பன்னிருசீர்ச் சந்த விருத்தம்
பாலோடு பாயசம் பரிவோடு நான்தரப்
பருகநீ யோடிவருவாய் !
பாராத தேனடா? கோபமேன் கூறடா
பரிவுடன் தேடிவருவாய் !
காலோடு தண்டையின் கலகலெனு மொலியிலே
கல்மனமு முருகநின்றேன் !
காதிலுன் நாமமே கேட்டவுட னன்பிலே
கண்களும் பொழியநின்றேன் !
மாலோனை நெஞ்சிலே நித்தமும் பூசித்து
மன்றாடி நெக்குருகுவேன் !
மாதவா மாயவா கோவிந்த கேசவா
மகிழ்வுடன் பாட்டிசைப்பேன் !
தாலாட்டு நான்பாட நீகேட்டு விழிமூடு
தாயாக அன்புசெய்வேன் !
தாமரைப் பாதத்தை முத்தமிட் டாசையில்
தாவியே உனையணைப்பேன் !
கண்ணனே உன்னைநான் கண்டதும் துள்ளியே
கைகூப்பி வருகவென்பேன் !
கார்முகில் வண்ணனே ! கோகுலச் செல்வனே!
கனிவோடு புன்னகைப்பேன் !
எண்ணிலா ஆசைகள் நெஞ்சிலே உழலுதே
என்மனம் யாரறிவரோ ?
இனியனே சொல்லடா ! கெஞ்சினேன் கொஞ்சினேன்
இன்னுமேன் இளகவிலைநீ ?
புண்ணான உள்ளமும் பூரித்து மகிழவே
பூவோடு மணமாகவா !
புதிரான நோய்த்தொற்றை எளிதாக ஊதியே
பூண்டோடு கொல்லநீவா !
வண்டமிழ்த் தேன்பருக வடிவாக இக்கணம்
மறவாது குழலூதிவா !
மண்ணிலே மக்களின் துயர்களை ஒழித்திட
மருந்தென நீவருகவே !!
( பன்னிருசீர்ச் சந்த விருத்தம்)
சியாமளா ராஜசேகர்