போய் கொண்டே இருந்தது

போய் கொண்டே இருந்தது.....!
22 / 08 /2024.

ஏன் இந்த பிறவி?
எதற்காக இந்த பிறவி?
பிறப்பின் ரகசியம்தான் என்ன?
விடை சொல்லு என்று கேட்டேன்.
எழுந்து நடந்து விடு...
அதுதான் உன்பிறப்பின் சாதனை
என்றொரு அசரீரி சொன்னது.
எழுந்தேன்...நடந்தேன்...
குழப்பம் தீரவில்லை
ஏனென்னை சோதிக்கிறாய்?
நடந்துவிட்டேன். இன்னும் என்ன?
இல்லையில்லை...வரும் சோதனைகள்
வென்றிட நீ பயிலவேண்டும்
என்றது சொன்னது.
பயின்றேன்..வெற்றியும்..பதக்கங்களும்
பல வென்றேன்.
படிப்பு மட்டும் போதுமா?
உழைக்க வேண்டாமா?
என உந்தி தள்ளியது.
மாடு போல் உழைத்தேன்.
மாலைகளும்...பதவிகளும்..
பேரும்...புகழும்
வென்று அடைந்தேன்.
என் கேள்விக்கு மட்டும்
விடை கிடைக்காமல்
விழி பிதுங்கி நின்றேன்.
மரம்...
மண்ணில் முளைத்து
விண்முட்ட வளர்ந்து
பூத்து..காய்த்து...கனிந்து...
பின் இலையெல்லாம் உதிர்ந்து
பட்டமரமாய் விழுந்து
மண்ணிலேயே
உரமாக்கிப் போய்விடும்
இயற்கையின் சுழற்சி
கண்முன்னே விரிந்தது.
புதிரின் விடையும் புரிந்தது.
பிறந்து..வளர்ந்து...வாழ்ந்து..
கிளைபோல் சந்ததிகள் வளர்த்து
தளர்ந்து..தள்ளாடி...தடுமாறி..
இறந்து உன் சந்ததிக்கு
எருவாய் போவதுதான் பிறப்பின் பயன்.
மரமாய் வளர்ந்து நிழலாய்
கிளை பரப்பி சந்ததிக்கு பின்
உரமாய் போவதுதான்
அந்த பிரம்ம ரகசியம்
என்று அறிந்து கொண்டேன்.
இயற்கை அதை சுட்டிக்காட்டி
தன் சுழற்சியை நிறுத்தாமல்
சுழன்று போய் கொண்டே இருந்தது.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (22-Aug-24, 10:03 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 44

மேலே