அன்பை விட
காடவர் குலத்தில் பிறந்து, வடநாட்டு அரசர்களை வென்று எங்கெங்கும் சைவம் தழைக்க ஆட்சி நடத்தி வந்தவன் கழற்சிங்கன். அவனது படைகளின் பலத்தைக் கண்டு பயந்து போன சாளுக்கிய மன்னன் தனது மகளை ,கழற்சிங்க மன்னனுக்கு மணமுடித்து, புதிய உறவை உருவாக்கிக் கொண்டு தனது அரசையும், மக்களையும் காப்பாற்றிக் கொண்டான் என்றால் கழற்சிங்கன் எவ்வளவு வீரம் கொண்டவன் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
தனது அரச ஆடைகளை அணிந்துகொண்டு,தன்னை ஒருவாறு ஒழுங்கு படுத்திக் கொண்டாலும் , தனது உள்ளத்தில் ஏற்பட்டிருந்த பதட்டத்தை அவனால் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. மனதை ஒருஅமைதிக்குக் கொண்டு வர முயன்றும் ,முடியாமல் தவித்தான்.அதற்குக் காரணம் எல்லைப் பகுதியில் அவ்வப்போது எழுந்து கொண்டு இருக்கும் பகை அரசர்களின் அச்சுறுத்தல்கள் தான்.
எதிரிகளைக் கண்டு அஞ்சுகின்றவன் இல்லை என்றாலும், போர் என்று வந்துவிட்டால் பொதுமக்கள் அல்லவா பாதிக்கப்படுவார்கள் என்பதை நினைக்கும் போதுதான் உள்ளத்தில் ஓர் அச்ச உணர்வு எழுகிறது.
போர் என்றால் துள்ளிக் குதித்து, வாளேந்திச் சென்ற காலமும் உண்டு.தன்னுடை போர் திறமையால் ,தனது நாட்டின் எல்லையை விரிவு படுத்திக் கொண்டவன் தான் என்றாலும்,அன்றைக்குப் போர் என்னும் சொல்லைக் கேட்டாலே மனம் சஞ்சலப் படுகிறது என்றால், அதற்குக் காரணம், அவனது மனது ஆன்மிகத்தை நாடிச் சென்றதுதான். சிவ பக்தனாவே மாறி விட்ட மன்னன், சிவனுக்கு கோவில் கட்டுவதிலும்,நேரந் தவறாமல் பூஜைகள் நடைபெறுவதற்கான வருவாயை கோவில்கள் பெருக்கிக் கொள்ள நன்செய், புன்செய் நிலங்களை சாசனம் செய்து வைப்பதிலும், தானும் காலந்தவறாமல், சிவ பூஜைகளில் கலந்து கொள்வதிலும் ஈடுபாடு கொண்டதுதான். போர் என்று வந்துவிட்டால், ஆன்மிகம் பாதிக்கப் பட்டு, தனது சிவ பணிகள் தடைபெற்று விடுமோ என்ற பயந்தானே தவிற, போர்களம் செல்ல வேண்டுமே என்பதற்காக அல்ல.
சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்த தனது மனதை சமாதனப் படுத்திக் கொள்ள ,அரசியாரிடம் சென்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்கலாமே என்று அந்தப்புரத்தினுள் நுழைந்தான்..
அந்தப்புரம் அன்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, நறுமணம் எங்கும் வீசிக் கொண்டு இருந்தது. அரசியாருக்கு மலர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் புதுப்புது மலர்களைக் கண்டு விட்டால் போதும்,இரண்டு கைகளாலும் அள்ளி, முகத்தில் அப்பிக் கொண்டு, மூச்சை நன்றாக உள்ளிழுந்து, மணத்தினை நுகர்ந்து, ஆனந்தம் கொள்வாள். அதனால்தான் அந்தப்புரத்தை அன்றாடம் மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட மன்னன் ,அதற்காகவே ஒரு மலர்வனத்தையும் உருவாக்கி வைத்திருந்தான்.
மன்னன் உள்ளே நுழைவதைக் கவனிக்காமல், அரசியார் தனது இடது கையால், மலர் கூடையில் இருந்து மல்லிகை மலர்களை அள்ளி முகத்தோடு சேர்த்தணைக்க விரும்பினாள். ஆனால் ஒற்றைக் கையால் முகத்தோடு அணைத்துப் பிடித்துக் கொள்ள இயலாமல் தவித்தாள். மலர்கள் மறுபடியும், மலர் கூடைக்குள்ளே விழுந்து விட, இன்னொரு கை மலர்களை எடுத்து, அதனை விரல்கள் அற்ற வலது கையால் தாங்கி முகத்தோடு சேர்த்து அணைத்தாள். ஆனாலும் அவள் விரும்பிய அளவு மகிழ்வு கிடைக்காத காரணத்தால் கையில் எஞ்சியிருந்த , மலர்களை கூடையினுள் சுற்று கோபத்துடனே தான் போட்டாள்.
