இளம் சமுதாயம் எங்கே போகிறது
சென்ற கல்வி ஆண்டில் ஒருமுறை ஒருநாள் பணியிடை பயிற்சி.... ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச பயிற்சி அளிப்பதற்காக நடத்தப்பட்டது.... நானும் எம்பள்ளி ஆசிரியர் திருமதி.கிருஷ்ணவேணி அவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டோம்... ஒரு மணிநேரம் மதிய உணவு இடைவேளை.... வீடுவரை சென்று திரும்பலாம் என்று வேகமாகப் போய்கொண்டுருந்தேன்... வர வேண்டிய ஆட்டோ தாமதிக்க.... நடைபாதையில் ஓரமாய் காத்து நின்றேன்....
சற்று தூரத்தில் எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்புவரை முடித்து வேறு பள்ளியில் அந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பு சேர்ந்திருந்த மாணவன்.... அவன் நண்பனோடு என்னை நோக்கி வந்து கொண்டிருந்தான் .... எங்க ஹெச்சம் மிஸ்டா என்று என்னை அறிமுகப்படுத்தியபடியே அருகில் வர.... அதற்குள் ஆட்டோ வந்துவிட்டது....
அதற்குள் எம் பள்ளி மாணவன் நெருங்கி...
“மிஸ் எப்டி இருக்கிங்க” என்று ஆவலாய் கேட்டான் ...
ஆனால் அவன் அருகில் நின்ற அவன் தோழனோ .... என்னை ஏளனமாகப் பார்த்து.. கெக்க பெக்க என்று சிரித்துக் கொண்டே நின்றான்.... எம் மாணவனோ... அவன் குரலை தாழ்த்தி....
“டேய் சிரிக்காதடா... ப்ளீஸ் சிரிக்காதடா... எங்க ஹெச்சம் மிஸ்டா அவங்க” என்று கெஞ்சினான்.... ஆனால் அந்த மணவனோ... கெஞ்ச கெஞ்ச இன்னும் குரலை உயர்த்தி... என்னை ஓரக்கண்ணால பார்த்துவிட்டு.... மீண்டும் பல்லைக் காட்டி கேலியாக சிரித்தவண்ணமே நின்றான்.... ஏதோ கல்லூரி மாணவர்கள் இளம் பெண்களை டீஸ் செய்வார்களே ,அதைப்போல் இருந்தது அவன் நடவடிக்கை....
எனக்குக் கோபம் தலைக்குமேல் ஏறியது... பளார் என்று கன்னத்தில் ஒன்று அறைந்து விடலாமா என்றுத் தோன்றியது ...
ஆனால் அவனை கண்டிக்க நாம் யார்.... ?
அப்படியே கண்டித்தாலும், அவன் கேட்கப்போவதில்லை.... நமக்குத்தான் நடுத் தெருவில் அவமானம் .... இப்போதெல்லாம் , வகுப்பில் மாணவர்கள் தவறு செய்தாலே அவர்களை கண்டிக்க ஆசிரியர்களுக்கு உரிமை இல்லை..... அப்படி இருக்க இவனை கண்டிக்க நாம் யார்?
ஆனால் அதற்காக ஆசையாய் ஓடிவந்த எம் பள்ளி மாணவனை நான் உதாசீனம் செய்துவிடக் கூடாதல்லவா..?
அதனால் ஆட்டோ ஓட்டுநரை சற்று பொறுத்திருக்கும்படி கையசைத்துவிட்டு.....
எம் பள்ளி மாணவனை நலம் விசாரித்துவிட்டு...அவனை நன்றாகப் படிக்கும்படி அறிவுறுத்தி ஆட்டோவில் கிளம்பினேன்... அதுவரையிலும் அந்த உடன் வந்த நண்பன் சிரிப்பை அடக்கவே இல்லை.....
