வீட்டின் வெளிச்சங்கள்

விண்ணில் தெரிய வேண்டும் -எம்
வீட்டின் வெளிச்சங்கள்
மண்ணில் மறையவேண்டும் -இம்
மாந்தரின் மடமைகள்.

வார்த்தையில் மிளிர வேண்டும் -நல்
வாய்மையும் நேர்மையும்
நடத்தையில் காணவேண்டும் -எம்
நம்பிக்கையும் உயர் குணமும்.

என்றும் எப்போதும் - வாழ்வில்
எளிமையைப் பேணவேண்டும்
ஏழையின் நெஞ்சில் - காணும்
ஏக்கத்தை மறைக்க வேண்டும்.

சொல்லும் செயலும் - ஒன்றாய்
சுடரொளி வீச வேண்டும்
பூமியின் மைந்தரெல்லாம் -எம்மைப்
போற்றியே தொடர வேண்டும்.

விண்ணில் தெரிய வேண்டும் -எம்
வீட்டின் வெளிச்சங்கள் ..
வானவர் அறிந்து கொண்டு -எம்
வாசலுக்குள் வரவேண்டும் !

எழுதியவர் : ஏசீயெம் பதுர்தீன் (28-Feb-13, 12:32 pm)
பார்வை : 112

மேலே