என்ன எதிர்பார்ப்பென்றால், எப்படியும் இவள் எதோ ஒன்று கேட்கத்தான் வந்திருப்பாள் என்கிற எதிர்பார்ப்புதான் அது. “ஒருவேளை நம்மால் கொடுக்க இயலா பொருளையோ அல்லது வழங்க இயலா உதவியையோ கேட்டுவிட்டால் என்ன செய்வது” என்று எண்ணிக்கொண்டிருக்கையிலே, அவள் கேட்டாள் மெல்லிய குரலோடு, “ஏய்! உன்ட்ட அது இருக்கா!”. ஒரு குழப்ப மனம் இவளுக்குள் உண்டாயிற்று, “அதுன்னா என்னதா இருக்கும்” அப்படி யோசித்துக்கொண்டிருக்கையிலே மறுபடியும் கேட்டாள், “அதுதான் டீ உன்ட்ட இருக்கா”.
இந்தமுறை கேட்கும் தொனியை சரியாக புரிந்து கொண்டவளாக ஒருவித பதற்றமுடைய முகத்துடன் பதிலளித்தாள் “அய்யய்யோ என்ட்ட இப்போ இல்லையடி”
கேட்டவளது முகம் வாடிற்று, சரி விடு என்றாள் சோகக்குரலோடு.
“அடுத்த தெருவில எனக்கு நெருங்கிய தோழி சாந்தி இருக்கா அவகிட்ட போய் கேட்போம்” என்று இவள் கூற, கேட்டவளும் சரி என்று கூற. இருவரும் பக்கத்து தெருவை நோக்கி கிளம்பினர்.
இருவரும் சாந்தியின் வீட்டிற்க்கு அருகில் வருகின்றபோது அவர்களுக்குள் ஒரு மாற்றம் உண்டாயிற்று. எப்பொழுதும் தலை குனிந்த முகத்துடன் நடந்து செல்லக்கூடிய இந்த இருவரும், பின் மண்டை முதுகைத்தொடுமாறு மேலே பார்த்தவர்களாய் நடக்கின்றனர். இதற்கு ஒரு காரணம் உண்டு, என்னவெனில் இவர்கள் வசிக்கும் ஊரிலேயே சாந்தியின் வீடு மட்டும் தான் மாடிவீடு. இருக்கின்ற ஒரு தரைத் தளத்தை சேர்க்காமல் மொத்தம் மூன்று மாடிகளை உடையது சாந்தியின் வீடு.
இருவரும் சாந்தியின் வீட்டின் முன்பு வந்து நின்றனர். வீட்டின் வாயிலின் அருகே உள்ள திண்ணையில் அமர்ந்து சாந்தியின் தந்தை நாளிதழ் வாசித்துக்கொண்டிருந்தார். சாந்தியின் அண்ணனோ வீட்டின் முன்னே தெருவில் நின்ற தனது காரை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தான்.
இவர்கள் வந்து நின்றதை கவனித்த சாந்தியின் தந்தை “என்னம்மா சாந்திய பாக்க வந்திருக்கீங்களா” என்று கேட்டார்.
இருவரும் “ஆம் ” என்றனர் ஒரே குரலில்.
அவர்கள் கூறியதை பாதி கேட்டவராய், “ஏம்மா சாந்தி இங்க வா! உன்னோட தோழிகள் வந்திருக்காங்க” என்று தனது கரகர குரலில் சாந்தியை அழைத்தார்.
“இதோ வரேன் அப்பா” என விண் அதிர முழங்கிக்கொண்டு வெளியே ஓடி வந்தாள் சாந்தி.
தனது தோழிகள் வந்திருப்பதை பார்த்தவள், அவர்கள் அருகே சென்று “என்னடி இவ்வளவு நேரமே வந்திருக்கீங்க, என்ன விஷயம்” என்று கேட்டாள்.
“உன் கிட்ட அது எப்படியும் இருக்கும்லா அதான் வாங்க வந்தோம்” என்று பதிலளித்தாள் சாந்தியின் தோழி.
இவ்வளவு நேரமும் தனது வெண்கலக்குரலில், பக்கத்துவீட்டு திண்ணையில் படுத்திருக்கும் தாத்தாவை கூட எழுப்பிவிடும் அளவிற்கு சத்தமாக பேசினவள், இன்னும் அருகே வந்து “ஆமாடி இருக்கு” என்றாள் அமைதியாக.
“எனக்கு ஒன்னு தருவியா” என்றாள் அவளது தோழி.
“சரி உள்ளே வா தரேன், இங்க எல்லாரும் இருக்காங்க” என்று கூறி இருவரையும் உள்ளே அழைத்துச்சென்றாள்.
