இதோ ஓர் போராளி உதித்துவிட்டான் ....!

வெடிகுண்டுகளைச்
சுமந்து சுமந்து
மலடாகிப் போன
மரண தேசத்தில்
மறத்தமிழச்சியொருத்தியின்
தாய்மை பறைசாற்றப்பட்டது அன்று..

"அக்கினி குண்டங்கள்
மழையாய்ப் பொழிந்து
எம் மக்கள் கூட்டம்
மாண்டு மடியும்
யுத்தக்களத்தில்
ரத்தம் சிந்த
இதோ ஓர் போராளி
உதித்துவிட்டான்...!

எம் குலப் பெண்களின்
பெண்மையைக் கொன்ற
ஆயுதம் ஏந்திய
நாய்களின் சத்ருவாய்
இதோ ஒர் போராளி
உதித்துவிட்டான்....!

போர்க்களத்தில்
புதையுண்ட
எம் இனத்தையும், மொழியையும்
தோண்டியெடுத்து
மகுடாபிஷேகம் செய்ய
இதோ ஓர் போராளி
உதித்துவிட்டான்......!"
என பெருமிதிங் கொண்டவளாய்
உணர்ச்சிப் பெருக்கில்
தன் அறுபட்ட கொங்கையின்
மிச்சமிருந்த குருதியினை
ஈன்றவாறே குழந்தையை
நோக்கி அவ்வீரத்தாயின்
இறுதி வார்த்தைகள்..

"ஓ..! மகனே...!
போர்க்களத்தில்
பிறந்திருக்கிறாய்..
இன்றே உன் மரணம்
நிச்சயிக்கப்பட்டிருக்கும்...
உன் உயிர் உனதல்லது..
மாண்டுபோன பேரினத்தின்
நீட்சி நீ...
பிஞ்சுக்கரங்கள்
துப்பாக்கியேந்தும்
துர்ப்பாக்கிய தேசமிது..
நீயொன்றும் விதிவிலக்கல்ல..
நம் இனத்தின்
மரண ஓலம்
உனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கும்..
அதிகாலை பூபாளம்
கேட்டு கண்விழிக்கும்
வாழ்வு வாய்க்கவில்லை உனக்கு..
துப்பாக்கிச் சத்தத்தில்
விழித்துக்கொள்..
பெரும்பாலும்
உறங்காமல் இரு.
உறக்கம் ஒருபோதும்
விடியலைத் தாரா...
இந்தக் கால்கள்
அறுபட்டுக் கிடக்கலாம்..
இந்த மார்பு
தோட்டாவைத் தாங்கும்
காலம் வரலாம்...
என் மகனே...!
ஆணாய்ப் பிறந்து
இந்த மட்டில் பிழைத்தாய்...
நம் இனமும் மொழியும்
உயிரெனக் கொள்..
இனப்போராளி நீ..
உன் கடைசி துளி
ரத்தமும் தாய்மண்ணை
நனைக்க வேண்டும்..
உன் உடல்
தமிழீழத்தின் வித்தாக வேண்டும்...!

வாழ்க தமிழீழம்.....!"

எழுதியவர் : தனேஷ் நெடுமாறன் (23-Aug-11, 3:06 pm)
பார்வை : 5199

மேலே