காதலும் மறைந்திடுமா காணல் நீராக பாகம் - 18
18. தேவதையின் அறிமுகம்
காரில் இருந்து இறங்கிய திலோத்தமா நிமிர்ந்து ஆனந்த இல்லத்தை பார்த்தாள்.
இல்லத்தின் பெயரே நிறைவாக தோன்றியது.
பெற்றவர்களால் கைவிடப்பட்டு வாழ்க்கையின் வண்ணங்களை இழந்து தவிக்கும் மழலைகளின் வாழ்வில் ஆனந்தத்தை நிலைநிறுத்தும் இல்லம் "ஆனந்த இல்லம்" மிகப் பொருத்தமான பெயர்.
பெயரைப் போலவே விழாக் கோலம் பூண்டிருந்த இல்லத்தில் காணும் இடமெல்லாம் மகிழ்ச்சியும் அழகும் நிறைந்து காணுபவர்களுக்கு மனநிறைவை அளித்துக் கொண்டிருந்தது.
அது மிகப்பெரிய இல்லம் கிடையாது ஆனாலும் பார்வைக்கு பாந்தமாகவும் அமைதியாகவும் தென்பட்டது. அந்த சூழ்நிலை திலோத்தமாவின் மனதை ஒருமுகப்படுத்தி அவள் எடுத்த முடிவினால் அவளில் தோன்றியிருந்த படபடப்பை குறைப்பதாக இருந்தது. பெரிய சவாலாக அவள் முன் நின்றிருந்த எதிர்காலத்தை, மிகவும் எளிதாக கடப்பது நடவாது என்றாலும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை தருவதாக இருந்தது.
கார் வந்து நின்ற ஓசையில் கவரப்பட்ட யசோதம்மா, பாரதிதாசனின் மோன நிலை கலையாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டே இல்லத்தை விட்டு வெளியேறினார். யசோதம்மா வெளியேறுவதை வரி வடிவமாக கண்ட பாரதிதாசனும் அவரைப் பின் தொடர்ந்தான்.
வெளியே வந்து கொண்டிருந்த பாரதிதாசன் அங்கு நின்றிருந்த கமிஷனரையும் அவருடன் நின்றிருந்த திலோத்தமாவையும் பார்த்து பெரிதும் ஆச்சரியம் அடைந்தான்.
இன்று தன் மனைவியிடம் தான் உரைத்தது நினைவில் ஆடியது.
ப்ரியா இன்னைக்கு மருத்துவமனையில் இன்ட்ரெஸ்டிங்கா ஒரு விஷயம் நடந்தது.
என்ன என்பது போல் புருவத்தை மட்டும் உயர்த்தினாள் அவன் மனைவி.
கோபமாக இருக்கிறாளாம் அவன் மீது, இன்றைய தினம் முழுவதும் அவளுடன் இருப்பதாக அவன் கொடுத்திருந்த வாக்கை நிறைவேற்றவில்லை என்பதே அவள் கோபம்.
சிறு பிள்ளை போல தன் கோபத்தைக் காட்ட அவள் செய்யும் சேட்டைகளை பார்க்கும் போது இருபத்து மூன்று வயது பெண்ணுக்கு பதிலாக மூன்று வயது குழந்தையாக தான் தெரிந்தாள் அவன் பார்வையில்.
அவளின் கோபத்தை கவனிக்காத பாவனையில் அவன் கூற வந்ததை கூறி முடித்தான்.
ப்ரியா நான் உன்னை முதன்முதலா பார்த்தபோது எனக்கு என்ன ஃபீல் வந்ததோ அதே போல் இன்னைக்கு ஒரு பெண்ணைப் பார்த்தேன்.
அவன் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்த ப்ரியா வினாடியில் விழிகளில் நீர் துளிர்க்க கீழ் நோக்கி குனிந்ததாள் விலை மதிப்பில்லா இரு முத்துக்கள் விரயமானது.
மேலும் விரயம் தவிர்க்க கையேந்தி தன் உள்ளங்கையில் சேகரித்தான் அந்த ஜொலிக்கும் முத்துக்களை.
விழியின் நீருக்கு காரணம் உணர்ந்தவன், அவளின் தலையில் பைத்தியம் என்று செல்லமாக தட்டியபடி, நீ எப்படி மற்றவருக்கு உதவுவதற்கு முன்னோடியாக நிற்பாயோ அதே போல் உன்னையும் தூக்கி சாப்பிட்டு விடுவாள் இந்தப் பெண் என்றான்.
