இல்லாளே இன்பம்

=======
(இன்று உலக எயிட்ஸ் தினம்)
==============================

கண்ணால் வலைவீசி காதல் மொழிபேசும்
பெண்ணாலாட் கொல்லிப் பிசாசுநீ – எண்ணுமுன்
னுந்தன் குருதியில் உட்கார்ந் துனைக்கொல்லக்
குந்தகம் செய்யும் குறி.
**
வீதியில் கற்பை விலைபேசி விற்கின்ற
சாதியிடம் காசுக்கு சாவுவாங்கி – பாதியில்
பாழ்பட்டுப் போகாதே! பால்பசித் தீர்ப்பதற்கு
வாழ்வளித் தாளோடே வாழ்.!
**
தெருனிவில் நீயள்ளும் தீயநோயோ டுந்தன்
திருமதி யாளினைத் தொட்டுக் – கருவில்
உருவாகும் காணா உருவுக்கும் தொற்றுக்
கிருமி விதைக்காதே கேள்!
**
என்றும் ஒருத்தியுடன் இல்லற பந்தத்தில்
நன்றா யுறவுகொளும் நன்மகனாய் – நின்று
நிலைத்துவிடு. நின்வாழ்வில் நின்றாடு மின்பம்
அலைபோ லடிக்கும் அறி.
**
** மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (1-Dec-18, 3:22 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 249

மேலே