வீடு செல்லும்வரை அந்த மாணவனின் மரியாதையற்றச் செயலே மனதில் ஓடிக்கொண்டிருந்தது.... ஒரு ஆசிரியர் என்று வேண்டாம்,வயதில் பெரியவர்கள் என்றுக்கூட அவனுக்கு ஏன் தோன்றவில்லை..... ?
இந்த இளைய சமுதாயம் எதை நோக்கிப் போய்கொண்டிருக்கிறது?
இவர்களுக்கு தரமான கல்வியை போதிக்க பிரயத்தனப்படும் நாம்... சரியான ஒழுக்கத்தை கற்றுத்தர தவறிவிட்டோம் என்றுதான் தோன்றுகிறது.... பெற்றோரும் பிள்ளைகளின் தேர்வு மதிப்பெண்ணைப் பற்றி மட்டுமே அக்கறைப்படுகிறார்கள்...ஒழுக்கத்தின் நன்மதிப்பை உணர்வதே இல்லை.
சிறுவயதில் நடந்த ஒரு நிகழ்வு நினைவிற்கு வந்தது.....
அன்று தம்பி இசைவாணன் “ஆசிரியரே என் வழிகாட்டி” என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியில் பேச ஆயத்தமாய் கொண்டிருந்தான் . பயிற்சி அளித்துக் கொண்டிருந்த என் தந்தை ஒரு சம்பவத்தை எங்களுக்கு விளக்கினார்....
“அப்போது பிரஞ்சுப் புரட்சி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது.... மக்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்...
ஃபெர்டினாட் என்ற பிரஞ்சுச் சிறுவனும் தன் பெற்றோருடன் கப்பலில் நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தான் .... அவனுக்கோ கடுமையான பசி.... எதிரில் இரு ஜெர்மானியர்கள் ரொட்டித் துண்டுகளை உண்ணத் தொடங்கினர்... பசிக் கொடுமையில் ஃபெர்டினாட் அந்த ஜெர்மானியர்களை ஏக்கத்தோடு பார்த்தான்.... அதைப் பார்த்து இரக்கப்பட்ட அவர்கள் .... சிறுவனுக்கு ஒரு ரொட்டித் துண்டை வழங்கினர்.... அதை ஆவலுடன் கடித்து உண்ணத் தொடங்கிய ஃபெர்டினான்டை பார்த்து....
ஒரு சிறுவனுக்கு ரொட்டித் துண்டுகூட கொடுக்க இயலாத பிரஞ்சும் ஒரு நாடா? என்று ஏளனமாகப் பேசினர்... அதைக் கேட்ட ஃபெர்டினான்டு வெகுண்டு... தன் கையில் வைத்திருந்த ரொட்டித் துண்டை கீழே வீசினான்... தன் வாயில் உள்ளத் ரொட்டித் துண்டையும் துப்பினான்....
உடன் பயணம் செய்து,இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவன் ஆசிரியர்.. “Well done Ferdinand” நீ மட்டும் அந்த ரொட்டித் துண்டை உண்டிருப்பாயானால்... என் கைத்துப்பாக்கிக்கு இரையாகி இருப்பாய்.... அதுமட்டுமின்றி உனக்கு நாட்டுப்பற்றை ஒழுங்காய் போதிக்காத நானும் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு மாய்ந்திருப்பேன்” என்று பெறுமிதமாய் எக்காளமிட்டார்” இதை கேட்கும்போதே எங்களுக்கொல்லாம் உடம்பு புல்லரித்தது....
எப்படிப்பட்ட ஆசிரியர்..,?
எப்படிப்பட்ட மாணவன்...?
ஆசிரியருக்கு எவ்வளவு உரிமைகள் இருந்தது...?
மாணவர்கள் எவ்வளவு மரியாதை ஆசிரியர்கள் மீது வைத்திருந்தனர்...?
எல்லாம் இன்று கேள்விக்குறியே..... இந்த நிலையில் இளம் சமுதாயத்தினரின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும்?
????????????

