மாறிப்போனதும் ஏனோ

மாறிப்போனதும் ஏனோ ?

அலுவலக விஷயமாக கோயமுத்தூருக்கு வந்தவன் அப்படியே தங்கை வீட்டுக்கு போய் விட்டு வந்தால் என்ன என்னும் எண்ணத்தில் வந்திருந்தான்.
வாங்க, மாப்பிள்ளை உற்சாகமில்லாமல் சொன்னது போல் இவனுக்கு பட்டது. இருந்தாலும் மாப்பிள்ளை அல்லவா,
எப்படியிருக்கீங்க மாப்பிள்ளை?
ம்..ம்..நல்லாத்தான் இருக்கேன், நீங்க இருந்துட்டு போகணும், எனக்கு ஆபிசுக்கு நேரமாச்சு வரட்டுமா? அவசரமாய் கிளம்பினான். உண்மையிலேயே அவசரமா? இல்லை இவனை கழட்டி விட கிளம்புகிறானா தெரியவில்லை.
தங்கை வாண்னே, அழைத்தாலும் அவள் முகம் ஏனோ பொலிவில்லாமல் இருந்தது. அவள் மாமனார் எட்டி பார்த்தார். இவன் வணக்கம் சொன்னான். அவர் புன்சிரிப்புடன் வாங்க, வாங்க, சொன்னவர் வெளிப்புற வாசலை எட்டி பார்த்துக்கொண்டார். மனைவி எங்காவது வந்து விடுவாளோ என்கிற பயமாக கூட இருக்கலாம்.
எங்கம்மா உங்க மாமியார்? இவன் கேட்கவும், அவங்க கோயிலுக்கு போயிருக்காங்க, குரலில் காரம் பிசிறடித்தது.
மனதுக்குள் தங்கை கோபமாயிருப்பதாக பட்டது. என்ன விஷயம்? மாமனார், மாமியாருடன் ஒத்து போகவில்லையா? அல்லது கணவனுடன் ஏதாவது தகராறா?
யப்பாடி..மாமனார் ஒரு வழியாக வெளியில் சென்றார். தங்கையிடம் கேட்டான், என்னம்மா பிரச்சினை? ஏன் டல்லா இருக்கே?
ம்..ம்..முணங்கினாள், சும்மா சொல்லு, மாமியார் ஏதாவது சொன்னாங்களா? இல்லை உன் வீட்டுக்காரரு..?
அவருக்கென்ன? நம்ம கிட்டயும் நல்லவரா இருக்கணும், அவங்கம்மா அப்பாகிட்டயும் நல்லவரா இருக்கணும், இப்படி இருக்கற ஆளு கிட்ட நான் குடும்பம் நடத்தணும்..ம்..கண்கள் மெல்ல சிவந்தது.
இவனுக்கு தங்கையின் குணம் தெரிந்தது, அது மட்டுமல்ல, வீட்டில் வசதி குறைவு என்றாலும் நல்லபடியாகத்தான் அப்பாவும், அம்மாவும் சீர் செய்து கல்யாணம் செய்து கொடுத்தார்கள். அதனால் கடன் பட்டு மிகுந்த சிரமத்திலும் இருக்கிறார்கள்.
கல்யாணம் முடிந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை, அதற்குள் இவள் கண்ணை கசக்கி கொண்டிருக்கிறாள்.
இவ்வளவு கடன் ஆன போதும் இவனுக்கு பெண் பார்க்க துடித்து கொண்டிருக்கிறார்கள், இந்த, அப்பாவும், அம்மாவும். இவன்தான் கொஞ்சம் நாள் போகட்டும், எனக்கு வேலை நிரந்தரமாகட்டும் என்று சொல்லி நிறுத்தி வைத்திருக்கிறான்.
சொல்லு, என்ன பிரச்சினை, உனக்கும் உன் மாமியாருக்கும்?
அண்ணே எவ்வளவு சிரமத்தில இருந்தாலும் நம்ம அப்பா அம்மா நம்மளை எப்படி வளர்த்திருக்காங்க,
ஆமா அதுக்கும் இந்த பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்?
இவங்க கேட்டதை விட எவ்வளவு செஞ்சிருக்காங்க, அப்பாவும் அம்மாவும். நீ கூட கடனை வாங்கி என் கல்யாணத்துக்கு செலவு பண்ணியிருக்கே
சரி அதை எல்லாம் இப்ப எதுக்கு சொல்லிகிட்டிருக்கே?
பின்ன என்ன ! என் மாமியார் எப்ப பார்த்தாலும் குத்தி காட்டிட்டே இருக்காங்க. உங்க வீட்டுல இதுக்கெல்லாம் எங்க வசதியிருந்திருக்கும், அப்படி இப்படியின்னு சொல்லி குத்தி காட்டறது, என் பையனுக்கு இதை விட பெரிய இடமா வந்துச்சு அப்படீன்னு என் முன்னாடியே சொல்லி காட்டறது, எனக்கு தாங்க முடியலை, பதில் சொல்லிடலாமான்னு வாய் துடிக்குது, உனக்காகவும், நம்ம அப்பா அம்மாவுக்காகவும் வாயை மூடிகிட்டிருக்கேன்.
