ஒளிக்கீற்று

ஒளிக்கீற்று

சமய இழைகளில்
இளைப்பாறிக் கிடந்த
கீழிருந்த கிழக்கையும்
மேலிருந்த மேற்கையும்
செறிவுமிகு
சுடர் பேச்சால்
இணைத்து வைத்த
உலகின்
முதல் இணையம்!

கிழக்கு தேசத்தினர்
கீழ்
கீழ் சேவகம்
புரிந்த தேசத்தினரை
எழுப்பிய
எழுச்சி சூரியன்!

பழமைச்சிறையில்
உழன்றவர்களை
ஞானச்செருக்கால்
நிமிரச் செய்த
புதுப்புனல்!

ஆண்டாண்டுகளாய்
அடிமை சாசன
இல்லங்களில்
தவமிருந்த
குலவிளக்குகளை
விடுவித்திட
வீரநெறியூட்டிய
விடிவெள்ளி!

மண்மூடி
கண்மூடி
புதையுண்டு கிடந்த
'தன்னையறிதல்'
எனும்
கல்விப்
புதையலை
புரட்டியெழுப்பிய
புரட்சிப்புயல்

'மனிதர்களே!
இறைகள்
பூசைகளால்
மட்டும்
நிறைவு பெறுவதில்லை.
செறிவுமிகு
மனிதச்
சேவையினாலும்
நிறைவெய்துகின்றன.
ஆதலால்
சேவை செய்து
பிழைப்பீர்'
என்றுறைத்த
இளம்
ஞானக்கிழமை!

இளைய ஞாயிறுகளால் மட்டும்
ஞாயிறுகளை
புரட்ட
முடியும் என நம்பிய
முதலும் கடைசியுமான
காவி ஞாயிறு!

அன்று
பிச்சைக்காரர்களின்
கூடாராமாகப் பார்க்கப்பட்ட
தேசம்
இன்று
இறையாண்மையால்
உலகத்தை
ஆளும்
ஆளுமை!

உலகெங்கும்
உலாவருகின்றன
அறிவுச்சிறகுகளோடு
இளைய பறவைகள்!

இனி
இந்த தேசத்தின்
ஒளிக்கீற்றுகள்
இன்றி
புலராது
புவி!


வீர
விவேகானந்தருக்கு
இந்த தேசம்
சூரியனையே
பூமாலையாகச்
சூட்டி
மகிழ்கிறது
இன்னாளில்!

- சாமி எழிலன்
12 01 2019

எழுதியவர் : சாமி எழிலன் (12-Jan-19, 5:49 am)
சேர்த்தது : Saami Ezhilan
பார்வை : 80

மேலே