பழையன திருத்தி புதிதாய் புகுவோம்
இதயத்துள் எழுச்சி படர்த்திய
கடந்த வாழ்வே
மீண்டும் என்னை அணைத்துக் கொள். . .
அன்றைக்கு என்னை நீ விட்டுச்
சென்ற பின்
இன்றுவரை நான் ஏதிலி ,. . . !
எங்கு சென்றாய்
அருகில் வா,
களமாட உயிர் வைத்து திடமாக உள்ளேன்,
தாயே!
உன் செவிகளையேனும் என் பக்கம் திருப்பு
நீயில்லாத
இவ்விடைவெளியில்
எத்தனை அவப் பெயர்கள்
நான் பெற்றுவிட்டேனென சொல்லுகிறேன்!
உரிமைக்காய்
ஆயுதம் அளைந்த கைகள்
"அல்வா" தின்றபடி அலைவது கேவலம் . . .
எதைக் கேட்டேன்
என்னூர்
என் வளம்
என்னை நானே ஆளும்
உரிமை !
வாயால் கேட்டு வலித்து
வாளால் கேட்டேன்.
வன்முறையென உலகம் சொன்னது. . .
பரவாயில்லை !
எமக்கு முன் வரலாறு உள்ளது
வன்முறையாய்
உலகம் சொன்ன விடுதலைகள் .
என் மேனியெங்கும் விடுதலைக் கனல் மூட்டிய
நீயேன்!
கடற்கரையில் என்னை கைவிட்டுச் சென்றாய்?
சோறின்றியும் சிரித்தபடி
சில நாட்கள்
நீரின்றியும் களத்திலாடியும்
மகிழ்வோடு
என்னை நீ கைவிடாமல் வைத்திருந்தாயே
அன்று
மட்டும் ஏன் விட்டுச் சென்றாய் ஏதிலியாய் ?
இதோ பார்,
விழி திற,
உன் பிள்ளையின் முகம் பார்
மிளாசி எரியும் தீயின் வெக்கை
பகை மீதான கோபத்தின் அடையாளம். . .
இனியும் காலம் நகர்த்துதல்
களவு போகும்,
எம் வாழ்வுக்கு,
கதவு திறத்தலாகிவிடும்.
விரைவில் தாழ்ப்பாளிடல் வேண்டும்!
"பழையன திருத்தி புதிதாய் புகுவோம்"
எவர் கையிலும் இனி ஆயுதம் வேண்டாம்,
எல்லோர் மேனியும் ஆயுதம் ஆகட்டும் . . .
வீழ்வதை விட
மீள,
எழாமல் இருப்பது தான்
இழிவு,
இனியும் பொறுத்தல் இரட்டை அழிவு !
வா தாயே வா . .
வந்து அழைத்துச் செல் செருக்களம்
வா தாயே மீண்டும் வா !