பெண் உரிமை

என் மூளையோடு விவாதிக்க
இன்னொரு மூளை வேண்டுமென்றேன்
நீங்களோ வீட்டின் ஒரு மூலையில் உட்கார வைத்தீர்கள்

என் சிந்தனைகளை
எழுதிவைக்க ஒரு எழுதுகோல் வேண்டுமென்றேன்
நீங்களோ என் கைகளில் அகப்பையை திணித்தீர்கள்

என் இன்பத் துன்பங்களை
பகிர்ந்துகொள்ள
நட்பு வட்டாரமொன்றை கேட்டேன்
நீங்களோ எனக்கு
கணவன் என்ற பெயரில் உறவு
வட்டாரத்தை கொடுத்தீர்கள்

வித விதமான புத்தகங்களை
சுமந்து அறிவு வளர்க்க நினைத்தேன்
நீங்களோ என்னை
கரு சுமக்க வைத்து
பிள்ளை வளர்க்க வைத்தீர்கள்

இன்னமும் மேடைகள் தோறும்
பெண் விடுதலையும்
பெண் உரிமையையும்
பேசாத ஆண் வாய்களே இல்லை..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (18-Aug-22, 9:48 pm)
Tanglish : pen urimai
பார்வை : 170

மேலே