என் ஆசான்
ஏன் என் கண்கள் கலங்குகின்றன?
அந்த அப்பாவி ஜீவன்களை நினைக்கும் போது
என் வரிகளிற்கு முதற்காரணமான உனக்கு
கவியல்ல காவியம் படைக்க வேண்டும்
நினைவலைகள் நீட்சிப் பெறுகின்றன
என் பொன்னான ஆசான்களை நோக்கி
தனக்கென்று எதுவும் இல்லை
மாடி வீடு இல்லை
மனமார உண்டது இல்லை
கை பிடித்த உறவு எங்கோ!
கை சேர்ந்த குழந்தை எங்கோ!
பாடாய்படுகிறது அவ்வுள்ளம்
பாடசாலை வீடு என்று
போராடி பெற வேண்டுமாயிற்று
தனக்கான சில உரிமைகளைக் கூட
அரச சலுகைகள் ஆசிரியரிற்கில்லை
நன்கொடை பணம் நினைப்பதற்கும் இல்லை
தன்னை விட ஒருவன் உயர வேண்டுமென்று
தெரியாததையும் தெரிந்து உரமாக ஊட்டி
வானளவு வரை வாய் மூடாமல்
இரசிக்க முடிந்த ஓர் உன்னத உயிரது
ஏறியவன் எங்கோ மேலேறிச் செல்ல
ஏற்றிவிட்டவன் மட்டும் இன்னும்
அதே ஏணிக்குப் பக்கத்தில்
அடுத்தவனையும் ஏற்றிட காத்திருக்கிறான்
ஆண்டுகள் பல கடந்தாலும்
அழியா புகழை நாம் பெற்றாலும்
நிறைவான இடம் உண்டு என்றும் நம் மனதில்
உன் உழைப்பிற்கு ஈடு
இவ்வுலகில் எதுவும் இல்லை - ஆசான்