அரசியாரின் இந்தச் செயலை, உள்ளே நுழையும் போதே கவனித்துவிட்ட மன்னன், சற்று ஓடி வந்து ,தனது இரண்டு கரங்களாலும் மலர்களை அள்ளி, அரசியாரின் இரண்டு கன்னங்களோடும் சேர்த்து அணைத்து, அப்படியே அரசியாரின் அழகிய,முகத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டு, அவளது கண்களையே உற்று நோக்கினான்.
அந்தக் கண்களில் மலர்ந்த மலர்ச்சியினையும், இன்ப அதிர்ச்சியினையும் கண்டு மகிழ வேண்டிய மன்னவன் கண்கள் மட்டும் கலங்கத் தொடங்கின. கண்களில் கசிந்த கண்ணீரைத் துடைக்க தனது வலது கரத்தினை ஞாபக மறதியில் நீட்டியவள், சட்டென அதனை இழுத்து மடக்கிக் கொண்டு , தனது இடது கையால் புடவையின் முந்தானையை இழுத்து அவனது கண்களில் மெல்ல ஒற்றி கண்ணீரைத் துடைத்தாள்..
ஒற்றிய கரத்தினை தனது இரண்டு கரங்களாலும் பற்றிய மன்னவன், தனது கன்னத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
‘ ஏன் அரசியாரே .என் மீது உனக்குக் கோபமே இல்லையா ?’ என்று கேட்ட மன்னவனின் குரல் கரகரத்து இருந்தது .
‘எதுக்கு மன்னவா கோபப்பட வேண்டும். கோபப்படும் குலத்தில் நான் பிறக்கவில்லையே ! அப்படி ஒருவேளை எனது தந்தை அன்று உங்கள் மீது கோபப்பட்டு, போர் நடத்தி இருந்தால், இன்று நான் உங்கள் மனைவியாக இருந்திருக்க முடியுமா ? ‘ என்றவளின் குரலில் ஒரு உறுதி இருப்பது தெரிந்தது.
‘என்னதான் இருந்தாலும் ஒரு மனைவியின் கையினைத் துண்டிக்கும் அளவுக்கு ஒரு கல் நெஞ்சனாக இருந்தது கொடுமை அல்லவா ?’
‘அப்படி நான் நினைக்கவில்லை மன்னா? அன்று நீங்கள் கடமை தவறாத மன்னனாகவும்,நான் ஒரு குற்றவாளியாகவும் அல்லவா இருந்தோம்.’
‘என்ன இருந்தாலும் ,இத்தனை பெருந்தன்மையோடு நீ நடந்து கொள்வதை ஒரு கணவனாகக் காணும் போது, எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் எனும் எண்ணம் என் நெஞ்சைக் குத்திக் குடையுது அரசி ‘
‘ஒரு கணவனாகப் பார்த்தால் அப்படித்தான் தோன்றும்.ஒரு நாட்டின் மன்னனாக உங்களை மாற்றிக் கொண்டு பாருங்கள்...அப்போது தெரியும். எது நியாயமென்று...’ என்ற அரசியாரின் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த மன்னவனின் மனதில் அன்று சிவன் கோவிலில் நடந்த சம்பவம் கண்முன்னே விரிந்தது.
திருவாரூர் திருக்கோவில் அன்று சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. எங்கு நோக்கினும் மாவிலைத் தோரணங்களும், வாழை மரங்களும் ,பாக்குமரம், தென்னை மரப் பாளைகளும், கோவிலை மட்டுமல்ல, கோவிலுக்கு வரும் வீதிகளையும் அழகுப் படுத்திக் கொண்டிருந்தன. அது மட்டுமல்ல ஆங்காங்கே பூ மாலைகளும், சரங்களும் தொங்க விடப்பட்டு இருந்ததால் பரவி இருந்த மணமும் வருவோர் மனதை எல்லாம் கிறங்க வைத்து,அவர்களைப் பக்திப் பெருக்கோடு ‘ஓம் நமச்சிவாய ‘ என்று ஓத வைத்துக் கொண்டு இருந்தன.
