ஒரு நண்பனுக்கு திருமண வாழ்த்து....

நமது உறவுக்கு Anniversary கிடையாது
ஏனெனில்,
நாம் பழகத் துவங்கிய நாள் நாமறியோம்
நம்மையே அறியாத வயதிலல்லவா நாம் நண்பரானோம்
பள்ளியறையில்
பக்கத்தில் அமர்ந்தோம்
பாதை நெடுகிலும்
பாரம் சுமந்தோம்
சுடும் வெயிலிலும்
கொட்டும் மழையிலும்
கூடவே இருந்தோம்
மாலை முழுதும்
மைதானத்தில் இருந்தோம்
விடுமுறை நாட்களை
விளையாட்டில் விமர்சையாய் கழித்தோம்
உணவு, தாகம் மறந்தோம்
அடியும் உதையும் சமமாய் பகிர்ந்தோம்

இரவின் இருட்டில்
நிலவின் வெளிச்சத்தில்
நம் தாய்மாரின்
தாலாட்டோடே
கைகோர்த்தவாறே தூங்கினோம்
ஆழ்ந்த தூக்கத்தில் தான் என்னையும் உன்னையும்
நமது வீட்டுக்கு எடுத்துச்சென்றார்களாம்
நம் பெற்றோர்
நினைக்கும் போதே இனிக்கிறது அந்த நாட்களை....

இன்று உனக்கு திருமணமாம்
மின்னஞ்சல் அனுப்பியிருந்தாய்....
நிழலாடுகின்றன அந்த நினைவுகள் என் கண்முன்னே
காகிதங்களும் நனைந்துவிடுகின்றன‌
நமது சோகக்கதை கேட்டு

உன்னோடு சேர்ந்து உனக்காக
ஆடைகள் வாங்கியிருக்க வேண்டும்
உன்னோடே நடந்து அழைப்பிதழ் கொடுத்திருக்க வேண்டும்
மணமகன் தோழனாகவல்லவா
நான் தோரணத்தில் நின்றிருக்க வேண்டும்
என் தோல் மேல் சுமந்து
நானல்லவா உன் திருமணத்தை முன்னின்று நடாத்தியிருக்க வேண்டும்...
கேவலம்...
என் நிலமையோ இப்படியாகிவிட்டதே....
உனது திருமண புகைப்படத்துக்கு
ஒரு Like இட்டு Congratulation என்று
அதன் கீழ் எழுதி விடுகிறேன்....

என் மரண புகைப்படங்களும் இப்படி
பிரசுரிக்கின்ற நாள் வரும்
கண்ணீர் அஞ்சலி என்று எழுத மறந்தாலும்
தயவு செய்து
என்னை மன்னித்துவிட்டேன் என்று மட்டும் எழுதிவிடு.....

பதினாறும் பெற்று நூறாண்டு வாழ என் வாழ்த்துக்கள் என் தோழனே!!!

எழுதியவர் : றிகாஸ் மர்ஸூக் (5-May-12, 7:12 pm)
பார்வை : 895

மேலே