சிகப்பு விளக்கு

சிந்தையிலே பூ பூத்து
சிற்றின்ப தேன் கசிந்து
வஞ்சி மகள் வழியோரம்
வாய் சிரித்து நின்றிருந்தாள்

போகும் வழி தெரிந்திருந்தும்
போய் முடிக்கும் பணி இருந்தும்
பொன் மகளைப் பார்த்த கணம்
நகர கால்கள் மறுக்கிறதே

வண்டு மொய்க்கும் பூ கண்கள்
வா வா என்றழைக்கிறதே
வாழ்ந்துப் பார்க்க வேண்டுமென்று
வாஞ்சை மனம் துடிக்கிறதே

சாஸ்திரங்கள் படித்திருந்தும்
சத்தியம் பல புரிந்திருந்தும்
இந்த நொடி போதும் என்று
இருட்டில் கால்கள் நுழைகிறதே

நான்கு பக்க சுவர் அடைத்து
நடு நரம்பும் முறுக்கெடுத்து
அருகிலிருக்கும் பெண்ணைதொட்டு
அணைக்க நெஞ்சம் மறுக்கிறதே

கடைத்தெருவே சென்றபோதும்
கடற்கரையில் இருந்த போதும்
கண் தாழ்த்திப் பார்த்ததில்லை
கள்ளத்தனம் புரிந்ததில்லை

என்று மனம் சொல்லும் போதும்
ஏக்கம் எட்டி பார்க்கிறதே
ஏற்றி வைத்த விளக்கணைக்க
எந்தன் மனம் துடிக்கிறதே

கோவைப் பழம் கொடியினிலே
கொத்து கொத்தாய் இருக்கையிலே
கொத்திதின்னும் அணிலுக்கு இன்று
கொய்ய மனதில் பசியுமில்லை

என்று சொல்லும் பெண்ணை நானும்
எழுத்துக் கூட்டி வாசிக்கவே
எட்டி நானும் செல்லும்போது
எந்தன் மனம் மறுத்ததுடன்

பயந்து நானும் திரும்பிவிட்டால்
பாவம் மகள் பட்டினிதான்
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை
உலகம் செய்த பாவம் என்று

வேறு வேலை தேடிக்கொள்ள
எந்தன் பாக்கெட் பணம் எடுத்து
எண்பதாயி ரங்கள் மட்டும்
தோழி கையில் கொடுத்து நானும்
தொலை தூரம் ஓடிவிட்டேன்

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (19-Apr-24, 2:48 pm)
Tanglish : sikappu vilakku
பார்வை : 49

மேலே