நாட்டு மக்கள் நலமோடு வாழவும், நாடு பஞ்சம்,பகை இன்றி இருந்திடவும் வேண்டி, சிவனுக்கு சிறப்புப் பூஜைக்கு ஏற்பாடு செய்ய மன்னன் பணித்திருந்தமையால் தான் இத்தனை ஏற்பாடுகள்.
அதோ! மன்னனின் தேரும் வந்து விட்டது. தேரில் இருந்து ஒரு சிவப்பழமாக மன்னன் இறங்கினான். அவனுக்குப் பின்னாலேயே, அவனது பட்டத்தரசியும் இறங்கினாள். இருவரும் உள்ளே சென்று, கோவிலின் வெளிப் பிரகாரத்தை அடைந்தார்கள். பிரகாரத்தின் ஒரு மூலையில் ஓலையால் வேயப்பட்ட ஒரு குடில் இருந்தது. அங்கே பலவிதமான மலர்கள், பலவித வண்ணங்களில் குவித்து வைக்கப்பட்டு இருந்தன.ஒவ்வொரு குவியலின் அருகிலும் ஒரிருவர் அமர்ந்து, மலர்களை மாலைகளாகக் கட்டிக் கொண்டு இருந்தார்கள் .ஏற்கெனவே மலர்களின் மீது அதிக நாட்டம் கொண்டிருந்த அரசி, அந்த மலர்களைக் கண்டதும், திகைப்பும் மகிழ்வும் பொங்க தன்னை மறந்து நின்றாள்.
‘மன்னா’ எனும் குரல் கேட்டு பின்னால் திரும்பினான்.
மன்னா ! அதோ மலர்களின் குவியல். நான் சென்று பார்த்து விட்டு வருகிறேன். தாங்கள் உள்ளே செல்லுங்கள். நான் உடனே வந்து விடுகிறேன்’ என்ற அரசியின் வேண்டுகோளை
நிராகரிக்க முடியாமல், ஒரு மௌனப் புன்னகையோடு பார்த்தான். அவனுக்குத் தெரியாதா அரசியாருக்கு மலர்களின் மேல் எத்தனை ஆசை என்று
‘நல்லது அரசியாரே ! நான் காத்திருக்கிறேன் உள்ளே ‘ என்ற மன்னன் உள்ளே செல்ல, அரசி மலர் குவியலை நோக்கி நகர்ந்தாள்.
விதவிதமான வண்ணமலர்களால் மாலைகள் கட்டி அங்கே தொங்கவிடப்பட்டு இருந்தன. பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்க,மலர்களின் மணமோ அரசியாரின் மனதை மயக்க ஆரம்பித்தது . மயக்கத்தில் ஆழ்ந்து போன அரசியாருக்கு அவற்றை எடுத்து முகர்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று.இருப்பினும் மனதை கட்டுப் படுத்திக் கொண்டாள்.
விறுவிறுவென்று மாலைகள் கட்டிக் கொண்டு இருந்தவர்களைப் பார்த்தாள். எல்லோரும் சிவப்பழங்களாகவே காட்சி கொடுத்தனர். வாயில் ‘ஓம் நமச்சிவாய’ எனும் மந்திரத்தை ஓதிக்கொண்டே,தமது வேலைகளில் மூழ்கிக் கிடந்தனர்.
ஒவ்வொரு மலர் குவியலையும் ஆச்சரித்தோடு பார்த்துக் கொண்டே சென்றாள். யாரும் அரசியார் என்பதைக் கூட கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. கடைசி மலர்குவியலைக் கண்டவள் அப்படியே அதிசயத்து நின்று விட்டாள். அத்தனை அழகாக இருந்தன அந்த மலர்கள். கையில் எடுத்துப் பார்க்க வேண்டும் என மனம் குறுகுறுத்து. அவளால் தனது மனதை கட்டுப் படுத்த முடியவில்லை. சட்டென்று ஒரு மலரை எடுத்து மூக்கில் வைத்து விட்டாள். அந்த மணத்திலே அப்படியே கிறங்கி நின்று விட்டாள்.
இதனை பார்த்து விட்ட செருத்துணை நாயனார் என்னும் சிவத் தொண்டர் ஆத்திரம் கொண்டார்.இறைவனுக்குப் படைக்கப் பட வேண்டிய மலர் ஒன்றினை எடுத்து முகர்ந்து பார்த்து, புனிதத்தைக் கெடுத்து விட்டாளே என்ற ஆத்திரத்தில், தன் கையில், மாலை கட்டப் பயன்படுத்தப் படும் வாழை நாரினை கிழிப்பதற்காக வைத்திருந்த கத்தியால் , அரசி என்றும் பாராமல் , அவளது மூக்கினை வெட்டி விட்டார்.
