காலம் மறு ஜனனப் பாதையில்
காலச்சக்கரம் வறண்ட பாதையை கடக்கும் போது
மனம் வண்ணத்துப்பூச்சியாய் சிறகடித்து
வசந்த மண்டபத்தில் நம்மை அமர வைக்கிறது
வாடி வதங்கி உதிர்ந்த மலர்கள் போல்
வண்ணம் குறைந்தாலும் வாசம் நிறைந்து வீசி
எண்ண மழுங்கலை பட்டைத்தீட்டுகிறது
ஆன்மாவை துறந்த உடலாய் உழன்ற மனம்
ஆகாய கங்கையை எட்டிப் பிடிக்க முனைகிறது
ஆலவிழுது போல் பக்கத்துணையாய் அரவணைத்து தாங்க விழைகிறது
சாரையின் சலசலப்பாய் துவங்கிய கேவல்கள்
சர்வவல்ல சாகர அலைகளாய்
அடங்காது ஆர்ப்பரித்து ஆன்மாவை துளிர்க்கிறது
புதுசுனையில் சுரந்த நீரூற்று
புதுவெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடி
புவி சாம்ராஜ்ய சக்ரவர்த்தியாய் எனை
கவிசிம்மாசனத்தில் கொலு வைத்து
கற்பனை தர்பாரில் திளைக்கவைக்கிறது
வறண்ட பாதையெங்கும்
கற்பனைவிதை வேரூன்ற
வசந்தமண்டம் கவிதைப் பூக்களாய் பூத்துக் குலுங்கி
காலம் மறு ஜனனப் பாதையில் சுழல்கிறது
கவிதாயினி அமுதா பொற்கொடி