தர்மம் தலை காக்கும்

(சிறுகதை)
மெய்யன் நடராஜ்
==================================
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அலுவலகம் இல்லை. சற்று தாமதித்து எழுந்திருக்கலாமென எண்ணிக்கொண்டிருக்கையிலேயே ‘என்னங்க.. மணி ஏழு. நேரத்தோடு போனால்தான் நல்ல சாமான்கள் கிடைக்கும் எந்திரிங்க.. ‘ என்று தட்டி எழுப்பினாள் மனைவி. இன்று வாராந்த சந்தை கூடும் நாள் அல்லவா அவள் சொல்வதும் சரிதான் கொஞ்சம் தாமதித்து சென்றால் நல்ல பொருட்கள் கிடைக்காது. ‘சரி சரி’ என்று அலுத்துக்கொண்டே எழுந்து முகம் கழுவச் சென்றேன். ஞாயிற்றுகிழமை ஓய்வு நாள் என்றாலும் அன்றே குடும்பத் தலைவனுக்கு வேலை அதிகம். கணவன் ஓய்வு தினத்தில் செய்ய வேண்டிய வேலைகளை ஓய்வாய் இருக்கும்போது குறித்து வைத்து செயல்படுத்தும் மனைவியர் ஓய்வு நாளின் எதிரிகள் என்றால் அது மிகை இல்லை.
ஒரு கோப்பைத் தேநீரோடு வாங்க வேண்டிய பொருட்களின் சிட்டையையும் பைகளையும் கைகளில் திணித்துவிட்டுச் சென்றாள். அவள் கொடுத்தப் பொருட்களை வாங்குவதென்றால் காசு பைகளில் கொண்டு செல்ல வேண்டும். என்னதான் டொலரின் பெறுமதி இலங்கை நாணயத்திற்கு எதிராக வீழ்ச்சியடைந்திருந்தாலும் ஏறிய விலையும் வாங்கும் சம்பளமும் இன்னும் அதே இடத்தில் நிற்கின்றன. வாழ்க்கைச் செலவு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. வாழ்க்கைப் போராட்டம் எந்த ஒவ்வொரு குடும்பத்தையும் மேலே எழவிடாமல் மிக அவதானமாகப் பார்த்துக்கொள்கிறது. தேநீரைக் குடித்துக் கோப்பையை வைக்க முற்பட்டேன். ‘சாந்தியக்கா... சாந்தியக்கா...’ என்று மனைவியை பக்கத்து வீட்டுக்காரி அழைக்க ‘.இதோ வாறன்.’ என்றவாறு வாசலுக்குச் சென்றாள்.
திரும்பி வந்தவள் என்னிடம் காசைக் கொடுத்து இதையும் வாங்கிட்டு வந்திடுங்க என்றாள். ‘இது யாருக்கு’ ‘அடுத்த் வீட்டுக்காரிக்குத்தான்’ ‘ ஏன் அவுங்க போய் வாங்கக் கூடாதோ? நான் இன்றைக்கு சந்தைக்குப் போவேன் என்று தெரிந்து சரியாக போற நேரம் பார்த்து வந்து காசக் கொடுத்து வாங்கச் சொல்கிறாங்க. அவுங்களைப் பாரு.. காசையும் நேரத்தையும் எப்படிச் சேமிக்கிறாங்கன்னு..’ ‘நான் என்ன விருப்பபட்டா வாங்கி வந்தேன். அவ புருஷன் சுகமில்லாமல் இருக்கிறதுனாலதான் வாங்கிட்டு வந்தேன், சரி சரி போங்க.அவுங்கள மாதிரி கஞ்சப்பிசிநாறியா நம்மால இருக்கவா முடியும்?’
கூறிவிட்டு அவள் போக நான் புறப்பட்டேன்.
