வரம்

வரம்

உள்ளத்தில் அன்புவைத்து உயிர்வரையில் எனையின்ப
வெள்ளத்தில் நீந்தவிட்டு வியப்பென்னும் கடலுக்குள்
தள்ளித்தான் விடுபவளே தாளாத நெஞ்சமதை
சொல்லத்தான் வேண்டுமடி சொல்கிடைக்க வேண்டுமடி!

தவமிருந்துப் பெற்றதுபோல் தன்னிறைவைத் தருகின்ற
நவமணியே எனதன்பு நல்லாளே என்மனதை
கவர்ந்திழுக்கும் உன்னுடைய நறுங்கூந்தல் சூட்டுகின்ற
பவழமல்லி போலுன்றன் பார்வையிலே மணக்கின்றேன்!

விவரங்கள் தெரியாத வெகுளிநீயும் அறியாமல்
தவறுகள்நான் செய்தாலும் தண்டிக்க யெண்ணாமல்
கவலைகளைப் போக்குதற்கே கைநீட்டி அணைத்திடுவாய்
கவிழ்ந்தயென் முகமெடுத்து கண்ணீரைத் துடைத்திடுவாய்!

கவலையிலே நானுறைந்து கடுகளவு வாடினாலும்
கவனிக்கத் தவறாத கவின்மிகுந்த களஞ்சியமே
இவனுக்கும் துளியளவு ஈரமுள்ள காரணமே
இவன்நிற்கும் திசையிலெழும் இதயவொளி தோரணமே!

புவிக்குமலர் வனம்போல பொற்சிலம்பு ஒலிபோல
தவிக்கும்மனம் தேடிதலை சாயுமன்பு தோள்போல
சிவக்குமந்தி வேளைமுகம் சிரிக்கும்மதி போலிந்த
கவிக்குவாழ்வு கொடுக்கவந்த கலைமகளும் நீயன்றோ!


நவிழ்ந்தாடும் மனக்குளத்து நற்றாமரை இதழென்மேல்
குவிந்தாடச் செய்கையிலே கூவிளம்போல் நேர்நிரையில்
கவிழ்ந்தாடச் செய்யுமடி கண்மணியே உனதன்பில்
தவழ்ந்தாடச் செய்யுமடி சாரல்மழை பெய்யுமடி!

ஆதியினை தந்தயெனது அன்னைக்கு அடுத்தபடி
சோதியென வந்தவளே சுடருதிரும் புன்னகையில்
கோதியெனை நின்றவளே கோபங்கள் குறையும்குளிர்
வேதியலைத் தந்தவளே போதுமடி என்மயிலே!

சினம்கொள்ளும் போதெல்லாம் சிரிக்கும்மலர் முகம்காட்டி
புனல்நீராய் என்மனதைப் பொறுமைகொள்ளச் செய்யுமென்றன்
இனியவளே! வரமாக என்வாழ்வில் வந்தவளே
மனக்குழியில் பதியமிட்ட மகிழ்வென்னில் நீளுதடி!

எதுவந்த போதுமங்கு எனைத்தாங்க நீயிருக்க
அதுபோதும் அன்புகொண்ட ஆருயிரே என்கவலை
நதியபோல ஓடிவிடும் நாமிணைந்த பயணிக்க
இதுபோதும் இன்னுமென்ன இந்தவொரு வரம்போதும்!

கவியன்புடன்
தேன்மொழியன்
பெங்களூர்
9900458494

எழுதியவர் : கவிஞர் தேன்மொழியன் பெங்க (9-Jul-19, 2:33 pm)
சேர்த்தது : Theanmozhiyan
பார்வை : 161

மேலே