பெண்ணே .....!
பெண்ணென்றால்
பேறென்று
பேரின்பன் அனுப்பி வைத்தான் !
கானலென இன்பத்தையும்
அவளுக்கென்றே
படைத்துவைத்தான்!
பூப்போலும் மென்மையதாய்
அவளுள்ளம்
செய்துவைத்தான்!
புயல் போலும் வேகத்தை
அவள் செயலில்
தந்து வைத்தான் !
பிறர் தேடும் இன்பத்தை
அவளுள்ளே
புதைத்து வைத்தான்!
அவள் தேடும் இன்பத்தை
எங்கெங்கோ
மறைத்து வைத்தான் !
வாள் விடவும் கூர்மையதாய்
அவளறிவை
செதுக்கி வைத்தான்!
வான் தனையே வெல்லும் துணிவை
அவள் நெஞ்சில்
பதித்து வைத்தான் !
காப்பியத்தில் முதன்மையாய்
அவளைத்தான்
சிறக்க வைத்தான் !
அவள் கார் கூந்தல் முடிப்பினிலே
உலகையே
கோர்த்து வைத்தான் !
உயிர் தாங்கும் கருவறையை
அவளுள்ளே
தங்க வைத்தான் !
உயிர் விடவும் மேன்மையதாய்
அவள் கற்பை
மிளிர வைத்தான் !
அவள் தானே உலகென்று
மானிடரை
உணர வைத்தான் !
தன்னிலும் அவள் உயர்வென்று
தானும் நெஞ்சம்
தெளிந்து கொண்டான் !
சர்வமும் பெண்ணென்று
சங்கரனும் தெளிந்த பின்னே
தன் பெருமை அறிந்துகொள்ள
பேதை மட்டும் மடைமை கொண்டாள் !
பெண்ணே உன்னுள்ளே
சகலமும் பொதிந்திருக்க
முயலாமை கைக்கொண்டு
முடங்கி நீ கிடப்பதேனோ ???