வீடு என்றால் அக்கம் பக்க வீட்டுக்காரர்களோடு பரஸ்பர நட்புறவோடு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் காணும்போது ஒரு சிறு புன்னகை, ஹாய்., ஹலோ.. ஏதோ ஒன்று வேண்டும். நமக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் மூடி மறைத்து அதை அடுத்தவரிடம் காட்டாமல் அயலாருடன் இயல்பாய் இருக்க வேண்டும். இதில் எதுவும் இல்லாத ஒருவன் அடுத்த வீட்டுக்காரனாய் வாய்க்கப் பெற்றால் அதைவிடக் கொடுமை வேறொன்றுமில்லை. இந்த லட்சணத்தில பார்த்தாக் கூட பாராத்துபோல் சென்றுவிடும் அவருக்குப் பார்த்தசாரதின்னு பேரு வேறு. மூன்று மாதமாய் படுத்தப் படுக்கையாய் கிடக்கும் அவரைப் போய் பார்க்கக்கூட மனசில்லை. மனைவியின் வற்புறுத்தலால் சென்றமாதம் சென்று பார்த்தேன்.
நான் வந்து பார்ப்பேன் என எதிர்பார்த்திராத அவர், பிரிந்து சென்ற காதலி குழந்தை குட்டியோடு எதிரே வந்து நிற்கக் கண்டதைப்போல் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் பார்த்தார். ஆள் எலும்பும் தோலுமாகக் கிடந்தார்.குடற்புண்ணாம். சாப்பாடு சாப்பிட்டா ஒரே எரிச்சலாம். நேரத்திற்கு சாப்பிடாத்தால வந்த வினையாம். இப்போ கொஞ்சம் பரவாயில்லையாம். அரசாங்க மருத்துவமனைக்குத்தான் செல்கிறார்களாம். என்றாலும் அங்கு நிலவுகிற மருந்து தட்டுப்பாடு காரணமாக வெளியிலே வாங்கிக் குடிக்கச் சொல்லி எழுதித் தாராங்களாம்.வெளியிலே வாங்கும் மருந்து விலைதான் தாங்க முடியவில்லை என்று புலம்பினார். கூடவே அவர் மனைவியும் ரெண்டு மாசமா வேலையும் இல்லாத்தால தாலிக்கொடியை அடகுவச்சு செலவு பார்க்கிறதாக பெருமூச்சு விட்டார். என்னதான் பிடிக்காத ஆளா இருந்தாலும் இந்த மாதிரி நேரத்திலே அவர் மாதிரியே இருந்து விடக் கூடாது என்பதால் " ஒன்றும் கவலைப்படாதீங்க எல்லாம் சரியாயிடும். வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். மருந்துகளை நேரத்துக்குக் குடித்து அதுக்குத் தகுந்த மாதிரி சாப்பாட்டையும் கவனமா பாத்து சாப்புடுங்க. ஏதாச்சும் உதவி தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் கூப்பிடுங்க".. ஆறுதல் கூறிவிட்டு வந்தேன். இப்போது உடல்நிலை சற்று தேறிவருவதாக மனைவி கூறியிருந்தாள்.
