திரைக்கு பின்னால் ......!!!!!!!!!!
உன் காதலியின் கைகோர்த்து களிப்புடன் நேரம் கழிக்க
உனக்கு ஒரு ''காதல்'' மிகுந்த திரைப்படம் வேண்டும்
விழித்துக்கொள் , உன்னுடனே இருந்து உன் சமூகம் உன்னை
ஏய்த்து பிழைக்கிறது என தோலுரிக்க ஒரு ''அந்நியன் '' வேண்டும்
உன் தோல்விகளிலிருந்து மீளச்செய்ய அவ்வபொழுது
''ஒவ்வொரு பூக்களுமே '' ஒலிக்க வேண்டும்
உன் தப்பனின் வலியை உணர உனக்கு ஒரு
''தவமாய் தவமிருந்து '' வேண்டும்
உன் குழந்தைக்கு நல்ல சிந்தனை வளர
''பசங்க '' எனும் திரைக்காவியம் வேண்டும்
உன் அலைபேசிக்கு அழைப்பவர்கள் கேட்டு ரசிக்க
''விழி மூடி யோசித்தால் '' என கார்த்திக் குரலில் கிறங்க வேண்டும்
உன் மகளின் வாழ்வியலை நீ புரிந்துகொள்ள ஒரு
''அபியும் நானும் '' வேண்டும்
உன் வெளியுலக கோபம் குறைந்து வீட்டில் சிர்த்து மகிழ
ஆதித்தியா வில் சந்தானம் யாரையாவது கலைக்க வேண்டும்
வடிவேலு உதை வாங்க வேண்டும்
தாய்நில பிரச்சனையோ , நீர் அணை பிரச்சனையோ
உன் குரலுக்கு வலிமை சேர்க்க திரையுலகம் திரள வேண்டும்
அதனினும் கேவலமாய் உன்னை ஒட்டு போட வைக்க
ஒரு சினிமாக்காரன் பேச வேண்டும்
இரக்கமில்லா என் சமுதாயமே......!!!!!!!!
ஒரு படைப்பாளியாய் நான் உன்னிடம் காட்டும் முகம் இது ,
ஆனால் நீ என்னிடம் காட்டும் முகமோ வேறு ....
வாடகைக்கு குடியிருக்க வீடு தர மறுக்கிறாய்
பசிக்கிறதென கடன் கேட்டால் திரும்பி கொள்கிறாய்
நேரில் பார்க்கும் நடிகனிடம் கையொப்பம் வாங்கும் நீ
என் எதிர்கால வெற்றியின் மீது சந்தேகம் எழுப்புகிறாய்
அரைகுறை ஆடைகளில் திரையில்ஆடுபவளை ரசித்துவிட்டு
நாட்டை சினிமா கெடுக்கிறது என்கிறாய்
சினிமாவில் பிரியும் காதலுக்கு கண்ணீர் விடும் நீ
என் காதலை சொன்னால் ஏற்க மறுக்கிறாய்
நட்சத்திரங்களின் உடைகளை போலவே மாதிரிகளை தேடி அலைந்து
நடிகைகளின் கிசுகிசு அறிய அலைபேசியில் அழைக்கிறாய்
கோடிகளில் புழங்க பேராசைப்படும் சினிமா பைத்தியமென
முன்னே போக விட்டு பின்னால் உரைக்கிறாய்
உன் இத்தனை ஏச்சுகளையும்,புறக்கணிப்பையும்
நிராகரிப்பையும் கடினமாக ஏற்றுக்கொண்டு
என் ஊரை மறந்து, உறவை தொலைத்து
உடல் வலித்து ,தேகம் கறுத்து
பருவம் தொலைத்து ,கனவை வளர்த்து
இரவு பகலாய் ஓடி ஓடி உழைத்து
உச்சத்தில் ஒரு நாள் இயக்குனராய் உயர்ந்து நின்றால்
ஒற்றை வரியில் முடித்து கொள்கிறாய்
அடித்ததா அதிர்ஷ்டம் இவனுக்கு என்று ...,
நேற்று எங்கோ இருந்தேன்
இன்று இங்கே இருக்கிறேன்
நாளை எங்கும் இருப்பேன்
என்னை தவிர்த்து இனி ஒருபோதும்
உன் உலகம் சுவாரஸ்யமாய் இயங்காது
என்பதை மனதில் புதைத்து வை ....
மனிதாபிமானமற்ற என் சமுதாயமே ,
உன் நாவினால் என்னை தரம் தாழ்த்தி
உன் உளறல்களுக்காக என்னை பதில் சொல்ல வைத்து
என் காலத்தை பறிக்க துடிக்காதே, ஏனெனில்
நான் ஒரு சகாப்தம் .....!!!!!!!!!!