மழை கொடிது சில நேரங்களில்
#மழை கொடிது... சில நேரங்களில்...!
வராமல் கெடுக்கும்
பல காலம்
வந்தும் கெடுக்கும்
சில காலம்... !
கூவி அழைத்தால் வராது
கொடும் பஞ்சத்தில்
வேண்டின்
எவர்க்கும் உதவாது..
புயலுக்குத் துணையாய் நிற்கும்
புகும் வீட்டினுள்
தொல்லைகள் கொடுக்கும்..
ஏரி வீட்டிற்குள் ஏறும்
சாலை வீட்டினுள் இறங்கும்
சாக்கடை நீருக்குள் சங்கமம்
சாபமாய்ப் பிணிகளைப்
பரப்பும்...!
வாய்க்கால் வயல்வெளி
நிரப்பும்
வேர்க்கால்களைப் பிடித்து
நசுக்கும்..!
ஓடும் வாகனம் நிறுத்தும்
ஓட்டை வீட்டினுள் இறங்கும்
கொஞ்சம் பெய்தால்
இசைதான்
கோரம் செய்தால்
வசைதான்..!
என்றோ நனைவதில்
இன்பம்
நனைந்தே கிடப்பதில்
துன்பம்
அளவாய்ப் பொழிவாய்
மழையே
அதிகம் வழிதல்
பிழையே..!
நீ பொழிய
வணங்கினோம் அன்று
நீ வடிய
வணங்கினோம் இன்று..!
#சொ.சாந்தி