அவள் கேள்வியாக நோக்கவும், நடந்ததை விவரமாக கூறினான். விழிகள் விரிய ஆச்சரியமாக அனைத்தையும் கேட்டறிந்தவள் உடனே திலோத்தமா வை பார்க்க ஆசைப்பட்டாள்.
ஒருநாள் அழைத்துப் போவதாக வாக்கு கொடுத்திருந்தான் பாரதிதாசன். இவன் வாக்கை காப்பாற்ற இறைவனே இங்கு திலோத்தமா வை அனுப்பி வைத்தார் போலும் என்று நினைத்துக் கொண்டான்.
ஹலோ மிஸ்டர் பாரதி என்றவாறு ஆச்சரியத்துடன் இவன் கையைப் பிடித்து குலுக்கினார் கமிஷனர்.
இவனும் பதிலுக்கு வணக்கம் கூறியபடி என்ன சார் ஒரே நாளில் இரண்டு முறை மீட் பண்ணியாச்சு. ஒரே சர்ப்ரைஸிங்கா இருக்கு என்றபடி பதிலுக்கு அவர் கைகளை பிடித்து குலுக்கினான்.
அதான் நானும் நினைக்கிறேன் என்றார் கமிஷனர். எனக்கு என்னவோ என் உள்ளுணர்வு சொல்லுது நாம் தொடர்ந்து வாழ்க்கையில் ஒன்றாக பயணிக்க போகிறோம் என்று தோன்றுகிறது என்றார்.
திலோத்தமா வை நோக்கி நகர்ந்து ஹலோ மிஸ் மதர் தெரேசா என்றவாறு சென்று அவள் கரங்களில் பாந்தமாக பொருந்தி இருந்த கண்ணனை சுவாதீனமாக தூக்கிக்கொண்டு கமிஷனரை நோக்கி திரும்பி வாங்க சார் உள்ள போய் பேசிக்கலாம் என்று முன் நடந்தான்.
ஆச்சரியமாக அவனைப் பார்த்து புன்சிரிப்புடன் அவனைத் தொடர்ந்தாள் திலோத்தமா அதற்க்குள் கமிஷனர் பாரதியிடம் அதென்ன "மிஸ் மதர் தெரேசா" என்க.
சிரித்து கொண்டே அப்புறம் என்ன சார் மதர் தெரேசா இல்லாம வேற யாரு கொஞ்சம் கூட யோசிக்காமல் இந்த மாதிரி காரியம் எல்லாம் செய்வாங்க என்றவாறு கையில் இருந்த கண்ணனை தூக்கிக் காண்பித்தான் பாரதிதாசன்.
அவர்கள் மூவரும் அவனைப் பின் தொடர்ந்து இல்லத்தின் உள்ளே நுழைந்தனர்.
அங்கு தேவதை போன்ற அழகிய பெண், குழந்தைகள் வண்டு போல் மொய்க்க நடுவில் கள்ளம் கபடம் இல்லாமல் குழந்தைகளுக்கு சமமான குதூகலத்தில் திளைத்து இருப்பதைப் பார்த்து அந்த கண்கொள்ளா காட்சியில் மெய் மறந்தனர்.
ப்ரியா இங்க பார் யார் வந்திருக்கிறாங்க நான் சொன்னேன்ல திலோத்தமா, என்ற பாரதிதாசனின் உற்சாகக் குரலில் ஈர்க்கப்பட்டவள்,
பேரார்வத்துடன் தன்னை மறந்து குழந்தைகளின் நடுவில் இருந்து, தாமரை இதழ்களுக்கு உள்ளிருந்த தேவதை போல தன் சக்கர நாற்காலியை இயக்கிக் கொண்டு வெளி வந்தாள்.
அந்த கண்கொள்ளா காட்சியைக் கண்டு மெய் மறந்து இருந்த மூவரையும், தகிக்கும் நெருப்புக்கு உள்ளே தள்ளப்பட்டது போன்ற அதிர்ச்சி ஒருசேர தாக்க மூச்சு விடவும் மறந்தனர்.
மீண்டும் சந்திப்போம்......
கவிபாரதீ ✍️