அம்மா என்றால் அன்பு
#அம்மா என்றால் அன்பு..!
அன்புக் கலவையில்
ஆண்டவன் அமைத்த கோவில்
நம்மை நடமாட வைத்த
நடமாடும் தெய்வம்
அம்மா..!
சினை பிடித்தபோது
நம்மை சிறை பிடித்தவள்
கருவறைக்குள்..!
அன்பு உட்புகுந்தது
முதல் முதலாய்
தொப்புள்கொடி வழியே..!
ருசி பார்த்து உண்பவளை
பசியில் தவிக்க விட்டோம்
கருவறையில் நம் அசைவுகளில்
அம்மா உண்டதெல்லாம்
உமட்டல்களாய்..
கடிந்துகொண்டதில்லை
மயக்கமென்றாலும்
அடிவயிறு தொட்டுப் பார்த்து
ஆனந்தம் கொண்டவள்..!
உலகமகா உச்ச வலி
நாம் உலகம் காண
அவளுக்கு அளித்தது..
நமக்கு முதல் ஜனனம்
அம்மாவிற்கோ இரண்டாவது..!
ஜனித்த கணத்தில்
நம் அழுகை
ஆனந்திக்கிறாள்
வலிகளை விரட்டி...
அள்ளி அணைக்கிறாள்
அன்பு அணை உடைத்த வெள்ளமாய்..!
இன்னமும் வற்றவில்லை
அந்த அன்பு வெள்ளம்
மிதக்கிறோம் மகிழ்ச்சியோடு..!
நம் மனம் அவளின் கையேடு
மொழியின்றி படிப்பாள்
நம் அசைவுகளின் அர்த்தம் காணும்
அகராதி அவள்..
விழி கண்டு வழி கூறும்
குருகுல ஆசான்..!
தேவைகளை பூர்த்தி செய்யும்
கற்பக விருட்சம்
தவமின்றி பெற்ற வரம்..!
நம் கண்களில் தூசி என்றால்
அவள் கண்களில் ஆணி
நமக்கு பிணி என்றால்
அவளின் அரற்றல்..!
ஒப்புமை அற்றது
அம்மாவின் அன்பு..!
முடிவிலா அன்பு
அவள் முடியும் வரையில்
அல்லது
நாம் முடியும் வரையில்..!
===================================
அன்னையர் தின வாழ்த்துக்களுடன்..!
#சொ. சாந்தி-
===================================