உழவும், உழவனும் மரணத்தின் விளிம்பிலே (பொங்கல் கவிதைப் போட்டி)

வயலெங்கே.? வரப்பெங்கே.?
வயலண்டிய மக்கள் எங்கே?
பயிரெங்கே.? பாய்ந்த நதியெங்கே.?
பண்ணயம் செய்த பூமியெங்கே.?
---------------------------------------------------------
உழவெங்கே.? உழவரெங்கே.?
ஊரைவிட்டுப் போனதெங்கே.?
ஏரெங்கே.?ஏருழுத எருதுகள் எங்கே.?
ஏற்ற உரமான சாணமெங்கே.?
----------------------------------------------------------
நாற்று நட்ட நங்கைகள் எங்கே.?
பாட்டு பாடிய பாட்டிகள் எங்கே.?
கதிரடித்த காளைகள் எங்கே.?
கழனிச் சிற்பியாம் தாத்தாக்கள் எங்கே.?
---------------------------------------------------------------
கட்டை வண்டிச் சலங்கைச் சத்தமெங்கே.?
கட்டிச்சோறும் கம்மங்கூழுமெங்கே.?
நெல்லைக் கொத்திய சிட்டுக் குருவியெங்கே.?
கொள்ளை கொள்ளும் பச்சைப் பசுமையெங்கே.?
------------------------------------------------------------------------
முப்போகம் கண்ட பொற்காலமெங்கே.?
ஒரு போகத்துக்கே உயிர்போகும் நிலையிங்கே.!
பஞ்சம் விரட்டிய பசுமை புரட்சியெங்கே.?
நஞ்சையுண்டு மாண்டுபோகும் மிரட்சியிங்கே.!
----------------------------------------------------------------------
ஆடிப் பட்டம் தேடி விதைத்த காலமெங்கே.?
வட்டிக் கடனில் மூழ்கிப் போகும் அவலமிங்கே.!
வாடிக் கிடக்கும் உழவர் வாட்டம் தீருவதெங்கே.?
வாழ்வு தரும் உழவும் உழவரும் செழிப்பதெங்கே.?

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (7-Jan-13, 8:06 am)
பார்வை : 251

மேலே