பார்த்தசாரதியின் இந்த நிலைமைக்கு அவரே காரணம். மனிதன் உயிர்வாழ்வதற்கு ஆதாரமானது உணவு அந்த உணவில் கஞ்சத்தனம் பார்த்தால் குடல் புண் வாராமல் என்ன செய்யும். பணம் சேமிக்கணும் என்பதற்காக காலை ஆகாரத்தை தவிர்த்துவிட்டு பகலில் தொழில் செய்யுமிடத்தில் வழங்கப்படும் உணவை உண்டு இரவில் மட்டும் ஏதாவது வீட்டில் அதையும் தாமதமாகியே உண்டு வந்ததால் ஏற்பட்ட பரிதாப நிலை. இதுவரைக்கும் அவர்கள் வீட்டிலிருந்து ஒரு பழைய சோற்றைப் பிச்சைக்காரனுக்குக் கொடுத்துக் கண்டதில்லை. வழக்கமாகப் பிச்சை எடுக்க வரும் பிச்சைக்காரர்கள் என் வீட்டில் எதையாவது கேட்டு வாங்கிய பின்னர் அவர்கள் வீட்டைத் திரும்பிக்கூடப் பாராமல் மூன்றாவது வீட்டுக்குச் செல்வதையே பார்த்திருக்கிறேன். எச்சில் கையால் காக்கை விரட்டாத மகா கஞ்சன். அவன்தான் அப்படியென்றால் அவனுடைய மனைவியும் அதே மாதிரி. ஒரு மகன் இருக்கிறான் அவனை அக்கம் பக்கத்துக் குழந்தைகளுடன் விளையாடக்கூட விட மாட்டார்கள். அவர்களின் கஞ்சத்தனத்திற்கு இந்த நோய் ஒரு பாடம் புகட்டிவிட்டது என்றே கூறலாம். இனியாவது திருந்தினால் சரி.வாழ்க்கைக்குத் தேவையான எல்லா பாடங்களையும் பள்ளிக்கூடத்தில் கற்பித்துக் கொடுக்கமாட்டார்கள். அவரவருக்கு ஏற்படும் அனுபவம் இலவசமாகவே கற்க வைத்துவிடும் இந்தப்பாடம் பார்த்தசாரதிக்கு வாழ்வில் மறக்க முடியாத பாடம் .இனிமேலாவது திருந்தினால் சரி.
ஞாயிறு சந்தை இருந்த இடம் பள்ளிக்கூட மைதானமாக்கப்பட்டதால் தூர இடங்களிலிருந்து தங்களின் விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டுவரும் வியாபாரிகள் பிரதான சாலையின் இருமருங்கிலும் ஞாயிறு விடுமுறைக்காக அடைக்கப்படும் கடைகளின் முன்பாக குவித்து வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். மாதக்கடைசி என்பதால் சந்தைக்கு வருபவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாகவே இருந்தது. மனைவி கொடுத்த சிட்டையின் பிரகாரம் ஒவ்வொன்றாய்த் தேட ஆரம்பித்தேன். எப்போதும்போல் வீதியோரம் ஒரு மரநிழலில் அமர்ந்து யாசகம் எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு மூதாட்டிக்கு யாசகித்துவிட்டு அப்பால் நகர்ந்த என்னை யாரோ அஜித் ரசிகர் போலும் 'தல.. கொஞ்சம் வழிவிடு' என்று கேட்க தள்ளி நின்றேன். அவன் கடந்ததும் எனக்கு அது ஞாபகத்தில் வந்தது. முதலில் அதை வாங்கிவிட வேண்டும். இன்று ஞாயிற்றுக்கிழமை. சீக்கிரம் முடிந்துவிடும். பாவம் சுகமில்லாத ஆள்.நேரத்தை வீணடிக்காமல் நேராய் அக்கடைக்குச்சென்றேன்.
அங்கு அந்தக் காலைப்பொழுதிலும் ஆட்டிறைச்சி வாங்க ஆட்கள் வரிசையில் காத்துக்கிடந்தார்கள். கடைக்காரர்கள் அப்பொழுதுதான் வண்டியிலிருந்து இறக்கிய ஆடுகளைக் கம்பியில் தொங்கப்போட்டுக் கொண்டிருந்தார்கள். அதைப்பார்த்ததும் எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது. எப்படியும் கால் கிடைக்கும் என்ற நம்பிக்கைப் பிறக்க காலுக்காக கால்கடுக்க நின்றேன். சொந்தக்காசில் ஒரு கஞ்சனை ஆட்டுக்கால் சூப் குடிக்கும் நிலைமைக்குத் தள்ளிய நோய், சும்மா இருந்தவனை ஆட்டுறைச்சிக் கடை வரிசையில் நிற்கவும் வைத்து விட்டதை நினைத்துப் பார்க்கிறேன். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு நோய் வந்தால் அது அவரோடு மட்டும் முடிவதல்ல அவரைச் சார்ந்தவர்களையன்றி அக்கம்பக்கத்தாரையும் இப்படி ஏதாவது ஒரு வகையில் பாதிப்பிற்கு உள்ளாக்கும் என்ற உண்மை புரிய வந்தது. . .
