சென்னை, ஏப். 16– மதுரையைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் ஜோசப் (வயது 49). லாரி பாடி கட்டும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கம்பெனிக்கு பணம் தர வேண்டிய ஒருவரிடம் பணம் வாங்குவதற்காக நேற்று முன்தினம் சென்னை சேத்துப்பட்டிற்கு வந்தார். அங்கு அவர் எதிர்பார்த்த பணம் கிடைக்கவில்லை. ஏமாற்றத்துடன் மதுரை செல்ல முடிவு செய்தார். தாம்பரம் சென்று அங்கிருந்து பஸ் மூலம் மதுரை செல்ல திட்டமிட்ட அவர் மின்சார ரெயிலில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கினார். 1–வது பிளாட்பாரம் ஓரமாக நடந்து சென்ற ஆல்பர்ட் ஜோசப் திடீரென தடுமாறி தண்டவாளத்தில் விழுந்தார். அப்போது திருமால்பூரில் இருந்து கடற்கரை நோக்கி மின்சார ரெயில் ஒன்று தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு நுழைந்தது. இதை சற்று எதிர்பார்க்காத ஆல்பர்ட் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். இதை பார்த்த அங்கு இருந்த பயணிகள் அலறினார்கள். ‘‘ரெயிலை நிறுத்துங்கள்’’ என்று கூச்சல் போட்டனர். ஆனால் ரெயிலை நிறுத்த முடியவில்லை. அதன் வேகத்தை மட்டும் டிரைவர் குறைத்தார். ரெயில் அவர் அருகில் நெருங்கும்போது பயணிகள் ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்று அதிர்ச்சியில் உறைந்து இருந்தனர். அப்போது சமயோகிதமாக ஆல்பர்ட் தைரியமாக முடிவு எடுத்தார். தண்டவாளத்திற்கு நடுவில் தரைமட்டமாக படுத்து கொண்டார். ரெயில் என்ஜின் அவரை கடந்து சென்று நின்றது. ஒரு சில பெட்டிகளும் அவரை கடந்து நின்றன. உடனே ரெயிலில் பயணம் செய்த பயணிகளும் அங்கு கூடியிருந்தவர்களும் கீழே இறங்கி ஆல்பர்ட் என்ன ஆனார் என்று பார்த்தனர். தண்டவாளத்தில் நடுவில் பெட்டிக்கு அடியில் படுத்து கிடந்த ஆல்பர்ட் எனக்கு ஒன்றும் ஆகவில்லை. நன்றாக இருக்கிறேன். என்னை வெளியே தூக்குங்கள் என்றும் மட்டும் குரல் கொடுத்தார். இதையடுத்து ரெயில்வே ஊழியர்களும், பயணிகளும் அவரை மீட்டனர். அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவரது உடலில் சிறு காயம் கூட ஏற்படாமல் இருந்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். ஆல்பர்ட்டை உடனடியாக அங்குள்ள ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனையில் அழைத்து சென்று முதலுதவி அளித்து மதுரைக்கு அனுப்பி வைத்தனர். தண்டவாளத்திற்கு நடுவில் படுத்து உயிர் தப்பிய ஆல்பர்ட் மறுபிறவி எடுத்ததாக கருதி பயணத்தை தொடர்ந்தார். அவர் உயிர் பிழைக்க வேண்டும். அவருக்கு எதுவும் ஆகக்கூடாது என்று அபாயக்குரல் எழுப்பியதன் விளைவாக டிரைவர், ரெயிலின் வேகத்தை உடனடியாக குறைத்தார். இதனால் அவர் சாதுர்யமாக உயிர் தப்ப முடிந்தது.


வழி : vinayaka கருத்துகள் : 0 பார்வைகள் : 1828
1
Close (X)




புதிதாக இணைந்தவர்

மேலே