தயவு செய்து அவங்க மனசு சங்கடப்படற மாதிரி பேசிடாதே, வயசானவங்க அப்படி இப்படித்தான் இருப்பாங்க. அவங்க யாரு? நம்ம அம்மாவுக்கு ஒரு விதத்துல அண்ணி முறைதான ஆகணும், அனுசரிச்சு போயேன்.
ஆமா இதை மட்டும் சொல்லிடுங்க, அவங்க பேசறது உங்களுக்கு எங்க தெரியப்போகுது. என்னால முடியலை, அவள் கண் கலங்குவதை இவனால் பார்த்து கொண்டிருக்க முடியவில்லை.
சரி சரி..மனசை விட்டுடாதே, நீ சின்ன பொண்ணு, அவங்ககிட்டே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கயேன், பதவிசாக சொல்லி, சிறிது நேரம் இருந்து விட்டு கிளம்பினான்.
சே..என்ன மனிதர்கள், அவர்கள் கேட்டதற்கு மேல் செலவு செய்து இவளை கட்டி கொடுத்திருக்கிறோம். இருந்தும் அவளால் புகுந்த வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவர்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் நம்மால் கொடுக்க முடியுமா?
வருடங்கள்தான் எவ்வளவு வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இருபத்தைந்து வருடங்கள் ஓடியிருக்குமா?
தன் மகளை காண்பதற்காக மகளின் புகுந்த வீட்டுக்குள் நுழைகிறான்.
வாங்க மாமா, அழைப்பில் சுரத்தில்லையோ ! இவன் மனதுக்கு பட்டாலும், எப்படியிருக்கீங்க மாப்பிள்ளை?
நான் நல்லா இருக்கேன், நீங்க உங்க மக கிட்ட பேசிகிட்டிருங்க, நான் அவசரமா வேலைக்கு கிளம்பிகிட்டிருக்கேன், அவசரமாக கிளம்பினான். உண்மையிலேயே கிளம்புகிறானா? இல்லை இவனை கழட்டி விட கிளம்புகிறானா ! தெரியவில்லை
வாங்கப்பா,.மகளின் அழைப்பில் சுரத்தில்லை, கண்கள் கலங்கியது போல் இருந்தது. மனசு சற்று கலக்கமாக இருந்தது என்னம்மா எப்படியிருக்கே?
ம்..ம்..நல்லா இருக்கேன், சொன்னாலும் குரல் பிசிறடித்தது.
சம்பந்தி எட்டி பார்த்து வாங்க வாங்க, புன்சிரிப்புடன் சொன்னவர் வெளியே எட்டி பார்த்து கொண்டார், மனைவிக்கு பயந்தா?
சற்று நேரம் பேசி கொண்டிருந்தவர் சரி நீங்க இருந்து சாப்பிட்டுட்டுத்தான் போகணும், நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துடறேன், கழண்டு கொண்டார்.
மகளை உற்று பார்த்தவன் என்னம்மா என்ன பிரச்சினை உன் மாமியார்கிட்டயா, இல்லை உன் புருசங்கிட்டயா?
அவருக்கென்ன, எல்லாம் என்னோட மாமியார்னாலதான் இங்க பிரச்சினையே.
என் மாமியார் எப்ப பார்த்தாலும் குத்தி காட்டிட்டே இருக்காங்க. உங்க வீட்டுல இதுக்கெல்லாம் எங்க வசதியிருந்திருக்கும், அப்படி இப்படியின்னு சொல்லி குத்தி காட்டறது, என் பையனுக்கு இதை விட பெரிய இடமா வந்துச்சு அப்படீன்னு என் முன்னாடியே சொல்லி காட்டறது, எனக்கு தாங்க முடியலை, பதில் சொல்லிட லாமான்னு வாய் துடிக்குது,
அப்படி இப்படீனு பெரியவங்களை பேசிடாதம்மா...
முறைத்து பார்த்த மகள், ஆமா நீ விட்டு கொடுப்பியா? உன் தங்கச்சியாச்சே,
அட...உனக்கு அத்தைதானே..
அத்தையாம்..அத்தை.. எப்ப பார்த்தாலும் என் பையனுக்கு பெரிய இடத்துல இருந்து..., உங்களுக்கு வசதியில்லை, அப்படீன்னு சொல்லிகிட்டு..
வாசகர்களிடமே தொடர்ந்து விட்டுவிட்டு நகர்ந்து கொள்வோம்.

இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால் என்ன சிந்தனையில் தங்கை வீட்டிலிருந்து போனானோ, அதே சிந்தனையில் இன்று மகள் வீட்டிலிருந்து போய் கொண்டிருக்கிறான்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (16-Aug-21, 12:45 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 115

மேலே