தனியே ஒரு அறைக்குள் சென்றவள், தாளால் சுற்றப்பட்ட ஒரு பொருளை, நெகிழிப்பை ஒன்றில் வைத்து தனது தாவணி மறைவில் வெளியே எடுத்துக்கொண்டு வந்தாள்.
இவர்கள் இருவரின் அருகிலே வந்தவுடன், நான்கு திசைகளையும் தன் கண்களால் நோக்குகின்றாள் (யாராவது பார்க்கிறார்களா என்று) சுற்றிலும் யாருமே இல்லை என்பதை உணர்ந்துகொண்டவள், தாவணி மறைவில் வைத்திருந்த நெகிழிப்பையை அவர்களிடம் கொடுத்து “உடனே கிளம்புங்க” என்கிறாள்.
எந்த ஒரு நபரின் பார்வையும் படாமல் அந்த மூன்று தோழிகளும் இதைச்செய்து முடித்தனர்.
“குறிக்கோள் நிறைவேறிற்று”
இது மட்டுமே ஒவ்வொரு பெண்களும் மாதாமாதம் அணுகவேண்டிய ஒரு ஆகப்பெரிய குறிக்கோளாக உள்ளது.
அவர்கள் கைமாற்றிக்கொண்ட அந்தப் பொருளானது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட பொருள் அல்ல மற்றும் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட முடியாத பொருளும் அல்ல.
அப்படியெனில், ஏன் அவர்கள் அதை இரகசியமாக கைமாற்றிக்கொள்ள வேண்டும்?
மேலும், அது என்ன பொருளாக இருக்கும்? போன்ற கேள்விகள் உங்களது மனதில் துளிர்விடுகிறதா!
எதிர்பார்ப்பு அதிகம் வேண்டாம், ஏனெனில் அது ஒன்றும் அவ்வளவு பெரிய பொருள் அல்ல! அது ஒரு சாதாரண“சானிட்டரி நாப்கின்” தான்.
இதை வாசித்துக்கொண்டிருக்கிற சகோதரர்களே! உங்களில் எத்தனை பேர் ஒரு புது நாப்கினை கையால் தொட்டிருக்கிறீர்கள்! அல்லது தேவையுள்ள ஒரு பெண்ணிற்கு எப்பொழுதாவது வாங்கிக்கொடுத்தது உண்டா? எதுவும் செய்ததில்லையெனில் அதை நேரிலாவது பார்த்தது உண்டா?
கேள்விகள் மட்டுமே மிஞ்சுகிறது.
“நாப்கின்” என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் அடிப்படைத் தேவை என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். மாதவிடாய் நிகழ்வு என்பது மிகவும் அடிப்படையான மற்றும் மிக முக்கியத்துவம்வாய்ந்த ஒரு உயிரியல் நிகழ்வு. ஆனால், ஏன் இது இவ்வளவு நாளும் இரகசியமாக வைக்கப்படுகிறது?
இந்த ஒரு தலைப்பு மட்டும் ஏன் தீண்டத்தகாததாக மற்றும் பேசப்படாததாக இருக்கிறது?
இந்த ஒரு விஷயத்தை மட்டும் பொது இடங்களில் பேசுவதற்கு ஏன் மனித குலம் கூச்சப்படுகின்றது?
இந்த விஷயத்தின் மேல் நமது கவனத்தை செலுத்தும் அளவிற்கு அது முக்கியத்துவம் வாய்ந்தது இல்லையா? அல்லது அதற்கான தகுதிதான் அதற்கு இல்லையா?
என்ற பல கேள்விகள் நமது மனதினுள் எழுகின்றது. சரி, விஷயத்துக்கு வருவோம்.
காரணமே இல்லாத மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்னையானது இனி நான் கூறப்போகும் வார்த்தைகளால் இன்னமும் முக்கியத்துவம் பெறப்போகிறது என்றே கூறலாம். என்ன பிரச்னை அது?
நம்மில் பலரும்; முக்கியமாக சகோதரர்களில் பலரும் அறிந்திராத ஒரு பிரச்னை இது. அதாவது சராசரியாக ஒரு பெண்ணிற்கு ஒரு மாதத்திற்கு தேவைப்படும் நாப்கினின் விலையானது 100 ரூபாய். இந்த ஒரு தரவிலிருந்தே உங்களால் வியூகிக்க முடியும், அனைத்துப்பெண்களும் “நாப்கினை” பயன்படுத்துவது இல்லை. கதையில் நாம் பார்த்த சாந்தி போன்றோர்தான் இதை பயன்படுத்த முடியும். மற்றவர்களுக்கு இது என்றென்றைக்குமே எட்டா பொருளாகத்தான் இருந்து வருகின்றது.
