முதலாளி

முதலாளி

என்னடா முதலாளி வந்துட்டாவளா? கிண்டலாய் கேட்டது போல் இருந்தது எனக்கு
இல்லீங்க, பயத்துடன் பதிலளித்தேன்
அந்த ஆளு எப்பவும் இப்படித்தான், சொன்ன நேரத்து வரோணும்னு நினைச்சதே இல்லை, தானும் உருப்படாம மத்தவனையும் உருப்படவிடமாட்டான் சத்தமாய் சலித்தபடி கல்லா பெட்டியில் போய் உட்கார்ந்தார் முதலாளி
என்னடா சல சலன்னு பாத்துட்டு, பாரு சாமான் கேட்டு நிக்கறாங்க பாரு விரசலா போட்டு அனுப்பு விரட்டினார்.
அதுவரை அவரையே பார்த்தபடி நின்றிருந்தவன் வேகமாக பொட்டலம் கட்டி கொடுக்கும் பையனுடன் போய் இணைந்து கொண்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் கடையில் கூட்டம் கலகலக்கும். முதலாளி என்று நக்கலாய் கூப்பிட்ட ஞாசேகரன் அண்ணன் மெதுவாக கடை வாசலில் வந்து நின்றார்.
கல்லாவில் இருந்த முதலாளி அங்கிருந்தே கத்தினார் “வராரு பாரு முதலாளி” ஏம் ஓய் உம்மிடம் அவ்வளவு படிச்சு படிச்சு சொல்லியும் லேட்டா வர்றீரு. உம்மையெல்லாம்..ஏதோ கேட்க கூடாத வார்த்தை சொல்லியிருப்பார் அதனால் குரலை அமுக்கி கொண்டார்.
ஞான்சேகரன் அண்ணனுக்கு இதெல்லாம் பழக்கமான விசயம் போலிருக்கிறது, வேக வேகமாக உள்ளே வந்தவர் மள மளவென மளிகை சாமான்களை எடுத்து பொட்டலம் மடிக்க ஆரம்பித்து விட்டார்.
நான் கடையில் சேர்ந்து மூணு மாசம் தான் ஆகியிருந்தது. தினத்துக்கும் இதே பாட்டுத்தான் முதலாளிக்கும் ஞானசேகரன் அண்ணனுக்கும். அதுவும் முதலாளி சில நேரம் அவரை திட்டும்போது எனக்கு பாவமாய் இருக்கும். ஆனால் நான் கவலைப்படுவது போல ஞானசேகரன் அண்ணன் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
நாங்கள் நாலு பேர் கடையில் வேலை செய்கிறோம். பொட்டலம் மடிப்பது முதல் வந்து கேட்கும் மளிகை சாமான்களை எடுத்து கொடுப்பது வரை நாங்கள் செய்தாக வேண்டும். ஞானசேகரன் அண்ணன் எங்களுக்கு இன்சார்ஜ். சாமான்களை கல்லா பெட்டியில் உட்கார்ந்திருக்கும் முதலாளிக்கு வரிசைப்படி சொல்லிக் கொண்டிருப்பார். முதலாளி அதை காதில் வாங்கி கொண்டே ஒவ்வொரு சாமான்களுக்கும் விலை பட்டியல் போட்டு கொண்டிருப்பார்.
மொத்தம் ஆன தொகையை வந்திருப்பவரிடம் சொன்னதும், அவர் பணத்தை கொடுத்தபின், நீங்க எங்கியாவது போறதா இருந்தா போயிட்டு வாங்க, பசங்க சாமான் எல்லாம் கட்டி வச்சிடுவாங்க.
இல்ல, நான் வெயிட் பண்ணி வாங்கிக்கறேன், சொன்னவரை சரி உட்காருங்க, சொல்லி விட்டு பசங்களை விரட்டுவார். சீக்கிரமா கட்டி சாரை அனுப்பங்கப்பா.
ஆள் இல்லை என்றால் ஞானசேகரன் அண்ணனே பொட்டலம் கட்ட ஆரம்பித்து விடுவார்.
நாலு பேரும் வெவ்வேற ஊரு. படிக்க வசதி இல்லாம கடை முதலாளிக்கு தெரிஞ்சவங்களை புடிச்சு எங்களை பெத்தவங்க சேத்து உட்டுட்டு போயிட்டாங்க.
மூணு வேளை சாப்பாடு, வாரமானா சினிமா இப்படி கைச்செலவுக்கு நூறு ரூபா கொடுப்பாரு முதலாளி .
அதுலயே சோப்பு சீப்பு கண்ணாடி இதெல்லாம் பார்த்துக்கணும். எல்லாமே கடைக்கு வர்றதுனால பெரிசா ஒண்ணும் செலவாயிடாது. வெளிய போகும்போதுதான் நூறு ரூபா சுத்தமா பத்தாது.அதனால நாலு வாரம் சேர்த்து வச்சு ஒரு வாரத்துல வெளிய போவோம். அப்படியும் இரண்டு பேரு போனா இரண்டு பேரு கடைய பார்த்துக்கணும்.கடைக்கு பின்னாடியே ரூம் எடுத்து ஒரு ஆளை சமைச்சு வச்சுட்டு போறதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்காரு முதலாளி.
