எது உயர்வு

ஏற்றத் தாழ்வை போதிக்கும்
ஏதுமிங்கே கொடும் விடமாம்
சமத்துவத்தை போதிக்கும் - அது
சத்தியத்தின் ஒலி குரலாம்.


பிறப்பால் உயர்ந்தவர் எவருமில்லை
இறப்பினில் உயர்ந்தவர் பலருமுண்டு
கறுப்பா சிவப்பா என்றெல்லாம்
காலன் கணக்கு பார்ப்பதில்லை.

ஆபத்துக் குதவும் செங்குருதி
ஆங்கே பார்ப்பதில்லை குலம்சாதி
காற்றில் கரையும் சுவாசங்களில்
காட்டிட இயலுமோ உன்சாதி?

குலத்தினில் உயர்ந்தவன் நானென்றால்
குணத்தினில் தாழ்ந்தே போய்விடுவாய்
குலத்தினில் தாழ்ந்தவன் நானென்றால்
சுயத்தை நீயே இழித்திடுவாய்!

எண்ணம் செயல் உயர்வானால்
எல்லாம் இங்கே உயர்வாகும்
விண்ணும் மண்ணும் எப்பொழுதும்
உன்னை வாழ்த்திக் கொண்டாடும்!

மனிதன் என்பதுதான் அடையாளம்
மற்றன வெல்லாம் வெளிவேடம்
அணிகின்ற ஆடை யது
அகத் தினைத்தான் காட்டிடுமோ?

வெறுப்பை நீயும் விதைத்திட்டால்
வெறுப்பைத் தானே அறுத்திடுவாய்
அன்பை நீயும் விதைத்திடுவாய்
ஆலமரம் போல் வாழ்ந்திடுவாய்!

ஏற்றத்தாழ்வை வீண் திணிக்கும்
எதையும் எட்டி உதைத்திடுவாய்
மானம் உள்ள மானிடனாய்
மகிழ்வோடு நீ வாழ்ந்திடுவாய்!

------------------------—---------------------------------------------------

எழுதியவர் : சு. அப்துல் கரீம், மதுரை (28-Jun-20, 11:14 pm)
Tanglish : ethu uyarvu
பார்வை : 387

மேலே