ஆண்மகனின் வெட்கம்
ஆண்மகனின் வெட்கம்.....
பலமுறை பார்த்துப் பழகிய முகம்
பேசியே கழித்தக் காலமோ பலயுகம்
பவித்திரமான பார்வை பரிமாற்றம்...
பாவையென் உள்ளம் படிப்படியாய் படிந்தது.....
பாறை இடுக்கில் முடங்கிய ஆலவிதை
பருவச் சாரலில் முளையிட்டது போல்
முதலாய் முந்தி என் காதலை உரைத்தேன்
ஆஹா! எத்தனை வெட்கம் அந்த ஆண்மகனிடம்
பக்கவாட்டில் இலகுவாய் தலையை சாய்த்து
குறுகுறு மீசையில் பதுங்கிய இதழில்
சிறிதாய் மேவாயை தடவி புன்னகைத்து
ஆகாச நெற்றியில் வீழ்ந்த கேசத்தை
அழகாய் தன் கரங்களால் கோதியபடி
அஜானுபாகுவான தோள்பட்டை
அகன்ற விரிந்த மார்பகத்துடன்
வலிய அவன் அணைப்பில் சரணாக
வா..வா என்று எனை அழைப்பதுபோல்
குறும்புப் பார்வையில் வசீகரித்தான்
அடுமனை அவன் அருகில் நெருங்கி
விழிகளில் என் தாபத்தை மொழிபெயர்த்தேன்
தகித்து தாளாது இமை தாழ்த்தி
வெட்கி புன்னகை உதிர்த்தான்....
ஆண்மகனின் வெட்கம் கூட
ஆய்மகளுக்குள் வேட்கை தூண்டலோ...?