ஊமைப்பெண் நானடி

ஒற்றை நாள் ஆயுளோடு
பறக்கின்ற கனவுகளும்
சிறகொடிந்து துடித்தால்
என்ன செய்வேன் இவள் ??

கிழிக்கப்பட்ட நாட்காட்டித் தாள்களாய்
என் வாழ்நாட்கள் இதுவரை
வீணாய்ப் போகவே தேய்கிறேன்

பேரம்பேசும் சந்தோசங்களுக்கு
என்ன விலை கொடுப்பேன்?
மடித்துவைத்த கைக்குட்டையாய்
என் வாழ்வு இதிலே
நெளிவு சுழிவுகளை
மறைக்கவே மிடுக்கானேன்

குப்பையிலும் நான் இல்லை
கோபுரமும் எனதில்லை
கட்டித்தங்க குணமில்லை
வெட்கங்கெட்ட நடத்தையும்
என்னோடு இல்லை

ஒன்றே பெரும் தவறாய்
இன்றுவரை கொண்டவள்
எனினும் அத்தவறுக்கும்
பழியேற்ற பாவி இவள்
பெண்ணென பிறந்துவிட்ட பாவம்
படைத்தவன் தந்துவிட்டான் சாபம்

சமுதாய போக்கு
மனம் முறியச் செய்தது
வீட்டுக்குள்ளேவும் கைதியாக
சிறைபட்ட செய்தது

பரவிக்கிடக்கும் காற்றும்
எனக்குள் ஸ்பரிசிக்க
தலைகுனிந்தேன் ஊமையாய்
சுதந்திரம் இழந்தவளாய்

இருட்டறை பார்க்காத
காயங்கள் என்னுடையது
விம்மி அழும் எனக்கு
அதுவே ஆறுதலும் கூட

தொடங்கவே முடியாத
நிகழ்ச்சியின் பார்வையாளராய்
எதுக்காக காத்திருக்கிறேன்
யாருக்காக காத்திருக்கிறேன் ??

கண்ணீரால் வெளுக்கப்பட்டு
ஒவ்வொரு முறையும்
புதியதாய் கண்சிமிட்டும்
என்னுள்ளே கிடக்கும்
கசக்கி எறியப்பட்ட உறுதிகள்

தினசரி செய்தித் தாள்களில்
ஓரங்கட்டப்பட்ட துணுக்குகளாய்
என்னையும் கவனியுங்களேன்
என்றே கெஞ்சுகிறேன் மௌனமாய்
மீண்டும் கெஞ்சுகிறேன்
என்னையும் கவனியுங்கள் !

"முதலாமாண்டு கல்லூரி கவிதைப் போட்டியில் பரிசுபெற்ற கவிதை என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.நன்றி."

எழுதியவர் : Harshavardini (18-May-13, 9:36 pm)
பார்வை : 143

மேலே