இயற்கையின் சீற்றம்
*ஆழிப் பேரலை*
அன்றும்
என்றும் போல் தான்
விடிந்தது
கடற்கரையில்
எப்போதும் போல்
நடைப்பயிற்சி
வலைகளைப்
பிரித்தபடி
கடலுக்குள் செல்ல
ஆயத்தமான
மீனவ மக்கள்
மணலில் துள்ளி
விளையாடிக்
கொண்டிருந்த
சின்னஞ் சிறார்கள்
எவரும்
அறிந்திருக்கவில்லை
இன்னும் சில
நிமிடங்களில்
அப்படியொரு
கோரம் நடக்குமென்று
செய்தித் தாள்களில்
இந்தோனேசியாவில்
நில நடுக்கம்
ஒரு ஓரமாக
இடம் பெற்று
பதிவாகிக் கொண்டிருந்த
நேரம்
திடீரென்று எழுந்தது
அலையின் பிரவாகம்
அள்ளிச் சென்றது
மனித உயிர்களை
அதுவரை அழகு
காட்டிக் கொண்டிருந்த
கடற்கரை விடுதிகள்
ஒரு நொடியில்
இல்லாமற் போயின
பதிவாகிக்
கொண்டிருந்த
செய்தித் தாள்கள்
நிறுத்தப்பட்டு
முதல் பக்கத்தில்
*சுனாமி* என்று
முழங்கின.
அள்ளிச் சென்ற
உயிர்களை எடுத்துக்
கொண்டு
உடலை வீசின
கோர அலைகள்
அடைக்கலம் தரும்
என்று நம்பிய
ஆலயங்கள் முழுதும்
மனித உடல்கள்
எல்லா கடவுளர்களும்
கை கழுவி விட்
இயற்கை கோர
வடிவெடுத்து
கூக்குரலிட்டது.
வரலாறு சொன்னது
இது தான்
*ஆழிப் பேரலை* என்று.
எதனால் அந்த
டிசம்பர் 26 ,2004
அத்துனை
கொடும் நாளானது?
பின்னாளில்
பல்வேறு விளக்கங்கள்.
அழவும் சக்தியின்றி
வெறித்துப் போய்
நின்றது
உறவுகள் இழந்த
மக்கள் மட்டுமல்ல
உதவச் சென்ற
உள்ளங்களும் தான்.
18 ஆண்டுகள்
கடந்து போயின
ஆனாலும்
டிசம்பர் 26 எனில்
இனம் புரியா அச்சம்
இன்னமும் இழையோடும்.
*சுனாமி நாள்*
உயிர் நீத்த
உறவுகளுக்கு
கண்ணீர் அஞ்சலி
- கமலநாதன்