சேயும்நான் செய்திடுவேன்
--------------------------------------------
கவிதை எழுத நினைத்து
வார்த்தைகளைத் தேடினேன்
எண்ணத்தில் சிதறிக்கிடந்த
எழுத்துக்களை அழைத்தேன் !
முரண்டுப் பிடித்தன
முரட்டுக் காளைகளாய்
ஒன்றுசேர மறுத்தன
ஒற்றுமையாய் நின்றன !
காரணத்தைக் கேட்டதும்
கோபத்தில் கொந்தளித்தன
ஓய்வென்று ஒதுங்குகிறாய்
தேவையெனில் அழைக்கிறாய் !
அடிமைகளல்ல நாங்கள்
அடிபணிந்து ஓடிவர
உயிர்மெய் உள்ளவர்கள்
உலகினில் மூத்தவர்கள் !
இலக்கணம் வகுத்தவர்கள்
இலக்கியத்தில் சிறந்தவர்கள்
இமயமளவு உயர்ந்தவர்கள்
இப்புவனம் புகழ்பவர்கள் !
சிந்தையை உழுதிடுக
சிந்தனையை விரித்திடுக
கவிதைகள் படைத்திடுக
கவிவானில் பறந்திடுக !
தாய்மொழி எனக்குரைத்த
வாய்மொழி அறிவுரையிது
தமிழன்னை ஆணையேற்று
சேயும்நான் செய்திடுவேன் !
-----------------------------------------------
பழனி குமார்
14.02.2020