முன்னால் இருந்த இருவர் தமக்கானதை வாங்கிக் கொண்டு நகர முன் சென்ற மூன்றாமவர் "ஆட்டு்க்கால் இருக்கா" "இருக்கு.. எத்தனை வேண்டும்? " "எட்டு" கேட்டு வாங்கினார். அவர் வாங்கியதைப் பார்த்ததும் எனக்குச் சற்று கலக்கமானது. எட்டையும் வாங்கிவிட்டானே.. எனக்கு இல்லாமல் போகுமோ... எண்ணிப் பார்க்கையில் மனைவியின் முகமே வந்து போனது. கால் இல்லாமல் வெறுங்கையோடு போனால். " ஊரில் எல்லோருக்கும் கிடைக்கும் உங்களுக்குத்தான் கிடைக்காது. அவன் எட்டுக்காலையும் வாங்கிட்டுப் போறான் உங்களுக்கு ஒரு கால் கூடவா கிடைக்கல. நான் வேற என் புருசன் எப்படியாவது வாங்கிட்டு வந்திடுவாரு. வாங்காம வரமாட்டாருன்னு பெருமையா அவகிட்டச் சொல்லிட்டேன். இப்படி என் மொகத்தில கரிய பூசுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் நீயே வாங்கிக்கன்னு அவகிட்ட சொல்லியிருப்பேன்னு குதியா குதிப்பாள்.. கடவுளே எனக்கும் ரெண்டு கால் கிடைக்கக் கருணை செய்யப்பான்னு கடவுளை எதுக்குத்தான் வேண்டணும்னு ஒரு விவத்தை இல்லாமல் வேண்டிக்கிறேன். என் வேண்டுதலுக்கா கடவுள் என்ன ஒரு ஆட்டுக்கு எட்டுக்காலை வைத்து படைக்கப்போகிறா என்ன?
என் முறை வந்தபோது கேட்டேன். " கால் இல்லையே.. இருந்த எட்டுக் காலையும் இப்போதுதான் ஒருத்தர் வாங்கிட்டுப் போனார். இனி நாளைக்குத்தான்.. கால் வேணுமுன்னா முன்னாலேயே நீங்க சொல்லி வச்சிருக்கணும்" அவர் கால் இல்லை என்று காலை வாரியதைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பதைப்போல் அங்கே வெட்டிவைக்கப்பட்டிருந்த ஆட்டின் தலை ஒன்று பல்லைக்காட்டிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் " கால் இல்லையின்னா தலை கெடச்சாலும் வாங்கிட்டு வந்திடுங்க.. தலையும் நல்லதுன்னு சொன்னாங்க.." மனைவி சொன்னது ஞாபகத்திற்கு வரவே தலையின் விலை கேட்டேன். சினிமாவில் எதிரியைப் போட்டுத்தள்ள தலைக்கு இவ்வளவு என்று வில்லன் கேட்கும் விலையைப்போன்று இருந்தது அதன் விலை. அதிர்ச்சியை வெளியே காட்டாமல் வாங்கிச் சென்றேன். பார்த்தசாரதியின் மனைவி கொடுத்தப் பணத்திலும் பார்க்க சற்று அதிகம் என்றாலும் சுகமில்லாத ஆளுக்கு என்பதால் மேலதிகமாக சொந்தப் பணத்தில் கொஞ்சம் கொடுத்துத் தலையைக் கேட்டேன். நான் சிறிது யோசித்தால் அதையும் வாங்கிவிட அடுத்த ஆள் பின்னால் இருப்பதால் விலையைப் பார்க்காமல் தலையை வாங்கினேன். தலையையும் விட்டுவிட்டு வெறுங்கையோடு போனால் ' கெடச்சத விட்டுட்டு வந்திருக்கீங்களே.. உங்களுக்குத் தலையே இல்ல' என்று சொன்னாலும் சொல்வாள்.
கடையில் நாலு பேருக்குப் பல்லைக் காட்டிக் கொண்டிருந்த தலை இப்போது என் கையில். சேம்பு இலையில் சுற்றி அதை ஒரு பொலித்தீன் பையில் போட்டுக் கொடுத்திருந்தார் அலி நானா.
