உணர்தலும் வேண்டும் உன்னை நீயே
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
மா விளம் விளம் விளம் மா விளம்
எங்கும் இறைவனே எவ்விடம் இறைநிலை என்றே இயம்பினும்
பங்கம் நிகழுதே பல்வகை நிலையிலே எல்லா மதங்களால்
தங்களுள் எண்ணமுந் தரமிலா தன்மையும் தங்கள் கொள்கையும்
மங்கும் வகையிலே மக்கிட செய்திடும் கோட்பா டுகளேனோ? (க)
மா விளம் விளம் விளம் விளம் விளம்
மழித்தல் நீட்டலும் மலரினைச் சூடிட வளர்த்திடல் என்றதும்
குழைத்தல் பூசுதல் குங்குமம் வைத்தலும் கோடிடல் போன்றதும்
கழுவல் தெளித்தலும் குளித்தலும் இவைகளால் இறைநிலை என்பதும்
பழங்கள் காய்களும் மணந்தரும் பொருட்களும் இறைவனைக் காட்டுமோ? (உ)
மா மா மா மா விளம் மா
துணியால் கனியால் தூய வெளியால் கூவியே அழைத்தால்
மணியால் பனியால் மாயச் செயலால் மாண்புடன் விளித்தால்
பணத்தின் தனத்தால் பாயும் புயலாய் செய்திடும் பணியால்
குணமாய் இறையும் காட்சித் தருமோ இருப்பையும் காட்டுமோ? (ங)
மா மா விளம் மா மா மா
பொய்யால் தினமும் பொதுவெளி எங்கும் முழுங்கி திரியும்
மெய்நிகர் மாந்தர் மனதினை அறிந்த இறையை அரிதில்
மெய்யாய் அறிய முடியுமோ உணர்வீர் படிப்பா ளிகளே
உய்ய முயலின் உணர்தலும் வேண்டும் உன்னை நீயே (ச)
— நன்னாடன்