‘ஐயோ !’ என்று அலறிய அரசியாரின் குரலைக் கேட்ட மற்ற மக்களெல்லாம் அங்கே கூடிவிட்டார்கள்.அரசியாரின் மூக்கை சிவனடியார் அரிந்து விட்டாரே,என்ன நடக்குமோ ? என்று மக்கள் பயந்து கொண்டிருக்க,சிவனடியாரோ எதுவுமே நடவாதது போல தன்னுடைய பணியில் இறங்கி விட்டார்.
இதற்குள் செய்தி கோவில் முழுவதும் பரவ, கேள்விப் பட்ட மன்னனும் அங்கே விரைந்து வந்தான். வந்த மன்னன் , இரத்தம் வழிய நின்ற அரசியாரிடம் எதுவும் கேட்டாமல், சிவனடியாரை கூப்பிட்டு ‘ இங்கே என்ன நடந்தது?’ என்றான்.
‘மன்னா தாங்களோ சிவ பக்தர். தங்களுக்குத் தெரியும் இறைவனுக்குப் படைக்கவிருக்கும் மலர்கள் எத்தனை புனிதமானதென்று..ஆனால் சிவனையே வணங்காத ஒரு பெண்மணி , சமணமதத்தைத் தாய் மதமாகக் கொண்டவள் அதனை முகர்ந்து பார்ப்பது இழுக்கு அல்லவா ?அதனால்தான் முகர்ந்து பார்த்த மூக்கை அரிந்தேன் ‘ என்றார் அந்த சிவனடியார்.
மன்னனுக்கு பளிச்சென நடந்திருப்பது என்னவென்று புரிந்தது . அரசியாரின் மலர்களின் மேல் உள்ள மோகத்தை அறிந்த மன்னன் தவறு எது என்பதை உணர்ந்தான்.அவனும் ஒரு தீவிர சிவபக்தன் அல்லவா? பக்தி அவன் கண்ணையும் மறைக்காமலா போகும்.மன்னனின் மனதிலும் பக்தி வெறி கொள்ளத் தொடங்கியது. அரசி என்பதுவும் அவன் மனது மறந்து போனது.
‘சிவனடியாரே !சமண மதத்தவர்களுக்கு சைவ மதத்தின் புனிதம் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். இருந்தாலும் நடந்திருப்பது மன்னிக்க முடியாத தெய்வ குற்றம். குற்றம் புரிந்தவர் யாராக இருந்தாலும் அதற்குரிய தண்டனையை பெற்றுத்தான் தீரவேண்டும்.. சிவனடியாரே ... மலரினை முகர்ந்த மூக்கை நீங்கள் அரிந்தது சரிதான் என்றாலும், மலர்களை எடுத்துக் கொடுத்த கரத்தினுக்கு தண்டனை தராமல் விட்டு விட்டீர்களே !’ என்றவன், உடைவாளை எடுத்து, அரசியாரின் வலது கையினை
மணிக்கட்டுக் கீழே துண்டாக வெட்டி எறிந்து விட்டான்.
இரத்தம் சொட்ட சொட்ட வலியால் துடித்த அரசியார் அப்படியே மயங்கித் தரையில் விழுந்து விட்டார். ஆத்திரமும் வெறியும் அடங்கியபின் அறிவு வேலை செய்யுமல்லவா ?மதத்தின் மேல் கொண்ட வெறியால் ,மனைவி என்றும் பாராமல் கையினைத் துண்டித்து விட்டதைக் கண்டு மனது துடித்தது. இருப்பினும் அவனால் அதனை வெளிப்படுத்திக் கொள்ள இயவில்லை. அப்படி வெளிப்படுத்துவது மன்னனுக்கு உகந்ததல்ல என எண்ணியவன், அரண்மனை வைத்தியரை அழைத்து, வேண்டிய மருத்துவம் பார்க்கப் பணித்தான்.
மதத்திற்கு இத்தனை அடிமையாகவா அன்று இருந்தோம். அன்பை விட சிறந்த மதம் வேறொன்றில்லை என்பதை மறந்து கிடந்த தனக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று எண்ணிய மன்னனின்.மன ஓட்டத்தை அறிந்த அரசியார்,தனது அதரத்தால் அவனது கன்னத்தை நனைத்து, தனது அன்பை வெளிப்படுத்தினார்.
*********************************************