செல்லும்வாய்க்கு ஏமம் சிறுகாலைச் செய்யாரே - பழமொழி நானூறு 99
நேரிசை வெண்பா
அடங்கி அகப்பட ஐந்தினைக் காத்துத்
தொடங்கிய மூன்றினால் மாண்டீண்(டு) - உடம்பொழியச்
செல்லும்வாய்க்(கு) ஏமம் சிறுகாலைச் செய்யாரே
கொல்லிமேல் கொட்டுவைத் தார். 99
- பழமொழி நானூறு
பொருளுரை:
துறவறத்திற்கு விதிக்கப்பட்ட நெறியில் தாம் அடங்கி ஒழுகி ஐம்புலன்களையும் பொறிகள் மேற் செல்லாதவாறு செறியப் பாதுகாவல் செய்து தாம் செய்யத் தொடங்கிய துறவற நெறியில் மனம், மொழி, மெய் என்ற மூன்றானுந் தூயராய் மாட்சிமைப்பட்டு இவ்வுலகத்தில் இவ்வுடம்பு ஒழிந்து நிற்க இனிச் செல்ல விருக்கும் மறுமைக்கு உறுதியைக் காலம் பெறச் செய்யாதவர்களே தீயின் மீது நெல்லினைப் பெய்து பொரித்து உண்ணுபவரோடு ஒப்பர்.
கருத்து:
காலம் பெறத் துறந்து வீடு எய்துக என்றது இது.
விளக்கம்:
'அகப்படக் காத்து' என்றது பயிற்சி வயத்தான் எதிர்ப்பட்டவழி ஐம்புலனும் விரைந்து செல்லும் ஆகலின், அங்ஙனம் சேராதவாறு காத்து என்றவாறு. மனத்தூய்மையும், சொல் தூய்மையும். மெய்த் தூய்மையும் என்றிம் மூன்றினால் மாட்சிமையுறுதல். சிறு காலை - இளமை.
ஐம்புல இன்பத்தினையே கருதித் துறத்தலைச் செய்யாதவர்கள், சுவை யொன்றனையே கருதி, விரைக் கோட்டையை நெருப்பிலிட்டுப் பொரித்துண்பவரோடு ஒப்பர். கொல்லி - தீயை உணர்த்திற்று.
'கொல்லிமேல் கொட்டு வைத்தார்' என்பது பழமொழி.