கவிதை படுத்தும் பாடு

படாத பாடுபட்டு
கைவரப்பெறும் கவிதை
கூடவே
அழைத்துவந்து
குடியமர்த்திவிடுகிறது
தலைக்கனத்தை..

பத்திரிகைகளில்
பட்டா பெற்றாலோ
சமூக ஊடகங்களில்
பாராட்டுப் பெற்றாலோ
அதற்குத் தெரிவதில்லை
தலைக்கால்.

சும்மாவா பின்னே;
சொல், பொருள்,
படிமம், சந்தம், அங்கதம் என
பலசரக்கு உள்ளவர்களிடம்தானே
சமைகின்றன
பல்சுவைக் கவிதைகள்?

பத்தாம் வகுப்பறையில்
முளைத்து
மூன்று நிமிடங்களாவதற்குள் -என்
கவிதையின் காது
திருகப்பட்டது
கணக்கு வாத்தியாரால்.

’அ’ ‘ஆ’வென
உயிரெழுத்துகளில் ஊளையிட்டும்
வகுப்பறையே
வாய்ப்பிளந்து சிரித்தும் -என்
கவிதையின் மானம்
கப்பலேறவில்லை.

’கவிதையாம் கவிதை;
கஞ்சிக்காகுமா கழுதை’
அப்பாவின்
இயைபுதொடை அங்கலாய்ப்பில்
உடும்புப்பிடியாகவே செய்தது
எங்களின் உறவு..

கடந்த நாற்பதாண்டுகளாக
காதலைக் கசிந்தும்
அநீதியை பொங்கியும்
வெறுமையில் வாடியும்
இயற்கையைப் போற்றியும்

இன்னும் பல ’யும்’களால்
மையமாகவில்லையெனினும்
மாயமாகாமல்
இருப்பைத் தக்கவைக்க
இன்றளவும் போராடுகிறேன்
அதே தலைக்கனத்தோடு!

எழுதியவர் : ஜ. கோபிநாத் (6-Mar-22, 7:56 pm)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 198

மேலே