ஞானசேகரன் அண்ணன் எங்களோட சேரமாட்டாரு, அவருக்கு இருந்தா நாப்பது நாப்பதஞ்சு வயசு இருக்கலாம். எங்களுக்கெல்லாம் இருவது வயசுக்குல்லத்தான் இருக்கும், அதனால எங்களோட செட்டு சேர அவருக்கு சங்கடமா இருந்திருக்கும். அவருக்கு குடும்பம் இருக்கு. இரண்டு ஸ்டாப்பிங் தள்ளி அவர் வீட்டுக்கு போகணும். கடைய இராத்திரி பத்துமணிக்கு சாத்திட்டு அவர் நடந்தே வீட்டுக்கு கிளம்பிடுவாரு. சில நேரங்கல்ல நாங்க யாராவது சைக்கிள்ல கொண்டு போய் அவரை வீட்டுல விட்டுட்டு வருவோம்.
வீடு சின்னதா இருக்கும். ஏழெட்டு வீடு ஒண்ணா வரிசையா இருக்கும். எல்லாத்துலயும் இவரை மாதிரி குடித்தனங்க இருக்குது. அதுலதான் இவரும், இவர் சம்சாரமும் இருக்கறாங்க. அந்தம்மா காப்பி எல்லாம் வச்சு கொடுக்கும்.சில நேரங்கள்ள மிச்ச சாப்பாடும் போடும். அது எங்களுக்கு தேவாமிர்தமா இருக்கும். ஏனா சமையல்காரன் செய்யற சாப்பாட்டை சாப்பிட்டு நாக்கு செத்து போயி கிடப்போம். அதனால ஞானசேகரன் அண்ணனை கொண்டு போய் விடறதுக்கு நாங்க நாலு பேருமே ஆர்வமாத்தான் இருப்போம்.
கடை முதலாளி எங்களை திட்டறதை விட ஞாசேகரன் அண்ணனைத்தான் ரொம்ப திட்டுவாரு. அதுவும் ஒவ்வொரு முறையும் “முதலாளி” அப்படீன்னு கூப்பிட்டு கிண்டலாவும், கோபமாவும் பேசறப்ப எங்களுக்கு பாவமா இருக்கும்.
இதுவெல்லாம் நான் ஏன் இப்ப உங்களுக்கு சொல்றண்ணா நான் சொல்ற கதையெல்லாம் இருபது வருசத்துக்கு முன்னாடி நடந்த கதைங்க. இப்ப நானும் ஒரு முதலாளியா வெளியூர்ல ஒரு ஏஜன்சி வச்சு நடத்திகிட்டிருக்கேன். இரண்டு பசங்க என் கிட்ட வேலை செய்யறாங்க.
எப்பவாச்சும் நான் வேலை செஞ்ச கடைய போய் பார்க்கணும்னு ஆசையா இருக்கும். ஆனா நான் இருக்கறது சென்னையில. கடை இருக்கறது எங்க ஊரு திருச்செந்தூரு டவுனுல.
இருந்தாலும் ஊர் பக்கம் போறப்ப அங்க போகணும்னு நினைப்பேன், ஆனா குடும்ப வேலைகள் வந்து போக முடியாம போயிடும். எனக்கு நான் வேலை செஞ்ச கடை முதலாளிய விட ஞானசேகரன் அண்ணன் ஞாபகம்தான் அடிக்கடி வரும். அவரு எப்படி இருக்கறாரு? என்ன பண்ணறாரு? அப்படீன்னு.
ஏண்ணா நான் கடைய விட்டு வர்றதுக்கு ஒரு வாரம் முன்னாடி ஞாசேகரன் அண்ணனை ரொம்ப திட்டிட்டாரு கடை முதலாளி. அண்ணனுக்கு அன்னைக்கு திடீருன்னு வந்துச்சு பாருங்க ஒரு கோபம் இது வரைக்கும் அப்படி ஒரு கோபத்தை அவர்கிட்ட யாரும் பார்த்ததில்லை
“சர்த்தான் போடா” நீ டவுசர் போட்ட பையனா எங்கிட்ட வந்து வேலை கேட்டு கெஞ்சுனதெல்லாம் மறந்திட்டியாலே. உன்னை நாலு வருசம் வச்சு தொழில் கத்து கொடுத்து உருப்படி ஆக்கி விட்டிருக்கேன். எனக்கு தொழில் நசிஞ்சு உங்கிட்ட வேலை கேட்டு வந்த பாவத்துக்கு “போதும்டா சாமி போதும்” நான் உன்னைய ‘வஞ்சது’ எல்லாம் ஞாபகம் வச்சுகிட்டு நீ “முதலாளி அப்படீன்னு கூப்பிட்டு” என்னை வஞ்சினதை எல்லாம் மறக்கலை, ஆளை விடு.
விடுவிடுவென்று கடையை விட்டு அவர் நடந்து போவதை அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தோம். அப்படியானால் “ஞானசேகரன்” அண்ணன் உண்மையில் இவருக்கு முதலாளியாய் இருந்தவர்தானா?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (29-Aug-23, 11:51 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : muthalaali
பார்வை : 146

மேலே