எப்போதும் வெற்றிலைக் குதப்பித் துப்பும் அலி நானா வாயின் சிவப்பைப்போல வெள்ளைப் பொலித்தீன் பையின் வழியே கசிந்த இரத்தம் வெளியே தெரிந்ததால் நான் கொண்டு சென்ற ஒரு பையில் போட்டு மறைத்து எடுத்துக் கொண்டு நடந்தேன். அந்நேரம் என்னைக் கேலி செய்வதுபோல் சற்றுத் தொலைவில் இருந்த உணவக வானொலி " அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அண்ணலே தந்துவைத்தான் ஆறுதலை... " பாடிக்கொண்டிருந்தது. அந்த 'ஆறுதலை' வர வேண்டிய இடத்தில் 'ஆட்டுத்தலை' வந்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கக் என எண்ணிக் கொண்டேன்.
இனி சந்தையில் வேறு சாமான்கள் வாங்க வேண்டும். தலையைக் கையில் வைத்துக்கொண்டு ஏனைய மறக்கறிகளை தரம்பார்த்து வாங்கச் சிரமமாக இருந்தது. கூடவே ஆட்டின் கொம்புவேறு காலில் குத்திக் காயப்படுத்தி வேதனை ஏற்படுத்தியது. வளர்த்து விற்றவனையும், வாங்கி வெட்டியவனையும் விட்டுவிட்டு இன்னொருத்தருக்காக வாங்கிப் போகும் என்னைக் காயப்படுத்தும் தலைக்கு என் மேல் என்ன கோபமோ தெரியவில்லை. ஒரு வேளை உன்ன மாதிரி ஆட்கள் வாங்கிச் சாப்பிடுவதால்தானே எங்கள் இனத்தைக் கொன்று இப்படிக் கூறுபோடுகிறார்கள் என்ற ஆதங்கமோ தெரியவில்லை. செத்தபின் இரவில் ஆவியாக வந்து பயங்காட்டும் மனிதர்களைப்போலன்றிச் செத்தத் தலையாக வந்தேனும் பலி வாங்குவேன் என்று சபதமிட்டிருந்ததோ தெரியவில்லை. வலது முழங்காலிலிற்குக் கீழ் சிறிதாய்க் கீறிவிட்டிருந்தது. தலையை ஒரு இடத்தில் வைத்துவிட்டுச் சாமான்களை வாங்குவதே சரி என்ற முடிவுடன் எங்கே வைக்கலாம் என்று பார்த்தேன். வீதியோரத்தில் ஒரு வழிப்பாதை என்ற விளம்பரம் தாங்கிய இரும்புத்தூண் கண்ணில் பட்டது. ஒரு அளவிற்கு உரமான அந்தத் தூணில் பின்புறமாக நீட்டிக்கொண்டிருந்த கம்பி ஒன்றில் தலையைத் தொங்கவிட்டேன்.தொங்கியது. குனிந்த தலை நிமிராத பருவப்பெண்போல் தரையைப் பார்க்கும் வண்ணம் தொங்கிய தலையை விட்டுவிட்டு அருகிலேயே தரையில் பொலித்தீன் சீட்டுகளை விரித்துக் காய்கறி விற்றுக் கொண்டிருந்தவர்களிடம் பேரம் பேசி வாங்கத் தொடங்கினேன்.