நாப்கினை பயன்படுத்த இயலாதவர்கள், இன்றும் அழுக்குத் துணிகளையும், ஒருவிதமான தோல் பொருள்களையுமே இதற்கு மாற்றாக பயன்படுத்தி வருகிறார்கள் என்பது தான் நிதர்சனம்.
இந்தியா அதிகப்படியான வளர்ச்சியைக் கண்டுள்ளது, விரைவில் வல்லரசாக உருவெடுக்கும். என்றெல்லாம் நாம் பேசிக்கழிக்கும் இதே நேரத்தில் இந்தியாவிலுள்ள அதிகப்படியான கிராமப்புற பெண்கள் நாப்கினுக்கு பதிலாக மேற்சொன்ன சுகாதாரமில்லா வழிமுறைகளை கைக்கொள்வதற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்கள் வெளிச்சொல்ல இயலா பல்வேறு விதமான தொற்று மற்றும் இன்ன பிற பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர்.
ஐந்து நாட்கள் நீடிக்கின்ற இந்த மாதவிடாய் நிகழ்வு என்பது சுலபமான ஒன்று அல்ல. வலிமிகுந்த தசைப்பிடிப்புகளும், ஈரப்பதம்மிகுந்த தசைப்பிடிப்புகளும் மற்றும் எந்நேர சோர்வு நிலையும் உங்களை இந்த ஐந்து நாட்கள் துரத்திக்கொண்டே இருக்கும். நீங்கள் தூங்கும்போது, விளையாடும்போது. மிதிவண்டியை மிதிக்கும்போது, சமையல் செய்யும்போது, நடனம் புரியும்போது என ஒவ்வொரு நிமிடமும் உங்களை பின்தொடர்ந்துகொண்டே தான் இருக்கும்.
மேலே குறிப்பிட்ட அனைத்துமே ஒரு ஆணை பைத்தியமாகவே மாற்றிவிடும்.
ஆனால் இதைப்பற்றி ஒரு பெண்ணிடம் நீங்கள் கேட்டீர்களென்றால் அவளது முகத்தில் ஒரு தெய்வீக சிரிப்பு மட்டுமே பதிலாக வரும். ஆம், தெய்வீக சிரிப்பு கொண்ட அவள்தான் உண்மையில் தெய்வம்.
நம்மிடையே உலாவிவரும் தெயவீகமிகு அனைத்துப் பெண்களுக்காக, பொறியியல் மாணவர்களாகிய நாம் ஏன் மலிவான விலையில் ஒரு நாப்கினை தயார் செய்து கொடுக்கக்கூடாது?
நாம், மனதில் இதை யோசிப்பதற்கு முன்பாகவே ஒருவர் இந்த வேலையைச் செய்ய ஆரம்பித்துவிட்டார். அவரது பெயர் “அருணாச்சலம் முருகானந்தம்.” அனைவராலும் “pad man” என அழைக்கப்படுகிறார். கோயம்புத்தூரை சேர்ந்த இவர் மலிவான விலையில் “pad” செய்யக்கூடிய ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். தன்னலம் கருதாது இந்த இயந்திரத்தை இந்தியாவிலுள்ள கிராமப்புறங்களுக்கு வழங்கியுள்ளார். உலகத்திலேயே “pad” –யை பயன்படுத்திப்பார்த்த முதல் ஆண் இவர்தான். இன்னும் இவரைப்பற்றி தெரிந்துகொள்ள இணையதளத்தில் தேடுங்கள்.

இவரால் மட்டும் முடியும்! நம்மால் ஏன் முடியாது?
இதை வாசித்துக்கொண்டிருக்கிற சகோதரர்களே! இப்பொழுதாவது நீங்கள் இந்த விஷயத்தை கவனியுங்கள். இதுவே உங்களுக்கான தருணம்.
நாம் பயன்படுத்துகிற “Tissue paper” –ம் “Sanitary pad”-ம் ஒன்று தான். ஒரு பெண் அதை எடுத்துக்கொடுங்கள் என கேட்டால் தயக்கமடையாது அதை எடுத்துக்கொடுங்கள். அதைத்தொடுகிறது ஒன்றும் கொலைபாதகம் கிடையாது. எனவே நண்பர்களே, இந்த சிறு மாற்றத்தை ஏற்றுக்கொள்வோம். பெண்கள் முகத்தில் தென்படும் குற்ற உணர்சியைப் போக்கி, அவள் பெண்ணாய் பிறந்ததற்கு அவளைப் பெருமைப்பட வைப்போம்.
தாயிற்சிறந்த கோவிலும் இல்லை

தமிழில் - ச.ஜெரோம் சகரியா

எழுதியவர் : செல்வி.லிந்தியா (22-Oct-18, 10:08 pm)
சேர்த்தது : ஜெரோம் சகரியா
பார்வை : 166

மேலே