அப்பா
*அப்பா*
#########
அப்பா உன்னைப் போல
எனக்கு யாருமில்ல
நீ இல்லாமல் என்
மனம் இன்னும் தூங்கவில்ல
கண்ணுக்குள் கண்ணீரும்
கூப்பிடுது அப்பானு
மனசு விழிச்சா
கேட்குது அப்பானு
நினைவுகள் தூங்காமல்
தேடுது அப்பானு
அப்பா எப்ப வருவீங்க
கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க
எப்ப நான் அழைச்சாலும்
சிரிச்சுப் பேசுவாயே!
என்னமா சாப்பிட்டேனு
அன்பா கேட்பாயே!
குரல் மாறிப்போனாலும்
என்னமானு பதறுவாயே!
குமுறி அழுகிறேன்
பேசாமல் தூங்குகிறாயே!
அப்பா உன்னைப் போல
எனக்கு யாருமில்ல
நீ இல்லாமல் என்
மனம் இன்னும் தூங்கவில்ல
உன் கைவிரல் நான் பிடிச்சு
நடந்தச் சாலையில
நித்தம் தேடிப்பார்க்குறேன்
உன் பாதம் காணலையே!
எங்கு நீ போனாலும்
சொல்லிட்டுப் போவாயே!
இப்போது மட்டும் ஏன்
சொல்லாமல் போனாயே!
அம்மாவைப் பிரிந்து நீங்க
எப்படிப் போனீங்க
கொஞ்சம் நேரமானாலும்
அம்மாவைத் தேடுவீங்க
உன்னோட நேசமெல்லாம்
உள்ளத்தில இருக்கு அப்பா
நீங்க வீட்டுக்கு வரவில்லைனா
அம்மா மனம் பரிதவிக்கும் அப்பா
அப்பா உன்னைப் போல
எனக்கு யாருமில்ல
நீ இல்லாமல் என்
மனம் இன்னும் தூங்கவில்ல
கைப்பிடித்த நாள் முதலா
கலங்கவில்ல அம்மா
கதறி அழுகிறாங்க
என்னனு கேளுங்க அப்பா
வீட்டுக்குள் கோவிலைக் கண்டேன்
உன்னால் தானே அப்பா
அம்மா வணங்கும் சாமி
நீங்க தானே அப்பா
ஆசையா வளர்த்தச்செடி
தண்ணீர் இன்றி வாடுது
ஓட்டிய வண்டியும்
ஓரமாய் நின்று அழுகுது
பெட்டியில் இருக்கும் சட்டை
பெயர் இன்னும் மறையல அப்பா
பெட்டிக்குள் நீங்கள் வந்ததும்
பெயர் மாறிப்போனதேன் அப்பா
அப்பா உன்னைப் போல
எனக்கு யாருமில்ல
நீ இல்லாமல் என்
மனம் இன்னும் தூங்கவில்ல
தங்கள் நினைவில் வாழும்
அன்பு மகள்
#சரவிபி_ரோசிசந்திரா