அதிகாலை வியாரபார பரபரப்பில் இருந்தவர்களிடம் அதிகம் பேச முடியாமல் கிடைத்தவற்றை வாங்கினேன். கடல் மட்டத்தில் விளையும் காய்கறிகளின் விலை கூட பிதுருதலாகல அளவு உயர்ந்திருந்தது. மாறாக நுவரெலிய மறக்கறிகளின் விலை கடல் மட்டமளவு தாழ்ந்துவிடவும் இல்லை. அவை அதைவிட மேல் என்று பெருமை கொள்வதுபோலிருந்தன. விலை அதிகம் என்பதால்.. வாங்காமல் இருக்க முடியுமா.. வாங்கினேன். வாங்கியவற்றிக்கு காசை நீட்டிக்கொண்டிருந்த வேளையில் கைப்பேசிச் சிணுங்கியது. அது மனைவியின் அழைப்பு. காதில் வைத்தேன் 'மறக்காமல் கிளிக்கு பழங்கள் வாங்கிட்டு வாங்க'.'சரி சரி' அழைப்பைத் துண்டித்துவிட்டு பழங்கள் எங்கு விற்கிறார்களெனப் பார்த்தேன். நான் நின்ற இடத்தில் பழங்கள் எதுவுமில்லை. வீதியின் எதிரே ஒரு சிலர் வண்டியில் வைத்து விற்றுக் கொண்டிருந்தார்கள். கூடவே சிலர் காய்கறி விற்பதையும் கண்டு வீதியின் அடுத்தப் பக்கம் சென்றேன். பழ வியாபாரிகளிடம் நிறைய பேர் வாங்கிக் கொண்டிருந்ததால் தாமதமாகியது. தாமதித்தாலும் நல்ல பழங்கள் இருந்ததால் நின்று வாங்கிக் கொண்டு அருகருகிருந்த வர்களிடம் தேவையான பொருட்களை வாங்கியதும் கையில் பாரம் கூடியது. இப்போதைக்கு இது போதும். அதிகம் வாங்கி வைத்தாலும் இந்த காலநிலைக்கு சீக்கிரம் பழுதாகிவிடுகின்றன. இனி வீடு திரும்பலாம் என்ற முடிவுடன் எதிர் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தினேன். ஏறினேன். போகுமிடத்தைக் கூறினேன். ஆட்டோ விரையத் தொடங்கியது. ஒரு இரு நூறு மீற்றர் தூரம் கடந்திருக்கும் பின்னால் அதிவிரைவாய் வந்து ஆட்டோவை உரசியும் உரசாத்துமாக மிக அருகில் அதிக இரைச்சலுடன் ஒரு மோட்டார் சைக்கிள் கடந்து போனது. ஆட்டோவில் இலேசாக உரசியிருந்தாலும் ஒரு பெரிய விபத்து நடந்திருக்கும். ஒரு கணம் நானும் ஆட்டோ சாரதியும் அதிர்ந்தே போனோம். அதிர்ச்சியில் ஆட்டோ சாரதியின் வாயிலிருந்து இதுவரைக் கேட்டிராத கெட்ட வார்த்தைகள் வந்து விழுந்தன.அதற்குள் மோட்டார் வண்டியில் விரைந்த அந்த பதின்ம வயதுக்காரர்கள் மின்னலாய் மறைந்து போனார்கள். ஆத்திரம் தீராமல் திட்டிக் கொண்டிருந்த சாரதியை 'சரி விடுப்பா' என்றேன். ' இல்ல சேர். தலையில் ஹெல்மெட் கூட இல்ல. நாதாரிகள். எங்காவது இடிபட்டா எலும்பும் மிஞ்சாது.' 'அபசகுணமா பேசாதப்பா.. வளர்ற பிள்ளைங்க' 'பேச வைக்கிறாய்ங்க சார் கொஞ்சம் லேசா பட்டிருந்தாக்கூட நம்ம தலை உருண்டிருக்குமே' அவன் நம்ம தலை என்றதும் எனக்கு சட்டென தூணில் தொங்கவிட்டத் தலையின் ஞாபகம் வந்தது. ஐய்யய்யோ.. தலையை மறந்திட்டோமே.. ' வண்டிய மறுபடியும் சந்தைக்குத் திருப்புப்பா.' பதற்றத்துடன் சற்றே உரத்தக் குரலில் கூறினேன் 'ஏன் சார் இவ்வளவு சத்தம்? ஏதாச்சும் தல போற காரியமா?' 'தல போற காரியம்தான். கொஞ்சம் சீக்கிரம் போப்பா..' என் பதற்றத்தைக் கவனித்த ஆட்டோக்காரர் எதுவும் பேசாமல் அடுத்த சந்தியில் வண்டியைத் திருப்பினார். ஆட்டோ சந்தையை நோக்கி விரைய எனது சிந்தை தலையை நோக்கி விரைந்தது. தலை அந்த இடத்திலேயே இருக்குமா? இல்லாதிருக்குமா? இல்லாதிருந்து தலையில்லாத ஆள் என்ற பேரை வாங்கிக் கொடுக்குமா என்ற பலவாறான கேள்விகள் என்னுள். சும்மாவே தாண்டவம் ஆடுவாள் கையில் வாங்கியத் தலையைக் கவனமில்லாமல் கைவிட்டு வந்ததறிந்தால் இன்றைக்கு ருத்ர தாண்டவம்தான். குழம்பி முடிவதற்குள் ஆட்டோ சந்தையை அடைந்தது.
