மகளுக்காக தந்தையின் கடிதம்
அன்பு மகளே..
..........................
கள்ளமில்லா காதலிலும்
உச்சமான உணர்ச்சியிலும்
உயிரணுவில் உயிரானவளே,
உன்னை கையிலேந்த
உலகமே உள்ளங்கையில் உணர்ந்தேன்...
என் வாழ்வின் அர்த்தமென
அள்ளி அணைக்க
அருகிலோர் குரல்
அட.... பொட்ட புள்ள...
இந்த உலகம்
ஆண்களை இறகுகளுடனும்
பெண்களை ரோமங்களுடனும்
பறக்க செய்யும்
விந்தை உலகம்..
ஒழுக்கம் என்னும்
தங்கச் சங்கிலி
உன் கழுத்துக்கு
மட்டுமே அழகென
மெச்சும்...
குடும்ப கௌரவம்
உன் கைகளில் தானென
கால்களின் வெள்ளி
விளங்கிடுவார்..
மகளே..
நீ பூப்பெய்ததும்
சொந்த பந்தம்
ஆனந்தமாய் தலைநிமிரும்
ஆனால் உன்னை மட்டும்
தலைகுனிந்து நடக்கச் சொல்லும்..
மாதம் மூன்று நாட்கள்
வலியின் உச்சம்
மிச்சமாய் முத்தமிடும்...
நதிகளுக்கும், புயல்களுக்கும்
பெண்ணின் பெயர்சூட்டி
போற்றும் மக்கள்
மாதவிடாய் நாட்களில்
தீட்டாய் உன்னை
தூற்றுவார்கள்..
இந்த சமூகம்
ஆணாதிக்கம் அடைகாக்கும்
பெண்ணடிமைத்தனத்தின் கரு...
வீடுமட்டுமே உலகமென
உன்னை நம்பச்செய்வார்கள் ,
சமைத்தலும், துவைத்தலும்
கடமையென செய்யச்சொல்லும்..
பெண்ணுரிமை பேசும் சிலரோ,
உன்னை வெளியே
பேனாவுடன் பள்ளிக்கு
அனுப்பியும்,
வீட்டில் சமையல் கரண்டி
கொடுத்தும் ,
புரட்சி செய்வார்கள்
உன் உடை மட்டுமே
உன்னை தீர்மானிப்பதாய்
உணரும் சிலரோ
நீ துப்பட்டா மறுத்தால்
உனக்கு ஊர்கூடி
பட்டங்கள் சூட்டுவார்கள்..
நீ நல்ல பெண்ணென
பட்டம் பெற
வாழ்நாள் முழுவதும்
கற்பு என்னும் கூண்டில்
அடைக்கபட்டே வாழ்வாய்..
கற்பு என்னும் வார்த்தை
ஆண்களின் அகராதியிலும்
கிடையாது மகளே..
உன்மீது வெறுப்பு வீசும்
ஆண்களை கூட நம்பு,
அவர்கள் வெறுப்பை
கொட்டி விட்டு
விலகிச் செல்வார்கள்..
ஆனால் ஆறுதல் கூறும்
சில ஆண்களிடம்
கவனமாக இரு..
அவர்களே உன்னை அடைய விரும்புவார்கள்
அன்பிற்கும் அழகிற்கும்
காதலுக்கும் காமத்திற்கும்
வித்தியாசம் அறிந்துகொள்
ஏனெனில் அழகில் வீழ்ந்து
காமத்தால் காதலென
உன்பின்னே வருவோர் பல,
மறுத்தால் ஆசிட் வீசுவோர் சிலர்...
மதங்கள் இங்கே
மௌனம் காக்கும் மகளே..
ஆண்களுக்கு இங்கு
பருதா கண்டுபிடிக்கபடவில்லை..
அருட்சகோதரி இன்னும்
ஆயர் ஆகும் அளவிற்கு
துறவறம் அங்கீகரிக்கப்படவில்லை
கோவில் கருவறையில்
இன்னும் பெண்கள்
மந்திரம் ஓதவில்லை..
மதங்கள் இங்கே
பெண்ணடிமையாக வைக்கிறது மகளே...
இவ்வாறாக சமுதாயம் இயங்க..
வா மகளே..
உயிர்கள் அனைத்தையும் நேசி,
மரங்களுடன் பேசு,
விலங்குகளுடன் விளையாடு ,
மண்ணில் புரண்டு ஆடு
உன் வாழ்க்கையை
நீயே வாழ்..
உன்னுடன் நாங்கள் வருகின்றோம் மகளே..
வா... மகளே..