குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

அம்மாவும் அந்நியமாய் போவார்
உச்சி முகர்ந்த உதடுகளால்-நம் உள்ளம் பண்பட வசைபாடிடும் வேளையில்...

அப்பாவும் அரக்கனாய்த் தெரிவார்
தேர் கண்டிட தோள்களில் ஏற்றிய கரங்களால்-நம்
தவறுகள் திருத்திட தண்டிக்கும் வேளையில்...

அக்காவும் அடுத்தவளாகிப் போவாள்
விட்டுக்கொடுத்து சலித்து-நம்
உள்ளம் பிடித்த பொருளுக்காய் விடாப்பிடியாய் நின்றிடும் வேளையில்...

தங்கையும் தன்னலக்காரியாய்த் தெரிவாள்
மழலைக் குரல் மறைந்து-நம்
மனதுக்கு பிடிக்கா மொழியில் கட்டளையிடும் வேளையில்...

அண்ணனும் தம்பியும் அன்பற்றோராய்த் தெரிவர்
வம்புச்சண்டைக்கு செல்லும்- நம் வழித்துணையாய் வரா வேளையில்...

நண்பர்களும்
துரோகியாய்த் தெரிவர்
பணமிருந்தும் மனமின்றி, மனமிருந்தும் பணமின்றி- நம் ஆபத்தில் உதவாத வேளையில்...

உறவுகள் உதவாதவர்களாய்த் தெரிவர்...
முகத்தில் நகைத்து அகத்துள் வெறுத்து-நம்
நம்பிக்கை உடைத்து தனிமரமாய்த் தவிக்க விடும் வேளையில்...

ஆம்...

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
உற்றார் உறவினரை ஒப்புக்காய் வைத்தல் நலம்...😊😊😊

எழுதியவர் : ராஜதுரை மணிமேகலை (21-Mar-21, 1:45 am)
சேர்த்தது : RajaduraiManimegalai
பார்வை : 662

மேலே