ஆட்டோவை சற்று நிற்கும்படிக் கூறிவிட்டு ஓடிச் சென்று தலையைத் தொங்க விட்ட இரும்புத் தூணை நோக்கி ஓடினேன். அங்கே எனக்காக காத்திருந்தது ஏமாற்றம். தலையைக் காணவில்லை. அதிர்ச்சியில் நாலாபுறமும் சுற்றிப்பார்த்தேன். எவருடைய கையிலும் தலையிருப்பதாக தெரியவில்லை. எவன் கையில் கிடைத்ததோ தெரியவில்லை. இந்த ஞாயிறு என் செலவில் அவர்கள் வீட்டில் தலைக்கறி. சரி போகட்டும் என்று ஆட்டோவில் ஏறினேன். எப்படியும் அவள் திட்டுவாள். திட்டட்டும். மழைக்குப் பயந்து பூமியை விட்டு ஓடியாப் போகிறார்கள். என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு சரி போப்பா என்கிறேன். அந்நேரம் 'ஐயா..' என்றொரு குரல். திரும்பிப் பார்த்தேன் காலையில் நான் யாசகம் செய்த அதே பிச்சைக்காரி நின்றிருந்தாள். " அதான் காலையிலே சில்லறை போட்டேனே மறுபடியும் என்ன?" " ஐயா நான் அதுக்கு வரலீங்க." " அப்புறம்.." "காலையில நீங்க அந்தத் தூண்ல தொங்கப்போட்ட தலைய கொடுக்க வந்தேங்க." " என்ன தலையா? " ஆச்சரியத்தோடும் மகிழ்ச்சியோடும் கேட்கிறேன். " ஆமாங்கய்யா.. நீங்க போனதும் அருகே இருந்த நாய் ஒன்னு மோப்பம் பிடிச்சி அத தூக்கப் பாத்துங்க அதுக்கிட்ட இருந்து காப்பாத்தி எடுத்து வச்சிருந்தேங்க.." தலையை நீட்டினாள். தலையைப் பார்த்தும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. " நன்றிம்மா நன்றி" என்றவாறு அவளுக்கு ஏதாச்சும் கொடுக்க வேண்டும் என்று சட்டைப் பையைத் தடவுகிறேன்.அதற்குள் என்னுடைய செயலைப் பார்த்த அவள் "அதெல்லாம் ஒன்றும் வேணாங்க ஐயா.. " என்று நகர்ந்துவிட்டாள் " இது என்னாலான ஒரு சின்ன உதவிங்க உதவிக்கு பணத்தைக் கொடுத்து உதாசீனப்படுத்திவிடாதீங்க" என்பதுபோலான அவளது செயல் அவளை ஒரு பிச்சைக்காரியாய்ப் பார்க்கத் தோன்றவில்லை. எது எப்படியோ நான் அவளுக்கு வழமையாய் இடும் தர்மம் இன்று நான் வாங்கிய ஆட்டுத்தலையைக் காப்பாற்றிக் கொடுத்து " தர்மம் தலை காக்கும் " பொன்மொழிக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (16-Jul-24, 1:52 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 143

மேலே